போனது 2008! வருகிறது 2009!

போனது 2008!

ரோலர்கோஸ்டர் பயணம் போல உயரங்களையும் துயரங்களையும் கண்ட ஆண்டு!

அமெரிக்காவில் 4 மாதங்களைக் கொண்டாடிய ஆண்டு!

வந்த அடுத்த நாளே, உலக சந்தையில் நடந்த அடிபிடி சண்டையில் நெறைய பேர் வேலை வாய்ப்பை இழந்த ஆண்டு!

இருக்கும் சிலரும் அடுத்த பலிகடா நானாக இருக்ககூடாது என நாத்திக முகமூடியைக் கழற்றி பிள்ளையாரையும், அல்லாவையும், பரமபிதாவையும் வணங்கிய ஆண்டு!

வால்ஸ்ட்ரீட் வாரிசுருட்டிக் கொண்டு மண்ணில் புதைந்த ஆண்டு!

இந்தியாவில் தீவிரவாதிகள் வெடிகுண்டு விளையாட்டு ஆடிய ஆண்டு!

மெஸ்ஸில் ஒரு இட்லி 5 ரூபாய் ஆன ஆண்டு!

தமிழ்நாட்டை இருளில் மூழ்க செய்து சாதனை படைத்த அரசியல்வாதிகளின் ஆண்டு!

கத்திபாராவிலும் மீனம்பாக்கத்திலும் பறக்கும் பாலங்கள் வந்த ஆண்டு!

சுப்ரமணியபுரமும், தசாவதாரமும் தமிழ்சினிமாவைத் தூக்கி நிறுத்திய‌ ஆண்டு!

தமிழகத்தை நிஷாவும் உஷாவும் புரட்டிபோட்ட ஆண்டு!

"Change has come" ஒபாமா வந்த ஆண்டு!

"Shoe has come" புஷ் ஸ்பெஷல் மரியாதை வாங்கிய ஆண்டு!

தோனியால் வெற்றி சாம்ராட்டில் நடைபோடும் ஆண்டு!

கங்குலிக்கு கல்தாவும், கும்பிளேவுக்கு கும்பிடும் போட்டு வீட்டுக்கு அனுப்பிய ஆண்டு!

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு அடிக்கப்பட்ட ஆண்டு!

முக்கியமாக புலம்பல்களை பொக்கிஷமாக சேமிக்க பிளாக் எழுத ஆரம்பித்த ஆண்டு!

வருகிறது 2009!

ப்ரோமஷன் கிடைக்க ஆசைப்படும் ஆண்டு!

தம்பிக்கு சீக்கிரம் வேலை கிடைக்க ஆசைப்படும் ஆண்டு!

அம்மா இந்த வருடமும் கல்யாணத்தைப் பற்றி பேசக்கூடாது என ஆசைப்படும் ஆண்டு!

(உலகசந்தை சண்டை ஓய்ந்து) மார்க்கெட் ஸ்டெடியாகி மீண்டும் விமானத்தில் பறக்க ஆசைப்படும் ஆண்டு!

'நான் கடவுள்' அழாமல் பார்க்க ஆசைப்படும் ஆண்டு!

கிரிக்கெட்டில் நம்பர் ஒன், அசைக்கமுடியாத அணியாக ஆசைப்படும் ஆண்டு!

ரிக்கி பாண்டிங் சீக்கிரம் ரிட்டையர்டு ஆகி சச்சின் சாதனையைக் காப்பாற்ற ஆசைப்படும் ஆண்டு!

இலங்கையில் அமைதியைக் காண‌ ஆசைப்படும் ஆண்டு!

தீவிரவாதிகளை தெருவில் நிறுத்தி கல்லால் அடிக்க ஆசைப்படும் ஆண்டு!

திறமையான மத்திய நிதி, உள்துறை அமைச்சர்களைப் பார்க்க ஆசைப்படும் ஆண்டு!

மெஸ்ஸில் மீண்டும் ஒரு இட்லி 3 ரூபாய்க்கு சாப்பிட ஆசைப்படும் ஆண்டு!

பந்த், உண்ணாவிரதம் என எதுவும் நடக்கக்கூடாது என ஆசைப்படும் ஆண்டு!

சிம்பு, பேரரசுக்களிடமிருந்து தமிழ்சினிமாவை (யாராவது) காப்பாற்ற ஆசைப்படும் ஆண்டு!

விகடன் பழைய ஃபார்முக்கு வர ஆசைப்படும் ஆண்டு!

பிரபல பதிவர் என்ற 'நல்ல பேர்' வாங்க ஆசைப்படும் ஆண்டு!

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள ஆசைப்படும் ஆண்டு!

சாருநிவேதிதா புதினங்கள் விளங்க பேராசைப்படும் ஆண்டு!

மொத்தமாக குண்டு வெடிப்பு எதுவும் இல்லாத இந்தியாவில் வாழ ஆசைப்படும் ஆண்டு!

வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - III

மாலை வேளை. மேற்கே, சூரியன் பகலெல்லாம் சுட்ட களைப்பில் மேகத்தின் பின் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தார். ஒழுங்காகவும் அழகாகவும் வெட்டப்பட்ட புல்வெளி. அங்கொன்று இங்கொன்றுமாக நாலைந்து பேர் அந்த புல்வெளியில் இருந்தனர். ஒருவர் கண்களைத் திறந்து கொண்டு தியானம் பண்ணுவதுபோல் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். தாடி வைத்த ஒருவர் காதல் தோல்வி பாடல்களை சத்தமாக பாடிக் கொண்டுருந்தார், கண்களில் கண்ணீர் தாடை வரை ரோடு போட்டுக் கொண்டிருந்தது. அங்கு ஒருவர் தி.மு.க என்றும் இன்னொருவர் இல்லை அ.தி.மு.க தான் தேர்தலில் வெற்றி பெறும் சீரியஸாக வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். கண நேரத்தில் அவர் அடித்துக் கொண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

இந்த சண்டையை வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த போது அவள் தான் உட்கார்ந்திருக்கும் அதே பெஞ்ச்சில் இன்னொரு இளைஞனும் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அழகாக ஹேர்கட் பண்ணி ரொம்ப ஸ்மார்ட்டாக அவன் இருந்தான். அவள் பார்த்த அதே விநாடியில் அவனும் பார்த்து விட்டதால் இருவரும் சம்பிரதாயத்திற்கு சிரித்துக் கொண்டனர். பத்து நிமிட இடைவேளைக்கு பிறகு அவன் ஆரம்பித்தான், "ஹாய், என் பேரு வினோத், உங்க பேரு என்ன?" அதற்கு அவள், "என் பேர் கீர்த்தி!" என்று சொல்லி அமைதியானாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு, வினோத் மெதுவாக "நான் இங்கே தான் ரூம் நம்பர் 108ல‌ இருக்கேன். சொந்த ஊர் கோயமுத்தூர். நல்லபடியா இன்ஜினியரிங் முடிச்சிட்டு நெறைய கம்பெனி ட்ரை பண்ணேன். சில கம்பெனியில HR இன்டெர்வியூ வரைக்கும் போவேன். அங்கே என்னோட இங்கிலீஷ் fluentடா இல்லனு திருப்பி அனுப்பிச்சுடுவாங்க.. ஒண்ணும் க்ளிக் ஆகவே இல்ல. யார் கூடவும் பேசாம, ஒழுங்கா சாப்பிடாம, வெறித்தனமா, நைட் பகல்ன்னு எதுவும் பார்க்காம படிச்சேன். சரி ஒரு சேஞ்ச்சுக்கு அம்மா அப்பா கொஞ்ச நாள் இங்கே தங்கிட்டு வர சொன்னாங்க. அப்புறம் நீங்க இங்க எப்படி வந்தீங்க!" சொன்னான்.

"என் சொந்த ஊர் தஞ்சாவூர். நான் பி.காம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஹாஸ்டலில் என்னுடன் தங்கியிருந்த‌ க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தி ஒருவனை சின்சியரா லவ் பண்ணினாள். அது எப்படியோ அவள் வீட்டில் தெரிந்து பெரிய பிரச்சினை ஆகிவிட்டது, அவனை அடித்து துவைத்து விட்டனர். அதை ஒரு நாள் இரவில் என்னிடம் சொல்லி ரொம்ப அழுதாள், அவன் இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை என்று புலம்பினாள். நான் அவளை ஆறுதல் படுத்தி தூங்க வைத்தேன். மறுநாள் காலையில் நான் எழுந்தபோது என் தலைக்கு மேலே அவள் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து நான் அதிர்ச்சியாகி, ஓவென்று கத்தி அழுது கொண்டே மயக்கம் போட்டு விட்டேன். அதற்கு பின் எனக்கு எப்பவுமே அது தான் என் கண் முன்னே நிற்கிறது. பைத்தியம் மாதிரி ஆகி விட்டேன். என்னால் எதிலும் கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை. அதான் இங்க ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன்" என்று அழுது கொண்டே சொல்லி முடித்தாள்.

"இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லங்க. சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லா படிங்க. படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறது தான் உலகத்திலேயே கொடுமையான விஷயம். லக் இருந்தா சீக்கிரம் கெடச்சிடும். என்னைய‌ பாருங்க. 27 வயசாகியும் இன்னும் வேல கெடைக்காம திரியுறேன்." என்றான் வினோத்.

கீர்த்தி, அதற்கு சீரியஸாக, "இதெல்லாம் ஒரு பிரச்சினையாங்க. வேல கெடைக்கலேன்னா, தனியா பிசினஸ் பண்ணலாம். ஆனால் க்ளோஸ் ஃப்ரெண்ட் சாவ கண் முன்னே பார்க்குறது எவ்வளோ கொடுமையான விஷயம் தெரியுமா? யாருக்கும் இந்த மாதிரி நெலமையெல்லாம் வரவே கூடாதுங்க" என்றாள்.

இந்த மாதிரி கொஞ்ச நேரம் இருவரும் மாறி மாறி தங்கள் தரப்பு சோகங்களைக் கொட்டிக் கொண்டே இருந்தனர். வினோத், சமாதானத்துடன் "ஓ.கேங்க, உங்களுக்கு நான் சப்போர்ட்டா இருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கு அந்த சோகத்த‌ மறக்கறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன். இனிமே நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். சரியா?" என்றான். கீர்த்தி, சிரித்தபடி "ஃபைன், நாம ஃப்ரெண்ட்ஸ். என்கிட்டயும் சொந்தமா தொழில் தொடங்குறது பத்தி நெறைய ஐடியாஸ் இருக்கு. உங்க வேல என் பொறுப்பு. ஒ.கே வா?" என்றாள்.

நேரம் இரவு 6.30ஐ தாண்டி 7 க்கு அருகே நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் கத்தும் சத்தமும், பெல் அடிக்கும் மணியோசையும் கேட்டது. "நேரமாச்சு, எல்லாரும் வாங்க. ப்ரேயர் பண்ணனும்." புல்வெளியை ஒட்டிய காம்பவுண்ட் போர்டில் உள்ள லைட்டை யாரோ போட்டார்கள்.

"கற்பகம் மனநல காப்பகம், சென்னை" என்று டியூப் லைட்டில் போர்டு வெண்மையாக மின்னியது.

******************************************

குறிப்பு: மற்ற கதைகளுக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் எழுதும் சிறுகதைகளின் பெயரும், கேரக்டர்களின் பெயரும் ஒன்றாக வைக்க வேண்டும் என்பது என் ஆசை.வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி-I கதைக்கு இங்கே க்ளிக்கவும்

ஐ.சி.யூவில் ஆஸ்திரேலியா

பாக்ஸிங் டேயில் ஆரம்பித்த ஆஸ்திரேலியா தென்ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாலாவது நாள் முடிவில் தென்ஆப்ரிக்காவின் கை மிகவும் ஓங்கியிருக்கிறது.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக யாருக்கும் சாதகம் இல்லாமல் போய்க் கொண்டு இருந்தது. முதல் நாள் இறுதியில் தென்ஆப்ரிக்காவுக்கு சாதகமாக இருந்த மேட்ச், இரண்டாம் நாள் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது. மூன்றாவது நாளில், தென்ஆப்ரிக்காவின் டுமினி(Dumini, எப்படி pronounce பண்ணுவது?!?)அடித்த 166 run மேட்சையே திருப்பி போட்டு விட்டது. 65 ரன்கள் லீட் வேற.

சரி, இதற்கு ஆஸ்திரேலியா காட்டமாக பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால் அவர்கள் இன்று மண்டி போட்டு தோல்வியை ஒப்புக் கொளவது போல் ஆடினார்கள். டுமினி அமைத்துக் கொடுத்த அந்த பாதையை அப்படியே ஸ்டெயின்(Steyn) ஃபாலோ பண்ணி ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை ஆட்டம் காட்டினார். அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளையும், ஃபர்ஸ்ட் இன்னிங்ஸில் டுமினியுடன் சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த பெருமையும் உடையவர். சத்தியமாக இவருக்கு தான் மேன் ஆஃப் தி மேட்ச்.

தென்ஆப்ரிக்கா செகண்ட் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி. நாலாவது நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா 30 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அவர்களுக்கு 153 ரன்கள் மட்டும் தேவை. இதை தென்ஆப்ரிக்காவால் சேஸ் பண்ண முடியாது என்று யாராவது சொன்னால் அவருக்கு சச்சின் என்றால் ஹிந்தி பட ஹீரோ என்ற அளவுக்கு தான் கிரிக்கெட் தெரியும் என்று அர்த்தம்.

தொடர்ந்து மோசமான ஃபார்மில் ஆடிவரும் ஹைடன், அவருடைய ஃபேவரிட் கிரவுண்ட் என்று சொல்லப்படும் மெல்போர்னிலும் மோசமாகவே ஆடிவருகிறார். இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 31(8+23)ரன்கள். ஏறக்குறைய இரண்டாவது டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியாகிவிட்ட இந்த சூழ்நிலையில் அவர் மூன்றாவது டெஸ்டில் ஆட மாட்டார் என்று நினைக்கிறேன். சர்ச்சை நாயகன் சைமண்ட்ஸ் செகண்ட் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி விட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு ஒரே சாதகமான விஷயம் ரிக்கி பாண்டிங்கின் அருமையான ஆட்டம். ஒரே ஒரு ரன்னில் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை தவற விட்டார். நல்ல வேளை, சென்சுரி போட்டு சச்சின் சாதனைக்கு மிகவும் கிட்ட வந்து விடுவாரோ என்று பயந்து கொண்டே இருந்தேன் :) இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 200(101+99)ரன்கள்.

கிரிக்கெட்டில் இப்போதைய சூழலில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லாத ஒரே டீம் அது ஆஸ்திரேலியா தான். அது டீம் கேப்டன் பாண்டிங்கிடம் ஆரம்பித்து சைமண்ட்ஸ், க்ளார்க் யாரிடமும் இல்லை. மார்ச்சில் சிட்னியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜெயிப்பதற்கு அவர்கள் பண்ண பிரயத்தனமே சாட்சி. அவர்கள் அவ்வளவு தூரம் அப்போது போகக் காரணம் சொந்த மண்ணில் தொடரை இழந்தால் பெரிய அவமானம் என்று அவர்கள் நினைத்தது தான். அந்த அவமானம் இன்னும் 24 மணி நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஃபேஸ் பண்ண போகிறார்கள். யெஸ். இந்த போட்டியில் ஜெயித்தால் தென்ஆப்ரிக்கா தொடரை 2-0 என்று வெற்றி பெற்று விடுவார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியாவின் மூக்கை உடைத்து, நாம் சந்தோஷப்பட வேண்டிய‌ வெற்றி. ஆனால் என்ன, எப்படியோ ஆஸ்திரேலியாவின் மூக்கு உடைய போகிறது, அதை நினைத்து மட்டும் இப்போதைக்கு சந்தோஷப்படுவோம்.

சம்பந்தமில்லாத ஒரு கேள்வி: பாண்டிங் இப்போது நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பாரா??

அபியும் நானும் - விமர்சனம்

ஒரே ஒரு செல்ல மகளுக்கு பாசத்தை ஒவர் டோஸாக கொடுத்து பழக்கப்பட்ட அப்பா, மகளின் ஒவ்வொரு காலகட்டத்தின் பிரிவையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் இரத்தின சுருக்கமான கதை. அதிலும் பிரகாஷ்ராஜ் மாதிரியான நான்‍-ப்ராக்டிகல் அப்பாக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் முதல் 45 நிமிடம் அழகான கவிதை. சின்ன வயது த்ரிஷாவுடன் அவர்கள் பெற்றோர்கள் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. அதன் பின் தான் த்ரிஷா என்ட்ரி, அத்துடன் மொத்த படத்தின் சுவாரஸ்யம் அப்படியே அமுங்கி விடுகிறது. த்ரிஷாவுக்கு அப்படி ஒன்றும் அழுத்தமான கேரக்டர் இல்லை. த்ரிஷாவை விட அவர் அம்மாவாக நடிக்கும் ஐஸ்வர்யாக்கு நடிப்பதற்கு நிறைய ஸ்கோப். ஆனால் அவரின் வில்லத்தனமான் வாய்ஸ் அநியாயத்திற்கு பயமுறுத்துகிறது. அவருக்கு யாராவது டப்பிங் பேசியிருக்கலாம்.
ஆசை மகளை ஸ்கூலில் சேர்க்கும் போது அழுவது, சைக்கிள் வாங்கித் தருவதற்கு அடம்பிடிப்பது, படிப்பதற்கு டெல்லி அனுப்பும்போது பிரச்சினை பண்ணுவது என பிரகாஷ்ராஜ் மொத்த படத்தின் வெயிட்டையும் தனி ஆளாக‌ தன் தோளில் சுமக்கிறார். த்ரிஷா முதல்முறை "I know what i'm doing" என்று சொல்லும்போது ஏற்படும் அதிர்ச்சியை தெளிவாக வெளிக்காட்டுகிறார். ஒரு சீனில் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்துட்டான் என த்ரிஷா சொல்லும்போது ரொம்ப மெச்சூர்டா அட்வைஸ் பண்ணும் அவர், அதே பொண்ணு நான் லவ் பண்றேன் என்று சொல்லும்போது சின்ன்ப்புள்ள மாதிரி ரியாக்ட் பண்ணுவது ஏன் என்று தெரியவில்லை.

த்ரிஷா முக சாயலில் சிறுவயது குழந்தைகளை தேர்ந்தெடுத்து நன்றாக நடிக்க வைத்து இருக்கிறார்கள். த்ரிஷாவின் கேரக்டர்க்கு இமேஜ் பூஸ்ட் அப் பண்ண விவரம் தெரியாத வயதில் பிச்சைக்காரனை வீட்டுக்கு கூட்டி வருவது ஓ.கே, ஆனால் நடு ரோட்டில் அப்பா சட்டையைக் கழற்றி ரோட்டில் திரியும் பெண்ணுக்கு போர்த்துவது என்று ரொம்ப யோசித்து இருக்கிறார்கள். யாருடனும் டிஸ்கஸ் பண்ணாமல், ரொம்ப கூலாக கல்யாண தேதியை சாப்பிடும்போது த்ரிஷா பிரகாஷ்ராஜிடம் சொல்வது, ரொம்ப வேடிக்கையாக உள்ளது. அந்த பிச்சைக்கார ரவி சாஸ்திரி நடிப்பில் அசத்துகிறார், அநாயசமாக கமெண்ட் அடிக்கிறார். ஆனால் ஃபீல் பண்ணி பேச ஆரம்பிக்கும்போது பயமுறுத்துகிறார்.

படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு சிறப்பம்சம், ரொம்ப ஷார்ப்பான வசனங்கள். பாலுக்கு பால் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். பாடல்கள், சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் "வா வா அன்பே" என்ற முதல் பாடல் அருமை. ரெண்டாம் பாதி முழுவதும் வறட்சி. சிங் மாப்பிள்ளை மேல் நல்ல ஒப்பீனியன் வர வேண்டும் என்பதற்காக ஜோடிக்கபட்ட காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. அந்த குண்டு சொந்தக்கார சிங் கத்துவதில் காது தான் வலிக்கிறது. சோகம், சென்டிமெண்ட் என‌ எதிலும் கான்சென்ட்ரேட் பண்ணாமல் அங்கேயும் காமெடியை அள்ளி தெளித்து இருக்கிறார்கள், படத்துடன் ஒட்ட மறுக்கிறது.

அழகிய தீயே, மொழி போன்ற படங்களில் இருந்த யதார்த்தம் இந்த படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்.

அபியும் நானும் ‍- அப்பாவுக்கும் பொண்ணுக்கும் மட்டும் பிடித்த படம்.

காலண்டரில் தாதா, Children of Heaven, ஒரு புக்

நேற்று இரவு 11 மணிக்கு NDTV 24X7 TVயில் ஹாட் நியூஸ். முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் ஃபோட்டோ மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் 2009 வருட காலண்டரில் அச்சிடப்பட்டுள்ளது. அதை கங்குலி மூத்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர்களுடன் சேர்ந்து கொடுத்த ப்ரஸ் கான்ஃபரன்ஸில் இந்த கூத்து நடந்துள்ளது. கம்யூனிஸ்ட் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும் மேற்கு வங்கத்தில் இருந்த வந்த உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களில் கங்குலியும் ஒருவர் என்ற காரணத்திற்காக அக்கட்சி இவ்வாறு செய்து கௌரவப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இதை அவர் கிரிக்கெட் ஒழுங்காக விளையாடிக் கொண்டிருக்கும் போதோ இல்லை இவர் கேப்டனாக பொறுப்பேற்று தொடர்ச்சியாக பல வெற்றிகளைக் குவித்த போதோ செய்து இருக்கலாம். ஆனால் அவரே பாவம் போல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நொந்து நூடூல்ஸாகி பின் போனா போகுது என்று ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் செய்வதன் நோக்கம் என்ன? ஓ.கே. இதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டு பத்தோடு பதினொன்றாவது நியூஸாக காட்டியிருக்கலாம். ஆனால் ஒரு அரை மணிநேரம் தனி கவரேஜாக காட்டியுள்ளது NDTV 24X7 TV. இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு படி மேலே போய் அவர்கள் பண்ண காமெடி, அந்த செய்தி தொகுப்புக்கு வைத்த பெயர் "Does Dada making political debut?" இதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும். ஒருவேளை அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதாலா அல்லது ஓய்வு பெற்ற கங்குலியை கட்சியில் இழுத்துப் போட்டு பேரும் புகழும் சேர்க்கலாம் என்பதாலா? நான் அரசியலில் கொஞ்சம் வீக். ஆனால் நான் தூங்கப் போகும் முன் நன்றாக விழுந்து விழுந்து சிரித்தேன். (அதனால கொஞ்சம் காயம் ஆயிடுச்சி :(

இதுவரை Hindu வில் கங்குலியை பற்றி Former Indian captain என்று prefix சேர்த்து போடுவார்கள். ஆனால் இரண்டு நாளைக்கு முந்தைய Hindu வில் Former Indian Cricketer என்று prefix போட்டு அவர் பேட்டியை வெளியிட்டார்கள். அது உண்மை தான் என்றாலும் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று கங்குலி நிச்சயம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்லிக் கொண்டிருப்பார்.

இதுக்கு சம்பந்தமில்லாத ஒரே ஒரு கேள்வி: கங்குலி இந்த ஜென்மத்தில் க்ரேக் செப்பலை மறந்து விடுவாரா?

*********************************

இன்று மதியம் விஜய் டி.வியில் Children of Heaven படம் ஒளிபரப்பினார்கள். நான் ஏற்கெனவே இந்த படத்தை நிறைய தடவை பார்த்துவிட்டேன். இதன் ஒரிஜினல் டி.வி.டியும் என்னிடம் உள்ளது. ஆனால் இந்த படத்தை விஜய் டிவி ஒளிபரப்பும்போது மறுபடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. சொர்க்கத்தின் குழந்தைகள். ஒரு அழகான குட்டி கவிதையை டைட்டிலாக வைத்து உள்ளனர். படம் அழகான செல்லுலாயிட் கவிதை.

ரெண்டே ரெண்டு சின்ன பசங்களை வைத்து அருமையாக பின்னப்பட்ட கதை. எப்படியாவது அந்த பையனுக்கு ஷூ கிடைத்துவிட வேண்டும் என பார்க்கும் அனைவரையும் கலவரப்பட வைக்கிறார்கள். அந்த சிறுமி சான்ஸே இல்லை. குடு குடு என்று ஓடி வந்து அண்ணனுக்கு ஷூ கொடுக்கும்போது ஆகட்டும், ப்ரேயரில் எல்லோருடைய கால்களையும் பார்த்து ஷூக்காக ஏக்கப்படும் போதாகட்டும் அட்டகாசமான நடிப்பு. க்ளைமேக்ஸில் நடக்கும் ஓட்டபந்தயத்தில் third place கிடைத்தால் தான் ஷூ என்று முன்னாலே ஒடும் சிறுவன் மெதுவாக ஓடும் போதாகட்டும், ஒரு வழியாக டார்கெட் ரீச் பண்ணவுடன் மயங்கி விழுந்து எழுந்து டீச்சரிடம் நான் third place வந்துட்டனா சார் என்று கேட்கும்போது ஆகட்டும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து உள்ளான். (ஆனால் அநியாயத்துக்கு விளம்பரம் போட்டு மண்டை காய வைத்து விட்டார்கள்)

சின்ன வயதில் நானும் என் தம்பியும் வீட்டிற்கு தெரியாமல் பம்பரத்திற்காக இப்படி அலைந்தது தேவையே இல்லாமல் நியாபகம் வந்து போனது.

*******************************

Can you correlate these terms such as Principle of Favorability, Omens, Urim and Thummim, Crstal shop, Egypt, Dreams of treasure with any book?

நான் இப்போது வெறித்தனமாக படித்துக் கொண்டிருக்கும் ஒரு புக் பற்றிய Hint தான் மேலே கொடுத்தது.. சும்மா டைம்பாஸ்க்காக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு சுவாரஸ்யம் இந்த புத்தகத்தில். 170 பக்கம் உள்ள இந்த புத்தகத்தில் நேற்று மட்டும் 70 பக்கம் படித்து முடித்து விட்டேன். முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டு முடிந்தால் அதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.

********************************

டிசம்பர் 26‍-ம், சுனாமியும்.. கொஞ்சம் கிரிக்கெட்

டிசம்பர் 26, 2008 இன்றுடன் தமிழ்நாட்டின் தெற்கு கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கி 4 வருடம் ஆகிறது. நிஷாவும், மாலாவும் வருஷத்துக்கு ஒரு முறை தமிழ்நாட்டை உலுக்கு உலுக்கினாலும் தமிழர்கள் அதை ஒரு வாரம் நியாபகம் வைத்திருந்தாலே பெரிய விஷயம். ஏரியில் இருக்கும் மக்களும், வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் அதிகாரிகளும், அதை வாங்குவதற்கு அலையும் மக்கள் மட்டும் விடாமல் குறைந்தது ஒரு மாதம் நியாபகம் வைத்து இருப்பார்கள்.

ஆனால் சுனாமி அப்படியல்ல. டிசம்பர் 26, 2004 அதிகாலையில் ஒரு பேரலை வந்து தாக்கியபோது யாருக்கும் தெரியாது அதனுடைய பெயர் "சுனாமி" என்று. அடுத்த நாள் பேப்பர்களில் கூட அதை கடல் கொந்தளிப்பு, ஆழிப்பேரலை என்று மட்டும் அழைத்தார்கள். இரண்டு நாள் கழித்து, தினத்தந்தி மட்டும் இந்த கடல் கொந்தளிப்பின் பெயர் "டிசுனாமி (Tsunami)" என்று பெயர் வைத்ததாக எனக்கு ஞாபகம். கடைசியில் அதன் பெயர் மருவி இல்லை உண்மையான பெயரான சுனாமிக்கு வந்தது. கமலஹாசன் மட்டும் தீர்க்கதரிசனமாக "அன்பே சிவம்" படத்தில் சுனாமி வந்து அப்பாவை தூக்கிட்டு போயிட்டதாக சொன்னார். (அந்த பெருமை டையலாக் ரைட்டர் மதனை சேருமா இல்லை கமல் தானா??)
நான் அந்த சமயம் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தேன். செமஸ்டர் லீவுக்காக நான் ஊரில் பெரியப்பா வீட்டில் இருந்தேன். பெரியப்பாவின் மகள் சென்னை பாலவாக்கத்தில் மாமனார் வீட்டில் இருந்தார். நாங்கள் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சென்னையில் இருந்து போன். அக்கா கால் பண்ணி கடல் தண்ணியெல்லாம் ஊருக்குள் வந்துவிட்டது, கீழே கிரவுண்ட் ஃப்ளோர் ஃபுல்லா தண்ணி வந்துவிட்டது என்று அழுதுகொண்டே சொல்லிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் "எல்லாரும் மாடியில் போய் இருந்துகோங்க, வீட்டுக் கத்வு, ஜன்னல் என கீழ் ஃப்ளோரில் எல்லாத்தையும் மூடிவிட்டுப் போங்க" என்று எங்களால் முடிந்த அளவு சமாதானபடுத்திக் கொண்டு இருந்தோம். அன்னைக்கு முழுவது சன் நியூஸ் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளை, வீட்டினுள் கொஞ்சம் தண்ணீர் மட்டும் புகுந்தது. மற்றபடி அக்கா வீட்டில் பெரிய சேதம் ஒன்றும் ஆகவில்லை.

நியூ இயர் முடிந்து நாங்கள் காலேஜ்க்கு போனோம். என்னுடன் படித்த ஃபைனல் இயர் சீனியர்ஸ் எல்லாம் அந்த டைம் சென்னையில் ப்ராஜெக்ட் பண்ணிக் கொண்டு இருந்தனர். அப்போது நாங்கள் சில சீனியர்களுடன் ப்ராஜெக்ட் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொன்னது திடுக்கிட வைத்தது. சுனாமி வருவத்ற்கு ஒரு நாள் முன்னால் 25-ம் தேதி சாயங்காலம் அவர்கள் அனைவரும் பீச்சில் தான் இருந்தனராம். அதுவும் அன்று ஞாயிற்றுகிழமை வேறு. பீச்சில் அலைமோதும் கூட்டம். ஒரு 12 மணிநேரம் முன்னால் வந்து இருந்தால், சென்னையே பாதி காலி ஆயிருக்கும் என்று பயந்து சொன்னார்கள். அவர்கள் கண்களில் இன்னும் அந்த பயம் இருந்தது.

நாகை, கடலூர் மாவட்டங்களில் பெரிய அளவு உயிர்சேதம் ஏற்பட்டது. திருச்செந்தூர், ராமேஸ்வரம், தூத்துக்குடியில் அதிக அளவு இழப்பு ஏற்படவில்லை, இலங்கை காப்பாற்றிவிட்டது என்று பேப்பரில் படித்ததாக நியாபகம்.

இயற்கை இப்படியெல்லாம் தாக்கும் என்று தமிழக மக்கள் தெரிந்து கொண்டது டிசம்பர் 26, 2004-ல் இருந்து தான்.

ஆனால் இன்று எத்தனை பேருக்கு இதே நாளில் தான் சுனாமி தாக்கியது என்று நினைவில் இருக்கும்? சென்னை பீச்சில் பொறித்த மீன் விற்றுக் கொண்டிருப்பவருக்குக் கூட நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே!


****************************

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2‍-வது இடத்திற்கு முன்னேறி விட்டது. இது ஒட்டு மொத்த இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி. இன்னும் தென் ஆப்பிரிக்காவை ஒரு கை பார்த்துவிட்டால் இந்தியா தான் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் நியூஸ்பேப்பர் தோனியை இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் டெஸ்ட் வீரர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து கனவு டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது சிட்னி மார்னிங் ஹெரால்டு. ஆண்டுதோறும் இதுபோன்ற அணியை அது தேர்வு செய்து அறிவிக்கும்.

இந்தியாவிலிருந்து தேர்வு செய்யட்ட மற்றுமொரு வீரர் கவுதம் கம்பீர். சமீப காலமாக இவரின் கிரிக்கெட் மீது கொண்டுள்ள வெறி வியக்கத்தக்கது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பௌலர்களை வெறுப்பின் உச்சியில் உட்கார வைத்து விட்டார். இவர் கோபத்தை மட்டுக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டால் மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு.

ஹெரால்டு அணி - டோணி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), ஸ்மித் (தெ.ஆ), கம்பீர் (இந்தியா), ஹசீம் அம்லா (தெ.ஆ), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), சிவ்நரைன் சந்தர்பால் (மே.இ. தீவு), ஏப் டி வில்லியர்ஸ் (தெ.ஆ), ரியான் சைட்பாட்டம் (இங்கிலாந்து), டேல் ஸ்டெயின் (தெ.ஆ), மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), அஜந்தா மென்டிஸ் (இலங்கை).

வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - II

கீர்த்தியின் அம்மா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவள் அம்மாவின் இறப்பு வினோத்துக்கும் பெரிய இழப்பு தான் என்றாலும், அவனால் எப்படி கீர்த்தியை சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை.

கடிகாரம் மாலை 5 மணியை எந்நேரமும் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தது. சீக்கிரம் அரக்க பரக்க எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஆபிஸை விட்டுக் கிளம்பினான் வினோத். இந்நேரம் கீர்த்திக்கு கிளாஸ் முடிந்து இருக்கும். எனக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு வண்டியை 60கி.மீ ஸ்பீடில் விரட்டினான். வினோத் நினைத்தது போலவே அவள் 10 நிமிடம் காத்திருந்தாள்.

அவளை பிக்கப் பண்ணிக் கொண்டு மெதுவாக வண்டியை செலுத்தினான். அவள் இன்னும் அந்த சோகத்தில் இருந்து விடுபடவில்லை. அவன் முதுகை நன்றாகக் கட்டிப்பிடித்து கொண்டாள். அவன் நேராக சரவணபவனுக்கு வண்டியைச் செலுத்தினான். இருவரும் காஃபி சாப்பிட்டபின் வினோத் மெதுவாகக் கேட்டான், "உனக்கு தான் சூர்யா படம் என்றால் ரொம்ப பிடிக்கும்ல, நாம ரெண்டு பேரும் வாரணம் ஆயிரம் படத்துக்கு போகலாமா??" என்றான், அவள் இறுக்கமான மூடை மாற்றுவதற்காக‌. அவள் "ம்ம்" என்றாள்.

காஃபி குடித்து விட்டு தியேட்டர்க்கு செல்லும்போது டைம் சரியாக இருந்தது. இன்டெர்வெல்லில் அவளுக்கு பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான். படம் பார்க்கும் போது வழக்கமான உற்சாகம் அவளிடம் இல்லை. படத்தை முடித்த பிறகு டிபன் சாப்பிடும்போது வினோத் ஆரம்பித்தான், "படம் பிடிச்சிருந்ததா?? சூர்யா நல்லா நடிச்சிருக்கான்ல??" என்றான். கீர்த்தி, "ஆமாம், படம் ஓ.கே" என்றாள். வினோத், "முடிச்சிட்டு அப்படியே பீச்சில் வாக் போகலாமா???" என்றான். கீர்த்தி, "சரி" என்றாள்.

பெசன்ட் நகர் பீச் வெளியே வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் பீச் மணலில் கால் புதைத்து நடந்து சென்றனர். மெர்க்குரி விளக்கின் உபயத்தால் கொஞ்ச தூரம் மஞ்சள் வெளிச்சம் இருட்டுடன் கலந்து ஏகாந்தமாய் கடற்காற்றும் வீசிக் கொண்டிருந்தது. கீர்த்தி வினோத்தின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.

வினோத், "கீர்த்தி, வாழ்க்கையில் என்ன நடக்கும், எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நல்லது நடந்தால் நாம் சந்தோஷப்படுவதைப் போல சோகத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று மெதுவாக ஆரம்பித்தான். கீர்த்தி, "அதெல்லாம் சரி, இத்தனை நாள் கூட இருந்த அம்மா, இப்போது இல்லை என்று நினைக்கும்போது எனக்கு அழுகையாக வருகிறது. இந்த உலகத்தில் எல்லோரையும் விட ஏன் உங்களை விடவும் எனக்கு அம்மாவைத் தான் ரொம்ப பிடிக்கும்" என்று உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழத் தொடங்கினாள். சில நிமிட நேரம் ஆழ்ந்த அமைதி. கடல் இப்போது ரொம்ப ஆக்ரோஷமாக இருப்பது போல் இருந்தது. வினோத், "இப்படியே அழுது கொண்டு இருந்தால் உன்னால் எதிலும் concentrate பண்ண முடியாது. இந்த அழுமூஞ்சியை உங்க அம்மாவுக்கும் பிடிக்காது" என்று சூழலின் மௌனத்தை உடைத்தான். கீர்த்தி ஒரு முடிவுக்கு வந்தவளாக, "ஆமாம் நான் அழுதால் என் அம்மாவுக்கு பிடிக்காது. இனிமேல் நான் அழமாட்டேன்!!!" என்றாள் உறுதியான குரலில்.

இருவரும் வீட்டுக்கு கெளம்பினார்கள். வீட்டில் அவள் படுத்துத் தூங்க எல்லாவற்றையும் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து அவளை தூங்க சொன்னான். கீர்த்தி சிறிது நேரம் கண்மூடிப் படுத்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. கீர்த்தி வினோத் அருகில் வந்து "என் பக்கத்தில் படுத்துக்கோ, எனக்கு பயமாக இருக்கிறது" என்றாள். வினோத்தும் அவன் அருகில் படுத்துக் கொண்டான். கீர்த்தி, வினோத்தை நன்றாக கட்டிபிடித்துக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டு சொன்னாள் "I LOVE YOU, DADDY!!!!"

வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி-I கதைக்கு இங்கே க்ளிக்கவும்

குறிப்பு: முதல் கதைக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் எழுதும் சிறுகதைகளின் பெயரும், கேரக்டர்களின் பெயரும் ஒன்றாக வைக்க வேண்டும் என்பது என் ஆசை.

யுவராஜ்-ஜாக்சன்-அந்துலே-மொஹாலி

யுவராஜ் சிங் நேற்று பீட்டர்சனுக்கு காட்டமான பதில் கொடுத்து இருக்கிறார். அதாவது "நான் யூஸ்லெஸ் பௌலர் என்றால் அந்த யூஸ்லெஸ் பௌலரிடம் 5 முறை அவுட்டான பீட்டர்சென் யூஸ்லெஸ் பேட்ஸ்மேன் தான்". இது நம்ம ஊர் அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சும் அறிக்கை சண்டை. டீமில் யாருக்கு எப்போது பௌலிங் சான்ஸ் கொடுக்க வேண்டும், ஃபீல்டிங் எப்படி செட் பண்ண வேண்டும் என்று கேப்டன் தான் முடிவு செய்ய வேண்டும். அதை எதிரணி கேப்டன் விமர்சிப்பது முட்டாள்தனம். "ஒவ்வொரு முறையும் சரியாக நான் பேட்டிங் இறங்கும்போது மட்டும் யுவராஜை பௌலிங் போட வைக்கிறாங்களே(இத்தனைக்கும் அவன் ஒண்ணும் பெரிய பௌலர் எல்லாம் இல்லையே)!! நம்மள வச்சி காமெடி கீமடி பண்றாய்ங்களோ???" என்று பீட்டர்சென் ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பார் என்று நினைக்கிறேன். அதன் விளைவு தான் அவரின் PIE-CHUCKER ஸ்டேட்மெண்ட். இதற்கு யுவராஜ் எதுவும் ரிப்ளை பண்ணாமல் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

***************************

மைக்கேல் ஜாக்சன் ரொம்ப சீரியஸாக இருக்கிறாராம். அவருக்கு 50 வயது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மியூசிக் பற்றி அதுவும் வெஸ்டர்ன் மியூசிக் பற்றி ஒண்ணும் தெரியாத காலத்திலேயே அவரின் Dangerous(1991) ஆல்பம் கேட்கும்போது கை கால் எல்லாம் உதறும். அந்த ஆல்பத்தை அவர் ஸ்டேஜில் ஆடிப் பாடி கேட்ட வீடியோ ஆல்பத்தைப் பார்த்த‌ நிமிஷத்தில் இருந்து ஜாக்சன் ஃபேன் ஆகிவிட்டேன். எப்படிப்பட்ட டான்ஸர்!!!! ஆனாலும் அவர் அத்தனை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து ஏன் இப்படி உடலை கிழித்து நோகடித்து இருக்க வேண்டும் என்று சில சமயம் நினைத்து இருக்கிறேன். அவர் உடல் நலம் பெற்று சீக்கிரம் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

****************************

ஒட்டு மொத்த இந்தியாவே, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும்போது மத்திய அமைச்சர் அந்துலே கெளப்பிவிட்ட செய்தி தேவையில்லாத ஒன்று. இது நமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாதிப்பதோடு தேவையற்ற சச்சரவுகளையும், இன்னும் இந்த விஷயம் முத்திவிட்டால் இந்திய இறையாண்மைக்கே பெரிய சவாலாக அமையும் என்பது என் கருத்து. எங்கேயோ படித்த நியாபகம் அதாவது இதே போன்ற ஒரு நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை நாம் உலக மேப்பில் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்று. நாம் அந்த எல்லைக்கெல்லாம் போகத் தேவையில்லை. குறைந்தபட்சம் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களையாவது அழித்து இருக்க வேண்டும்.

***************************

மொஹாலியில் டெஸ்ட் மேட்ச் நடக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்களை இ.பி.கோ ஏதாவது ஒரு சட்டத்தின்படி நாடு கடத்த வேண்டும். 11 மணிக்குத் தான் சூரியனே உதிக்கிறது. அதற்கு அப்புறம் அவர்கள் விளையாடி ஒன்றும் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. எப்படியோ நடந்து இருக்க வேண்டிய மேட்ச் மோசமான வானிலையால் யாருக்கும் சாதகம் இல்லாமல் டிராவில் முடியப் போகிறது. சரியான இடத்தை போட்டிக்கு தேர்ந்தெடுத்து இருந்தால், இந்த மேட்சிலும் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்து இருந்திருக்கலாம்.

இத்துப்போன சாம்பியன், திண்டுக்கல் சாரதி, வில்லு, www.blogger.com

ஒரு நாளைக்கு www.blogger.com இணையதளத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 5.5 கோடி என்று அலெச்ஸா சொன்னதாக இந்த வாரக் குமுதம் சொல்கிறது. மேலும் டாப் டென் ஹிட் லிஸ்ட் ஆஃப் திஸ் இயரில் இரண்டாவது இடம். குமுதம் கமெண்ட்ஸ் "கோபம், சந்தோஷம், அங்கலாய்ப்பது என அனைத்தையும் கொட்டித் தீர்க்கிறார்கள். இதில் ஒரு சமூகமே காத்திருக்கிறது". உண்மையான கமெண்ட்.

***************************

நேற்று சென்னை அமெரிக்க தூதரகத்தின் மீது செருப்பு வீசப்பட்டது. எந்த நேரம் புஷ் செருப்பு வீச்சு வாங்கினாரோ தெரியவில்லை, உலகம் முழுவதும் சந்தோஷம் பாதி, சச்சரவு பாதி என்று இரண்டும் கலந்த உணர்வில் உள்ளனர் மக்கள். (செருப்பு வீசியவரை கைது செய்து விசாரித்ததில் அவர் போதையில் அவ்வாறு செய்தேன் என்று சொன்னதாக இன்றைய தினத்தந்தி கூறுகிறது.)

**************************

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்சில் தென்ஆப்பிரிக்கா 414 ரன்னை சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இது போதாத காலம். அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து, இந்தியாவைத் தொடர்ந்து இப்போது தென்ஆப்பிரிக்கா. மெக்ராத், வார்னே, கில்கிறிஸ்ட், மார்டினை ஆஸ்திரேலியா மிஸ் பண்ணுகிறது. இன்னும் replacement தேடாதது, அவர்களின் அந்திமக் காலம் நெருங்கி கொண்டிருப்பதைக் காட்டுகிறது. போதாக்குறைக்கு ஹெய்டன், இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அக்டோபரில் முடிந்ததும் ரிட்டையர்டு ஆகப் போகிறாராம். ஆஸ்திரேலியா, இப்போது இத்துப்போன சாம்பியன்.
தென்ஆப்பிரிக்காவை மட்டும் சமாளித்து விட்டால் இந்தியா தான் அடுத்த வேர்ல்டு சாம்பியன்.

******************************

வில்லு பாடத்தின் அறிமுகக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் Internetல் ஈஸியாக கிடைக்கிறதாமே!!! அழகிய தமிழ்மகன், குருவிக்கு அப்புறம் விஜய் தன் இமேஜை நிலைநிறுத்திக் கொள்ள மலை மேல் நம்பிக் கொண்டிருக்கும் படம். இதுவும் இப்படி சர்ச்சையில் சிக்கி ஓடாமல் ஊத்திக் கொண்டால், தொடர்ந்து இரண்டு வருடம் ஹிட் கொடுக்காத நடிகர் என்று பெயர் வாங்கி விடுவார். (பாடல்கள் போக்கிரி அளவுக்கு எடுபடவில்லை என்பது வேற‌ சோகக்கதை :( )

********************************

லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல்படி சில‌ம்பாட்டம், திருவண்ணாமலை, அபியும் நானும், திண்டுக்கல் சாரதி என ரிலீஸான நான்கு படங்களில் திண்டுக்கல் சாரதி தான் ரேஸில் முந்தி ஓடுகிறதாம். கருணாஸ்க்கு அடித்தது யோகம். இனிமேல் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். வடிவேலு போல் ஓவராக சலம்பாமல் அடக்கி வாசித்தால் நல்லது. இந்த படிப்பினையை வடிவேலுவுக்கு நடந்ததை வைத்துக் கற்றுக் கொள்ளலாம் (Remember Indralogathil Alagappan!!!). சன் பிக்சர்ஸ் ஹாட்ரிக் வெற்றி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது. என்னைப் பொறுத்த வரை சன் பிக்சர்ஸ்க்கு இது தான் முதல் வெற்றி. காதலில் விழுந்தேன், தெனாவெட்டு படங்களெல்லாம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

சிலம்பாட்டம் - விமர்சனம்


சொத்துக்காக கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பங்காளி சண்டை. பிரபு, சிம்பு குடும்பத்துக்கும் பொன்வண்ணன், ராகவ், கிஷோர் குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் அடுத்த தலைமுறை வரை நடக்கும் ரத்தக்களறியான சண்டை.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் சிம்பு. முதலாமவருக்கு ஜோடி சினேகா அடுத்தவருக்கு சனாகான். இவர்கள் தவிர நெடுமுடு வேணு, யுவராணி(விஜயுடன் கபடி விளையாடினாரே, அவரே தான்), நிரோஷா, சந்தானம், மயில்சாமி, கருணாஸ், கனல்கண்ணன், சிட்டி பாபு என ஒரு பெரும் கூட்டமே நடித்திருக்கிறார்கள்.

அய்யராக நடிச்சாலும் சரி, காலேஜ் ஸ்டூடண்டாக நடித்தாலும் சரி, இல்லை பொறுக்கியாக நடிச்சாலும் எல்லாரையும் அடிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர் சிம்பு. இந்த படத்திலேயும் அதே போல். நடுவில் சனாகானுடன் காதல் காட்சிகள் எல்லாம் ஆபாசத்தின் உச்சகட்டம். இரட்டை அர்த்த வசனம் எல்லாம் தேவை இல்லை. ஸ்ட்ரெய்ட்டா புரியும்படியான வசனங்கள். சந்தானம் வரும் சீன் எல்லாமே காமநெடியின் தோரணங்கள். இந்த கொடுமை பத்தாது என்று கிராமத்து பாட்டியையும் பேச வைத்து வேடிக்கை பார்த்து உள்ளனர். பாடல் காட்சிகளில் அரைகுறை ட்ரெஸ்ஸோட டான்ஸ் ஆடவும், முதல் பாதியில் சிம்புவுக்கு பஞ்சாமிர்த மசாஜ் செய்ய‌ மட்டும் சனாகான். பிரபு, நெடுமுடி வேணு, பொன்வண்ணனுகெல்லாம் படத்தில் வேலையே இல்லை.

20 வருஷத்து முந்தைய கிராமத்து கதையில், கல்யாணம் பண்ணிக்காமலே தினமும் இரவு லிவிங் டுகெதர் லைஃப் வாழும் ஆதர்ஷ ஜோடியாக சிம்பு‍-சினேகா மாமி. நல்ல வேளை படத்தில் முக்கியமான இடத்தில் அதை ஒரு Knot ஆக வைத்திருப்பது புத்திசாலித்தனம். அதே போல் அந்த மலைக்கு நடுவே உள்ள tunnelஐ வைத்து சென்டிமெண்ட் காட்சியாக மாற்றியது அருமையான் க்ளிஷே.

அய்யர் சிம்புவை பார்த்து "தமிழ்" என்று பஸ்ஸில் தப்பித்து ஓடுபவன் பார்த்து ஆச்சர்யப்படும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணி கொண்டு போகாமல் அடுத்த சீனிலேயே சுவாரஸ்யம் உடைந்து போவது மைனஸ். க்ளைமேக்ஸில் பில்லா காஸ்ட்யூம், தீம் மியூசிக்கோடு சிம்பு வருவதெல்லாம் கொடுமையின் உச்சகட்டம் என்றால் "நலந்தானா" பாடல் முடிந்தவுடன் ஒரு நிமிஷம் குத்து மியூசிக்கில் தனியாக ரப்பர் மாதிரி டான்ஸ் ஆடுவது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்.

ஒரு சின்னப்பையன் குடும்பத்தில் எல்லாரையும்(சிம்பு உள்பட) கத்தியில் குத்தி சாகடிப்பது ரொம்ப டூ மச். பாடல் காட்சிகள் மட்டும் படத்தில் ரிலீஃப். அடிதடி காட்சிகள், டபுள் மீனிங் வசனங்கள் எல்லாம் குறைத்து இருந்தால் ஒரு நல்ல மசாலா திரைப்படமாக வந்து இருக்க வேண்டிய படம். ம்ம்ம்.. பயந்தது போலவே காது செவிடானது தான் மிச்சம்.

சிலம்பாட்டம் - சிம்புவின் அலப்பரை ஆட்டம்.

அண்ணா யூனிவர்சிட்டி-செல்போன்-ஃப்ளாஷ்பேக்

அண்ணா யூனிவர்சிட்டி, கேம்பஸ்க்குள் செல்போன் பயன்படுத்தினால் 10 நாள் சஸ்பெண்ட் என்று சொல்லியதை அடுத்து ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். நானும் என் நண்பர்களும் காலேஜில் செல்போனை வைத்து பண்ணிய காமெடி நிகழ்வுகள்.

நான் 2002 லிருந்து 2006 வரை அரசினர் பொறியியல் கல்லூரி, பருகூரில் இன்ஜினியரிங் (பொறியியல் மற்றும் தகவல் தொடர்பியல்) படித்தேன். பருகூர் எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு, சிறு குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சென்னை‍ -பெங்களூரூ நெடுஞ்சாலையில் திருப்பத்தூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் நடுவில் உள்ளது. பருகூரில் இருந்து ஒசூர் 40 கிமீ மட்டுமே. கிட்டதட்ட பார்டர். தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா பார்டர். கொஞ்சம் அரசியல் டச்சோடு சொல்வதென்றால் 1991 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற இடம். அதற்காகவே பருகூரில் பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை டி.ராஜேந்தர் ஜெயித்த சோகக்கதையும் பருகூரில் அடக்கம். இப்போதும் BITS, Pilani யில் எம்.எஸ் (Softwares and Systems, தொலைதூரக் கல்வி) வேலை பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டு இருக்கிறேன்.
நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது செல்போன் யாரும் அதிகம் பயன்படுத்தவில்லை. எங்க பசங்க யாரிடமும் செல்போன் இருந்ததில்லை. செகண்ட் இயர் கடைசியில் என்னுடன் படித்த அந்தமான் மாண்வர்களில் ரெண்டு பேர் மட்டும் வாங்கி இருந்தனர். அதுவும் செங்கல் மாதிரி
இருக்குமே, அந்த செட். அதையே எங்க பசங்க எல்லாம் எக்ஸிபிஷனில் பார்ப்பது போல் ஆச்சர்யத்துடன் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தோம். அவர்களிடம் எப்பவாவது கெஞ்சி கூத்தாடி செல்போனை வாங்கி கேம் விளையாடுவதற்குள் தாவு தீர்ந்திடும். காலேஜ் ஸ்டாஃப் கூட சில சமயம் அவனுங்க கிட்ட செல்போன் வாங்கி பேசுவார்கள், எங்கள் காதில் புகை.

தேர்டு இயர் முடிக்கும்போது பரவலாக ஒரு பத்து பேரிடமாவது செல்போன் இருந்திருக்கும். ஓரளவுக்கு வசதியான பசங்க, முக்கியமா லவ் பண்ற பசங்ககிட்ட இருந்தது. எங்க வீட்டில் என் நண்பன் ஒருவன் போன் நம்பரைக் கொடுத்துவிட்டேன். வீட்டில் இருந்து கால் வரும்போது ரொம்ப பெருமையாக ஸ்டைலாக எல்லாரும் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு ரொம்ப கத்தி ஓவர் சீன் போட்டதை நினைத்து இன்னும் சிரிப்பு வருகிறது. காதலர்கள் எல்லாரும் செல்போன் வாங்கி போர்வைக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்துவிட்டதால் என்னை மாதிரி ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசும் ஆட்களுக்கு ரொம்ப ஈஸியாக லேடீஸ் ஹாஸ்டல் லைன் கிடைத்தது. அப்போது யாருக்கு பர்த்டே என்றாலும் சரியாக 12 மணிக்கெல்லாம் தேவையான் Wishes லேடீஸ் ஹாஸ்டலில் இருந்து கிடைத்துவிடும். அது மட்டும் தான் அப்போதைய காலகட்டத்தில் செல்போனால் எனக்கு கிடைத்த advantage.

ஃபைனல் இயர் ஆரம்பத்தில், கேம்பஸில் Place ஆன அனைவரும் உடனே செல்போன் வாங்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி. அதனால் செல்போன் கூட்டம் கூடிக் கொண்டே போனது. நானும் அடிச்சி புடிச்சி செல்போன் வாங்கலாம் என்று பார்த்தால் எங்க அப்பா "இப்பலாம் வாங்குனா, படிப்பில் கவனம் போகாது(?).. ஒருவேளை நீ Place ஆயிட்டா அப்புறம் பாத்துக்கலாம்" என்று சொன்னார். நானும் செல்போன் வாங்குவதற்காகவே வெறித்தனமாக "R.S.Agarwal, Let Us C" புக் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். Caritor Interview வில் ஒரு வழியாக கடைசி வரை போனேன். விதி வலியது. ஊத்திக் கொண்டது.

ஒரு வழியாக என் அப்பா மனமிறங்கி 2006 பிப்ரவரியில் நோக்கியா 3120 வாங்கிக் கொடுத்தார். அதைத் தான் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மொபைல் போனை மாத்த சொல்லி என் தம்பி கொடுக்கும் Pressure ஐ இந்த பதிவில் எழுதியுள்ளேன். 4 மாதம் அந்த போனை வைத்துக் கொண்டு காலேஜின் கெட்ட சீன்.

இப்போது இருக்கும் சூழலில் அண்ணா யூனிவர்சிட்டி கொண்டு வந்துள்ள சட்டம் சரியானது தான் என்றாலும் சில விஷயங்களில் தளர்த்திக் கொள்ள வேண்டும். வகுப்பு நடக்கும் போது அனைவரும் ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும், லஞ்ச் ப்ரேக்கில் யூஸ் பண்ணிக்கலாம் என்று சொல்லலாம். கேம்பஸ்க்குள் யூஸ் பண்ணக் கூடாது என்று சொல்வது தவறு என்று எனக்கு படுகிறது. இந்த காலத்தில் LKG படிக்கும் குழந்தைகள் கூட செல்போன் யூஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்பாவும் அம்மாவும் வேலைக்கு போகும் இன்றைய கால கட்டத்தில் செல்போன் மூலம் அடிக்கடி பேசிக் கொள்ளலாம். இதன் மூலம் குழந்தைகள் "Anytime reach" ல் இருப்பார்கள்.

நண்பன், சிலம்பாட்டம், டெஸ்ட் மேட்ச்

என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு நண்பனுக்கு சென்ற ஜூன் மாதம் கல்யாணம் நடந்தது. போன வாரம் ஒரு இ-மெயில் அனுப்பி சொன்னான் அவனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக. கூட்டிக் கழித்து பார்த்தாலும் 6 மாதத்தைத் தாண்டி சொல்ல‌ மறுக்கிறது என்னுடைய கணித அறிவு. நான் படித்த கல்லூரியிலே படித்த ஜுனியர் பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டான். இப்போது தான் தெரிகிறது எவ்வளவு சின்சியரா லவ் பண்ணி இருக்கிறான் என்று. இந்த கல்யாணத்தை அவன் விருப்பப்பட்டு பெற்றோர்களை கன்வின்ஸ் பண்ணி செய்தானா இல்லை பெற்றோர்களை சம்மதிக்க வைக்க இப்படியெல்லாம் செய்தானா அதுவும் இல்லை அந்த பெண்ணின் பெற்றோர் இவன் கழுத்தில் கத்தி வைத்ததனால் அவசரமாக அவசரமாக இந்த கல்யாணம் நடந்தேறியதா என்று தெரியவில்லை. ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றி அவனிடம் கேட்க என் மனது இடம் கொடுக்கவில்லை. சிம்பிளாக கங்கிராட்ஸ் மட்டும் சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

நன்றாக படித்து முடித்து நல்ல வேலையில் இருக்கும் இவர்களே இப்படியெல்லாம் செய்தால் மற்றவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.

**************************

ஞாயிற்றுக்கிழமை சத்யம் தியேட்டரில் சிம்புவின் சிலம்பாட்டம் பார்க்க டிக்கெட் புக் பண்ணிவிட்டான் என் ரூம்மேட். சிம்பு படம் என்றாலே ஒரு வித பயம் வல்லவன் படம் பார்த்ததில் இருந்து. நல்ல கதையம்சம் உள்ள‌ படத்தில் ஓவர் பில்டப் கொடுத்தால் பொறுத்துக் கொள்ளலாம். காளை என்ற மொக்கை படத்தில் அநியாயத்திற்கு ஓவர் பில்டப் கொடுத்து காதை செவிடாக்கி விட்டார்கள். அந்த படம் பார்த்த எஃபெக்ட்டில் ஒரு மாதம் நான் தியேட்டர் பக்கமே போகவில்லை. இவர் பண்ணும் ஓவர் பில்டப் எல்லாம் பத்து வருடம் சினிமா ஃபீல்டில் இருந்து விட்டு நல்லா establish ஆனபின் தான் செட் ஆகும்.

சிலம்பாட்டம் படத்தில் ஏற்கெனவே பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட்டாகி விட்டதால் ஒரு அரைமணி நேரம் கியாரண்டி. அதையும் ஒழுங்காக எடுக்காமல் சொதப்பிவிட்டிருந்தால் கண்ணை மூடி பாட்டு தான் கேட்க வேண்டும்.

***************************

அது எப்படி இருந்தாலும் அன்னைக்கு மேட்ச் பார்க்க முடியாது. நாளைக்கு இந்தியா‍-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் மேட்ச் மொஹாலியில் ஆரம்பிக்கிறது. டிராவிட்டுக்கு வழங்கப்படவுள்ள கடைசி சான்ஸ். ஏற்கெனவே ஸ்ரீகாந்த் பத்திரிக்கைகளுக்கு "டிராவிட் ஃபார்ம் கவலை அளிக்கிறது. அவர் கொஞ்ச காலம் ஓய்வு எடுத்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்" என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். All the Best Dravid. Pieterson, better luck this time!

இங்கிலாந்தால் 200% கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்க‌ளின் கெட்ட நேரம், ஷேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ், தோனி என டீம் முழுவதும் சூப்பர் ஃபார்மில் உள்ளனர். இதில் ஒரு வேளை டிராவிட்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டால் வெற்றியை கனவில் கூட அவர்களால் காணமுடியாது.

Attention: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வைரஸ்.

Internet Explorer எஞ்சினில் மிகவும் ஆபத்தான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆன்லைன் வங்கி வர்த்தகம் மற்றும் ட்ரான்சாக்ஸன் எதுவும் IE யூஸ் பண்ணி பண்ண வேண்டாம் என்று மைக்ரோசாஃப்ட் கேட்டுக் கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்ட், வைரஸை முடுக்குவதற்கான சாஃப்ட்வேர் பேட்ச் வேலைகளில் இறங்கியுள்ளது.

Firefox, Opera, Chrome, Safari இணைய உலவிகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் மற்ற இணைய உலவிகளை யூஸ் பண்ணி பங்கு வர்த்தகம் மற்றும் வங்கி கணக்குவழக்குகளை செய்யுமாறு மைக்ரோசாஃப்ட் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு http://news.bbc.co.uk/2/hi/technology/7784908.stm
To be updated..

திருமங்கலம் இடைத்தேர்தல், வோட்டர் ஐடி, பேலட் பாக்ஸ்.

2002 ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு, ப்ளஸ் டூவில் 1112 மார்க் வாங்கியதைக் கொண்டாட ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து திருமங்கலத்தில் இருக்கும் சுத்த அசைவ ஹோட்டலான முனியாண்டி விலாஸில் மூச்சு முட்ட முட்டை கொத்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தூரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் வைகோ கட்சி மாநாடு நடந்து கொண்டிந்த்து. சரியான கூட்டம். அதுவும் நடந்து கொண்டிருந்த இடம் பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில். சத்தத்தை ஸ்பீக்கர் மூலமாக திருமங்கலம் முழுவதும் அலற விட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டுக்கு போகும் வரை பேசிக் கொண்டு இருந்தார். ஆனால் அப்போது கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை இந்த‌ பேச்சுக்காக ஜுலை 11ஆம் தேதி கைது செய்யப்படுவார் என்று.

தியாகராஜ இன்ஜினிய‌ரிங் காலேஜ்க்கு கவுன்சிலிங்காக அப்பாவுடன் பஸ்ஸில் போகும்போது அவரை திருமங்கலம் ஜுடிசியல் கோர்ட்டில் புரொடியூஸ் பண்ண கூப்பிட்டு போய்க் கொண்டு இருந்தனர். வரிசையாக பத்து போலீஸ் கார் போனது. தொடர்ந்து பத்து நாட்கள் எல்லா பத்திரிக்கை, டி.வியிலும் திருமங்கலம் கூட்டத்தைப் பற்றி திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கெல்லாம் பெருமையாகவும் ஒரு பக்கம் வேதனையாகவும் இருந்தது, "ச்சே, அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் பத்து நிமிசம் நின்று இருந்தால் கூட, ஏதாவது ஒரு பத்திரிக்கை இல்ல டி.வியில் எங்கள் முகத்தை Out of Focusலாவது காட்டி இருப்பார்கள்" என்று.

அதற்கு பின் நான் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து, செகண்ட் இயர் படிக்கும்போது தான் அவரை ரிலீஸ் பண்ணினார்கள். அதற்கு அப்புறம் மறுபடியும் எல்லா மீடியாக்களிலும் இடைத்தேர்தலுக்காக திருமங்கலம் பெயர் இப்போது அடிபடுகிறது. என் வாழ்வில் முதல் முறையாக ஓட்டு போட போகிறேன். வோட்டர் ஐடி வாங்கி நான்கு வருடம் ஓடிப் போனாலும் இப்போது தான் எனக்கு ஓட்டு போட வாய்க்கிறது.

2004 லோக் சபா தேர்தலுக்கு அப்புறம் தான் என் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். காலேஜ்க்கு லீவ் போட்டு இதற்காக‌ ஊருக்கு போனேன். ஃபோட்டோ எடுத்து உடனுக்குடன் கொடுத்து விட்டார்கள். அதை எப்படா யூஸ் பண்ணலாம் என்று நானும் வெறித்தனமாகக் காத்துக் கொண்டிருந்தேன். வந்தது 2006 தமிழக சட்டமன்ற பொது தேர்தல்.
தேர்தல் தேதி மே மாதம் 9, 2006. ஆனால் எனக்கு Infosys ரிட்டன் டெஸ்ட் சரியாக ஒரு நாள் முன்னால் மே 8, சென்னையில். மே 7ஆம் தேதியே ஃப்ரெண்டோடு சென்னை வந்து திருவான்மியூரில் தங்கியிருந்தோம். கஸ்தூரிபாய் நகரில் உள்ள செயிண்ட் மைக்கேல் அகாடமியில் நடைபெற்றது. வழக்கம்போல் ஊத்திக் கொண்டது. ரிட்டன் டெஸ்ட் முடிஞ்சதும் துரத்தி விட்டார்கள். சரி, நைட்டே ஊருக்கு கெளம்பலாம் என்று அப்பாவிடம் கேட்டால் "அதெல்லாம் கெளம்பாதே, நாளைக்கு எலெக்சன். ஊரெல்லாம் கலவரமாக இருக்கும். நீ, கெளம்பி வர்றது அவ்வளவு நல்லது இல்லை" என்று ஓட்டு போட வேண்டும் என்ற என் கனவுக்கு சமாதி கட்டி பூ போட்டு விட்டார். யார் என்னுடைய நல்ல ஓட்டை கள்ள ஓட்டாக மாற்றினார்களோ?, தெரியவில்லை. இந்த தேர்தலும் என் ஓட்டுக்காக கொடுத்து வைக்கவில்லை.

அதற்கு பின் இப்போது தான். ஜனவரி 9ஆம் தேதி அதிரடியாய் கிளம்புவதற்கு தயாராய் இருக்கிறேன். ஆபிஸில் லீவ் எல்லாம் கூட அப்ளை செய்து விட்டேன். அரசியலை பொறுத்தவரை "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை" attitude தான் எனக்கு.

ஆசை எல்லாம் கியூவில் நின்று ஒரு நகத்தில் மை பூசிக் கொண்டு பேலட் பாக்ஸில் உள்ள பட்டனை ஸ்ட்ராங்காக அழுத்த வேண்டும் என்பது மட்டும் தான்!!!

ரெயில்வே டிக்கெட் PNR status செக் பண்ண SMS போதும்

இந்திய ரெயில்வே டிக்கெட் PNR status செக் பண்ண இனிமேல் ரெயில்வே ஸ்டேஷன், இன்டர்நெட் போக தேவையில்லை . ஒரு மொபைலும் அதில் கொஞ்சம் பேலன்ஸும் இருந்தால் போதும். போஸ்ட்பெயிடாக இருந்தால் அதுவும் தேவையில்லை. பில்லில் கட்டணத்தை வசூலித்து விடுவார்கள்.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்கள் டிக்கெட்டின் PNR நம்பரை 9773300000 மொபைல் நம்பருக்கு அனுப்பினால் போதுமானது. இதற்காக நீங்கள் எங்கும் ரிஜிஸ்டர் எல்லாம் பண்ண தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட‌ கட்டணம் (அது உங்கள் சர்வீஸ் Provider ஐ பொறுத்தது) மட்டும் உங்கள் பேலன்ஸில் இருந்து சுடப்படும்.

மேலதிக விபரங்களுக்கு கூகிளைக் கேட்கவும். http://www.google.co.in/mobile/default/sms/#

---------------------------------------------

வில்லு பாடல்கள் தரவிறக்கம்

ஆர் யூ க்ரேஸி ‍- திவ்யா
டாடி மம்மி - நவீன் மாதவ், மம்தா மோகந்தாஸ்
தீம்தனக்கா தில்லானா - தேவிஸ்ரீப்ரசாத், திவ்யா
ஹே ராமா - அமல்ராஜ், கோவை சரளா
ஜல்சா ஜல்சா - பாபா ஷேகால், ரீட்டா
ஜல்சா ரீமிக்ஸ்(The DSP Mix) - தேவிஸ்ரீப்ரசாத், பாபா ஷேகால், ரீட்டா
நீ கோபப்பட்டால் நானும் - சாகர்
வாடா மாப்புள - திப்பு, ரீட்டா, வடிவேலு

உங்களுக்கு வயதாகிக் கொண்டே போகிறதா?? சிம்பிள் டெஸ்ட்

அமெரிக்காவில் இருக்கும் ரோஸ்மேரி, கண் பரிசோதனைக்காக கண் பரிசோகரைப் பார்க்க கிளினிக் சென்று வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கிறார். ரோஸ்மேரிக்கு கிட்டதட்ட ஒரு 45 வயது இருக்கலாம். முகமெல்லாம் சுருங்கி, கண் உள்ளே சென்று பார்ப்பதற்கு பரிதாபமாய் இருந்தாள். ஆன்ட்டியில் இருந்து பாட்டியாகும் ஸ்டேஜில் ஏறக்குறைய இருக்கிறார். அப்படியே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்த அவர், தற்செயலாக டாக்டர் பெயரை பார்த்தார். சில விநாடிகளில் அவர் நினைவில் ஃப்ளாஷ் அடித்தது. இந்த பெயரை எங்கேயே கேள்விப்பட்டிருக்கிறோமே என்று ஆழ்ந்த யோசனையில் இறங்கினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
டாக்டர் எட்வின் டக்ளஸ் வேறு யாரும் இல்லை. மேரியுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர். நன்றாக வாட்டசாட்டமாக உடல்வாகுடன் அட்டகாசமான புன்னகையுடன் இருந்த எட்வின் முகம் மேரியின் மனதில் ஊஞ்சாலாடியது. அந்த காலத்தில் எட்வின் மீது க்ரஷ்ஷுடன் அவனுக்கு தெரியாமல் சைட் அடித்த ஜெகஜாலகுமாரி தான் இந்த மேரி. 25 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் எட்வினை சந்திக்க ரொம்ப ஆவலாக அவள் வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

அவள் முறையும் வந்தது. உள்ளே சென்று எட்வினை சந்தித்தாள். எட்வின், முன் தலையில் லேசான வழுக்கையுடன், உடல் சற்று பெருத்து, மூக்கு கண்ணாடி அணிந்து இருந்தான். பரவாயில்லை, இவனுடன் கம்பேர் பண்ணும்போது நான் கொஞ்சம் இளமையாகத் தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள். சில நிமிட தயக்கத்திற்கு பிறது மேரி தான் ஆரம்பித்தாள்.

"எட்வின், என்னை நியாபகம் இருக்கா??? சின்ன வயதில் நீ என் க்ளாஸில் தான் இருந்தாய்" என்று கேட்டாள் மேரி. அதற்கு எட்வின் சொன்ன பதிலை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவள் முகம் சுறுங்கி அவமானத்தால் தலையைக் குனிந்து கொண்டாள். அதற்கு அடுத்து அவள் எதுவும் பேசவில்லை.

எட்வின் சொன்ன பதில் இது தான், "அப்படியா!!! அப்ப நீங்க எனக்கு எந்த சப்ஜெக்ட் க்ளாஸ் எடுத்தீங்க".

Moral of the Story: தன் ஒத்த வயதுள்ள ஒருவரை பார்க்கும்போது "அவனை/ளை விட நான் தோற்றத்தில் மிகவும் இளமையாக இருக்கிறேன்" என்று நீங்கள் நினைத்தால் சந்தேகமே இல்லை, நீங்கள் தான் வயதான தோற்றத்துடன் இருக்கிறீர்கள்.

***********************************

அப்படி இப்படி என்று எழுத ஆரம்பித்து ஒரு மாதம் ஓடிவிட்டது. என்னுடைய blogger template ஐ மாற்றிவிட்டு புதிதாக ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளேன். முன்னதை விட இது சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்

புத்தகத்தின் முகப்பு அட்டை

வாயில் ஒரு டேபிளையும், அதில் ஒரு பெண்ணையும் 10மீட்டர் தூரம் சீக்கிரம் கடந்தவரின் சாதனை ஃபோட்டோ(எப்படியெல்லாம் சாதனை பண்ணுராய்ங்கன்னு பாருங்கப்பா!!!)

நம்மூர் பொய்க்கால் குதிரை வேடத்தில் நடந்த ஓட்டபோட்டியில் சீக்கிரம் கடந்த‌வரின் சாதனை ஃபோட்டோ (இதெல்லாம் ஒரு சாதனையான்னு கேக்கக்கூடாது, ஆமா)

சீக்கிரமாக சூட்கேஸிலிருந்து வெளிவந்து சாதனை படைத்த பெண்ணின் ஃபோட்டோ (ரொம்ப வளைந்து கொடுப்பது பெண்கள் தான் என்று இவங்கள பாத்து தான் சொன்னாங்களோ???)

அதிக எடையை தாடையில் தாங்கி சாதனை படைத்த புண்ணியவானின் ஃபோட்டோ (அப்படியே கொஞ்சம் எசகு பிசகாயிருந்துச்சுன்னா, ஸ்ட்ரெய்ட்டா டிக்கெட் தான்)

வாயினுள் பெரிய தேளை விட்டு சாதனை பண்ணிய டக்ளஸின் ஃபோட்டோ (ஏன் சார், தேள் எல்லாம்.. நீங்க ஏன் நெக்ஸ்ட் டைம் மலைப் பாம்பு ட்ரை பண்ணக்கூடாது??)

சூடான தட்டுகளில் நீண்ட தூரம் ஓடியவரின் ஃபோட்டோ (எங்க ஊர்ல மே மாதம் நேஷனல் ஹைவேல செருப்பு போடாம ரெண்டு கிலோமீட்டர் ஒடுனா ஏன் நிக்காம நடந்தாலே சாதனை தான்!!!)
அதிகமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பெண் (அப்படி சாதனை பண்ணியும் எங்க ஊர் பொண்ண விட ரொம்ப சுமாராத் தான் இருக்கீங்க..)

அதிவேகம் கொண்ட‌ பவர் ட்ரில்லில் தொங்கி ஒரு நிமிடத்தில் அதிகமாக சுற்றிய நண்பர் (உங்க தலை முதுகு பக்கம் திரும்பிகிச்சுனு சொன்னாங்களே, உண்மையா??)

உலகத்திலே மிகவும் குள்ளமான ஆண் மற்றும் நீ.....ண்ட கால்களைக் கொண்ட பெண்(ஜோடி நம்பர் ஒன்!!)

மிக மிக மிக சிறிய இடை உள்ள பெண் (கொடி இடைன்னு இதத் தான் சொல்றாங்களோ??)

வித்தியாசமான டயட் (அப்படி என்னத்த சாப்பிடுறாங்களோ?)

இதை இமெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி. ஃபோட்டோவைக் க்ளிக்கி பெரிதாகக் காணவும். இந்த‌ புக்கை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

வெற்றி வேட்கையில் இந்தியா!!! சச்சின், யுவராஜ் அதிரடி.

சனிக்கிழமை, நான் வீட்டில் வசதியாக படுத்துக் கொண்டு மேட்ச் பார்க்கும் போது மட்டும் வரிசையாக எல்லாரும் அவுட் ஆகி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். போங்கடா, நீங்களும் உங்க மேட்சும் என்று தான் தோன்றியது நேற்று ஸ்ட்ராஸ்ஸூம், கோலிங்வுட்டும் மொக்கையாக விளையாடி இருவரும் சதம் அடித்தபோது. கரெக்ட்டா, நான் டி.வி. ஆஃப் பண்ணி மதியம் குட்டித் தூக்கம் தூங்கிய போது எங்கிருந்து தான் வீரம் வந்தது என்று தெரியவில்லை ஷேவாக் அடி அடியென்று இங்கிலாந்தை துவைத்துக் கொண்டிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு ராசி. இது ஒரு உதாரணம் மட்டுமே. எப்போது எல்லாம் நான் எல்லா வேலையையும் விட்டு விட்டு மேட்ச் பார்க்க உட்கார்கிறேனோ அப்போது எல்லாம் இந்தியா கேவலமாக விளையாடி தோற்று விடும். தோனி கேப்டன் ஆன பிறது அந்த துரஅதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு போய் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் மேட்ச், இங்கிலாந்த்வுடனான ஒன்‍ டே சீரியஸ் உண்மையிலான அருமையான ஆட்டங்கள் இந்தியாவிடமிருந்து வெளிப்பட்டது.

இன்று காலையில் ஆஃபிஸ் கிளம்பும்போது 5 ஓவர் மேட்ச் பார்த்துவிட்டு தான் வந்தேன். அப்படி ஒரு கோபம், ஆற்றாமை, டிராவிட் மேல். எவ்வளவு நம்பிக்கை, எல்லாத்தையும் கேவலமான பேட்டிங்கில் வீணடித்துவிட்டார். அதனால் கோபத்துடன் தான் இந்த பதிவை எழுதினேன்.

அதற்கு பின் வந்தார். என்னுடைய ஹீரோ, ஆல் டைம் ஃபேவரைட் சச்சின். Match winning effort. எப்போதுமே சச்சின் மேல் ஒரு பழி, இரண்டாவது இன்னிங்ஸ், செகண்ட் பேட்டிங்கில் ஒழுங்காக விளையாடாமல் சொதப்பி விடுவார் என்று. அந்த கரும்புள்ளியை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒன் டே மேட்சிலும் செஞ்சுரி போட்டு நீக்கினார். இப்பொது இங்கிலாந்த்துக்கு எதிரான அருமையான செகண்ட் இன்னிங்ஸ் செஞ்சுரி. வாழ்க சச்சின். அதற்கு உறுதுணையாக யுவராஜின் பொறுப்பான ஆட்டம். கங்குலிக்கு சரியான replacement.

பீட்டர்சன் என்ன பாவம் செய்தாரோ தெரியவில்லை. அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் மீதும், டீம் பெர்ஃபார்மன்ஸ் மீதும் தவறு ஏதும் இல்லை. 20 நாள் பசியோடு திரியும் சிங்கம் போல் வெற்றி வேட்கையோடு இருக்கும் இந்தியாவின் முன் அவர்கள் திட்டம் ஏதும் பயனளிக்கவில்லை. Very sorry Pieterson!!!

இந்த மேட்சில் இங்கிலாந்தின் ஸ்ட்ராஸ் க்கு ஆட்டநாயகன் விருது வழங்கினாலும் நான் வருத்தப்பட மாட்டேன். இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி என்பது சாதாரமான விஷயம் இல்லை. ஆனால் இவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனதில் தான் எனக்கு வருத்தம். அவருடைய வருத்ததைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதற்கும் அவர் கொடுத்து வைக்கவில்லை என்று தெரிகிறது. ஆட்டநாயகனாக ஷேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Again very sorry Strauss!!

Kudos to Shewag, Sachin and Yuvraj.

என்ன ஆச்சு டிராவிட் ?????

ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு சகாப்தம். கிரவுண்டில் இறங்கினால் மேட்ச்சை காப்பாற்றாமல் திரும்ப மாட்டார் என்று இந்தியாவின் கடைக்கோடி ரசிகனும் மட்டுமில்லாமல் எதிரணி வீரர்களும் பயம்கலந்த‌ நம்பிக்கை வைத்துள்ள ஒரு வீரர். பல ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் மேட்ச்களை நமக்கு சாதகமாக மாற்றிய சிறந்த வீரர். தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் செஞ்சுரிகள் மற்றும் ஐந்து இரட்டை சதங்கள், அதுவும் மிகக் குறைந்த டெஸ்ட் மேட்ச் இடைவெளியில். இந்த இரட்டை சதங்களால் வெளிநாட்டில் (ராவல்பிண்டியிலும், அடிலெய்டிலும்) வரலாற்று சிறப்புமிக்க‌ வெற்றிகள் நமக்கு சாத்தியமாயின.

தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து மேட்சிலும் உங்களால் மட்டுமே மேட்சை காப்பாற்ற முடியும் என்று ஸ்ட்ராஸ்(இரண்டு இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்தவர்) சொல்லுமளவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடிய ஒரு வீரர்.

ஆனால் கொஞ்ச நாளா உங்களுக்கு என்ன ஆச்சு டிராவிட்????? உங்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான டெஸ்டிலும் ஏன் இந்த அளவிற்கு சொதப்பிக் கொண்டிருக்கீங்க??? எங்க போச்சு உங்க அபரிதமான கிரிக்கெட் ஃபார்ம்??? லக்ஷ்மணுடன் நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 350 ரன் (கொல்கத்தா, 2001) பார்ட்னர்ஷிப், மீண்டும் திரும்ப வருமா??? ஃபாலோ‍ஆன் மேட்சையும் நமக்கு சாதகமாக மாற்றிய போர்க்குணம் எங்கே டிராவிட்?? "The WALL" இன்னும் உங்களுக்கு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

இங்கிலாந்து மேட்சைக் காப்பாற்றி கொடுப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவன். வழக்கம் போல் இப்போதும் ஏமாற்றிவிட்டீர்கள். ஷேவாக் அமைத்துக் கொடுத்த பாதைக்கு நீங்கள் ஒரு 100 ரன் பார்ட்னர்ஷிப்க்கு கைகொடுத்து இருந்தால் வெற்றிக்கனி நமக்கு மட்டும் தான். ஒரு வேளை இந்த போட்டியில் இந்தியா தோற்றால் அதற்கு நீங்கள் தான் முழுமுதல் பொறுப்பு. ஏனென்றால் இங்கிலாந்து 11 பேருடன் விளையாடுகிறது, ஆனால் நாம் 10 பேருடன் தான் விளையாடுகிறோம், உங்களைத்தவிர. (இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 7 ரன் மட்டுமே)

ஏற்கெனவே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் உங்கள் இடம், ரெய்னாவால் நிரப்பப்பட்டது. டெஸ்ட் போட்டிகளிலும் உங்கள் இடத்திற்கு பத்ரிநாத், ரெய்னா, உத்தப்பா, ரோஹித் சர்மா, முரளி விஜய் என்று பல பேர் இலவு காத்த கிளி போல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை கங்குலி போல் தேர்வுக்குழு பந்தாடாமல் சீக்கிரம் பழைய ஃஃபார்முக்கு வந்து இங்கிலாந்து மூக்கை உடைக்க வேண்டும் (அடுத்த மேட்சிலாவது) இல்லையென்றால் சீக்கிரம் ரிட்டையர்டு ஆகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சராசரி கிரிக்கெட் ரசிகனாக ஆசைப்படுகிறேன்.

இந்தியா இந்த மேட்சில் வெற்றி பெற்று விட்டது. அது தொடர்பான எனது பதிவின் சுட்டி
வெற்றி வேட்கையில் இந்தியா!!! சச்சின், யுவராஜ் அதிரடி.

சானியா மிர்சாவும் டாக்டர் பட்டமும்


சானியா மிர்சாவுக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தன் மூன்று வயது குழந்தையை கூட்டிக் கொண்டு பீச் சென்றார் அப்பா. அங்கே நிறைய சிறுவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த அந்த குழந்தை "எனக்கும் பட்டம் வேண்டும்" என்று அழ ஆரம்பித்தது. அதற்கு அந்த அப்பா, "என் செல்லம்ல!!! அழாதேடா, ஒண்ணும் கவலைப்படாதே, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழத்தில் சொல்லி நல்ல பெரிய டாக்டர் பட்டமாக வாங்கித் தர சொல்றேன்" என்றாராம்.

இப்படி ஆகிப் போச்சு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கொடுக்கும் டாக்டர் பட்டம். இது நேற்று ஒரு பத்திரிக்கையில் வந்த ஜோக். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இப்படி எல்லாம் கொடுப்பதால் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்களா இல்லை இவர்களுக்கு எல்லாம் கொடுப்பதால் பல்கலைக்கழகங்கள் பெருமை தேடிக் கொள்கின்றனவா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ஒருவர் எப்போது டாக்டர் பட்டம் வாங்க தகுதியானவர் என்றால் ஒரு துறையில் சிறந்து விளங்கி, அத்துறையின் எல்லா ஏரியாக்களிலும் செம்புலமை பெற்று, தனக்கு கீழ் நாலு பேரை அந்த துறையில் வழிநடத்தி செல்லும் அளவுக்கு சிறந்தவராக இருக்க வேண்டும். உதாரணமாக, கமலஹாசனுக்கு சினிமாவிற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ, பத்மபூசன், மூன்று முறை தேசியவிருது வாங்கியவருக்கு டாக்டர் பட்டம் என்பது மணிமகுடத்தில் பதிக்கபட்ட மற்றுமொரு பவளக்கல். அதே போல் தான் கலைஞர் அவர்களுக்கு தமிழுக்காக வழங்கப்பட்ட டாக்டர் பட்டமும்.
ஆனால் சம்ப‌ந்தமேயில்லாமல் போன வருடம் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஷங்கருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமை தேடிக் கொண்டது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம். என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் டாக்டர் பட்டத்திற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்கள். சந்தேகமே இல்லாமல் ஷங்கரை விடவும் திறமையான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். விஜயை பற்றி சொல்வதற்கு எல்லாம் ஒண்ணும் இல்லை. இரண்டு வருடம் முன்னால் நடிகர் சத்யராஜ்க்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி தன்னை பெருமைப் படுத்திக் கொண்டது.

சானியா மிர்சா ஒன்றும் எனக்கு தெரிந்து டென்னிஸ் விளையாட்டில் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. தற்போது உலக டென்னிஸ் தரப்பட்டியல் ரேங்கில் 100க்கும் மேலே. முழுமூச்சாக தன்னுடைய நேரம் முழுவதையும் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரை காதலிப்பதில் செலவழிக்கிறார். 33ஆவது ரேங்கை ஒரு வாரம் தக்க வைத்துக் கொண்டது மட்டுமே அவர் வாழ்நாளில் செய்த ஒரே சாதனை. பட்டம் வாங்கியதும் அவர் கொடுத்த பேட்டியைப் படித்த என் ரூமில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதாவது "அவருக்கு டென்னிஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும், டாக்டருக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசையாம். ஆனால் டென்னிஸ் விளையாடப் போனதால் டாக்டருக்கு படிக்க முடியவில்லையாம். தற்போது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மூலம் ரெண்டுமே நிறைவேறிவிட்டதாம்". என்ன கொடுமை சார் இது?????? மருத்துவத்தில் வாங்கும் டாக்டர் பட்டத்திற்கும், ஒரு துறையில் சிறந்து விளங்குவற்கான கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்க்கு எல்லாம்......

என்னைப் பொறுத்தவரை எல்லா பல்கலைக்கழகங்களும் யாருக்கு வேண்டுமானாலும் டாக்டர் பட்டம் வழங்கலாம் என்ற சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் அல்லது யாருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் மற்றும் அதற்கான காரணங்களை வரையறுப்பதில் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் நாட்டில் கலைமாமணிகள் போல டாக்டர்களும் கூடிப் போவார்கள்.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி


நேற்று வழக்கம் போல் ஆபிஸில் இருந்து சீக்கிரம் ரூம்க்கு வந்துவிட்டேன். என்னுடைய காலேஜ் தோழி ரொம்ப நாள் கழித்து கால் பண்ணியதால் ஃபோனில் சுமார் 20 நிமிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய சக ரூம்மேட் வந்து "மச்சான், விமல் இருக்கான்ல, அவன‌ lay off பண்ணிட்டாங்கடா, இப்ப அவன் எங்க இருக்கான்" என்று கேட்டான். நான் அநியாயத்துக்கு அதிர்ச்சியாகி "டே, என்னடா சொல்ரா????? அவன ஆளைக் காணோம்டா... நான் வரும்போது ரூம் காலியா தான் இருந்தது. உனக்கு யார் சொன்னா???" என்று நான் கேட்டேன். அதற்கு அவன் "விமல் தான்டா எனக்கே ஃபோன் பண்ணி சொன்னான்" என்றான். நேற்று இரவு முழுவதும் யாரும் யார்கூடவும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு வித நிசப்தம் வீடு முழுவதும். விமலை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது.

நான் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் என்னுடைய team mates எல்லாருக்கும் ஃபோன் பண்ணி என்னால் முடிந்த அளவு அவர்களுக்கும் பீதியைக் கெளப்பினேன். அப்போது அவ‌ர்கள் சொன்ன விஷயம் மேலும் எனக்கு அதிர்ச்சியை கொடுத்த போதிலும் ஒரு வகையில் கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. அது இது தான் "நான் ஊருக்கு சென்ற போன வாரம் என்னுடைய ப்ராஜெக்ட்டில் இருந்து ரெண்டு பேருக்கு கல்தா கொடுத்து விட்டனர்." கல்தா கொடுத்த விஷயமே நேற்று இரவு அவர்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரியும். இனிமேல் எங்க ப்ராஜெக்டில் கொஞ்ச நாள் எதுவும் கல்தா இருக்காது என்று நம்ப‌த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட எங்களின் தீவிர விசாரணையில் தெரிய வந்த விஷயம். "நடந்து முடிந்த அப்ரைஸலில் ஆவரேஜ் ரேட்டிங் வாங்கிய அனைவரையும் முதுகில் குத்தி வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்." நான் ஓரளவுக்கு நல்ல ரேட்டிங் + இன்னும் எனக்கு இரண்டு வருடம் அமெரிக்கா சென்று வர L1B விசா இருக்கின்றது. இது போன்ற காரணங்களினால் என்னை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் சில சமயங்களின் அடிவயிறு கலங்கத்தான் செய்கிறது.

எல்லாருடைய தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால், என்னை போன்ற ஆட்கள் எல்லாரும் கீழே உள்ள வேலைக்குத் தான் செல்ல வேண்டும்.
தசாவதாரத்தில் கமல் மாஞ்சு மாஞ்சு சொன்ன கேயாஸ் தியரி படம் பாக்கும் போது ஒண்ணும் விளங்கவில்லை. இப்போது தான் புரிய ஆரம்பித்து இருக்கின்றது. அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் விழும் அடி சென்னையில் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு வலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

அப்பாவிடம் சொல்லி ஏதாவது ஒரு இன்ஜினியரிங் காலேஜில் லெக்சரராக போய் சேரவேண்டும். அது தான் என் FUTURE Plan.

தமிழ்மணம், தமிளீஷ், இட்லிவடை, லக்கிலுக் மற்றும் பலர்


தமிழ் பதிவுலகின் கத்துக்குட்டியாக‌ இப்போது தான் அறிமுகம். 2006 டிசம்பரில் இருந்து பதிவுலகம் எனக்கு பரிச்சயம். இட்லிவடை தான் நான் தெரிந்து கொண்ட முதல் தமிழ் வலைப்பதிவு. உண்மையைச் சொல்லப் போனால் சினிமா செய்திகளுக்காக மட்டும் தான் இட்லிவடையைப் படிக்க ஆரம்பித்தேன். போக போக சுடச்சுட அரசியல் செய்திகளுக்கும், நாட்டுநடப்பு செய்திகளுக்காகவும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பஞ்ச் கமெண்டை ரசித்து கொண்டிருக்கும் நான், தற்போது சுவாரஸ்யம் குறைந்து வருவது சின்ன வருத்தமே.

எனக்கு சரியாக நியாபகம் இருந்தால், 2007 மார்ச்சில் இருந்து லக்கிலுக்கின் பதிவுகளை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவரின் அபார எழுத்து நடை, போகிற போக்கில் எல்லாரையும் நையாண்டி பண்ணும் குசும்புத்தனம், முக்கியமாக சினிமா விமர்சனம் போன்றவை நான் ரசிப்பவை. பின்ந‌வீனத்துவம்(அப்படினா என்ன என்று சத்தியமாக தெரியாது), காண்டு க‌ஜேந்திரன், பார்ப்பன பதிவுகள் சம்பந்தமாக இருந்தால் அந்த பக்கம் நிழலுக்குக் கூட ஒதுங்குவதில்லை. ஏனென்றால் தலைகீழாக படித்தாலும் ஒரு மண்ணும் எனக்கு புரிவதில்லை. 2007 ஜூன் சமயத்தில் பதிவுலகம் முழுவதும் பதிவுலகமே இரண்டு பிளவாக இருந்தது போல எனக்கு தோன்றியது. காரணம் தமிழச்சி பதிவுகள். அப்போது எல்லாம் கூகிள் ரீடரை ஓபன் பண்ணினாலே தலை கிர்ரென்று சுத்தும்.

அப்போது இருந்த பதிவுலக‌ அரசியலில் தான் வசந்தம் ரவி ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்று நினைக்கிறேன். இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. நான் ரெகுலராக செல்லும் இன்னொரு வலைப்பதிவு தேன்கிண்ணம். இது ஒரு தமிழ் சினிமா பாடல்களின் விக்கிப்பீடியா. சிறுகதை அதுவும் காதல் கதைகளுக்கு நான் விரும்பிப் படிப்பது மனசுக்குள் மத்தாப்பு. அழகான கவிதை போன்ற வலைத்தொகுப்பு. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம், குசும்பு போன்ற வலைகளுக்குச் சென்றால் வாய்விட்டு சிரிக்கலாம்.

முரளிகண்ணண் அவர்களின் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை மிகவும் விரும்பிப் படிப்பேன். சுரேஷ்கண்ணன் அவர்கள் பதிவுகளும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றது. அதிஷாவின் பதிவுகளையும் ரெகுலராக படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய எழுத்து நடையில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது. உண்மைத்தமிழன் பதிவுகளுக்குச் சென்றால் திரும்பி வர இரண்டு நாள் ஆகும். ஆனால் அவர் பதிவுகள் திருப்தியாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. இந்த பதிவுகள் தவிர கார்க்கி, வெட்டிப்பயல், மனசாட்சி போன்றோரின் வலைகளுக்கு ரெகுலராக விசிட் அடிப்பது வழக்கம். புதிதாக வலையுலகத்துக்கு வந்துள்ள வானவில் வீதியில் எழுதும் கார்த்திக்கின் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.

எல்லா பதிவர்களுக்கும் தன்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிகம் இருந்தால் தான் மதிப்பு என்ற எண்ணம் ஏன் தோன்றியது என்று எனக்கு புரியவில்லை. யாராவது ப்ளீஸ் விளக்கவும்.

இவர்களைப் பார்த்து நாமும் ஏதாவது கிறுக்கலாம் என்று போன வருடம் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தேன். தமிழில் டைப் பண்ணுவதற்கு கூகிள் தமிழ் ட்ரான்ஸ்லேட்டர் தான் யூஸ் பண்ணினேன். தமிழ்மணத்தில் இணைக்க முயற்சி செய்த போது யூனிகோடு அடர்த்தி இல்லை என்று நிராகரித்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அத்துடன் அந்த முயற்சியை அப்படியே விட்டுவிட்டேன்.

இப்போது ரொம்ப காலம் அநியாயத்துக்கு வெட்டியாக இருப்பதால், எப்படியே எழுதியே தீர வேண்டு என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியதில் நானும் இப்போது so called வலைப்பதிவர். Thanks to TamilEditor.org and thagadoor எழுதி. ஒரு வழியாக என் வலைப்பூவை தமிழ்மணத்திலுன், தமிளீஷிலும் இணைத்து விட்டேன். போதாக்குறைக்கு என்னுடைய மூன்று பதிவுகள் தமிளீஷில் பாப்புலர் ஆகிவிட்டன. அதனால் வலைக்கு வரும் விசிட்டர்ஸ் ஹிட் மளமளவென்று கூடிக் கொண்டே போகிறது. ஆனால் இது ஒரு வகை போதையை உண்டு பண்ணுகிறது. வெட்டியாக உட்கார்ந்து இருக்கும்போது எழுதினால் அது ஓகே. ஆனால் ஹிட் கூடிக்கொண்டே போகும் போது ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த எண்ணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும், இந்த போதை தலைக்கு மேல் ஏறக்கூடாது என்று எல்லாம் வல்ல பாடிகாட் முனீஸ்வரனை..., இல்ல சே.. மகர நெடுங்குழைநாதனை.., இதுவும் இல்ல சே.. சிம்பிளா இறைவனை வேண்டிக் கொள்கிறேன். (இதுக்குதான் அதிகம் வலையில் மேயக்கூடாதுங்கிறது)

மும்பை தீவிரவாத தாக்குதல் - மக்களின் கோபம்

ராஜ் தாக்கரேக்கு எதிரான கோபம்

Related Posts with Thumbnails