கவிதையா? கதையா? காத்திருக்கிறேன்!

வீட்டு முற்றத்தில் பூத்த ஒற்றை ரோஜா மொட்டு

புதிய டூ வீலரின் பில்லியன் சீட்

பூஜையறையின் குத்துவிளக்கு

ஃபோட்டோ இல்லாத புதிய ஃபோட்டோ ஃப்ரேம்

செஸ்போர்டின் எதிரே காலியான குஷ‌ன் சீட்

கிங்க் ஃபிஷர் ஃபில்டர் சிகரெட் பாக்கெட்

ஃபிரிட்ஜில் ரெண்டு கிங்ஃபிஷ‌ர் பீர் பாட்டில்

டேபிளில் பெட்காஃபி குடிக்க ரெண்டு புதிய மக்

தின்று தின்று வளர்த்த தொப்பை

விசாலமான இரட்டை படுக்கை அறை

அனைத்தும்
முறையே
வாங்குவ‌த‌ற்கும்
அணைப்பதற்கும்
ஒளிர்வதற்கும்
நிர‌ப்புவ‌த‌ற்கும்
ஆடுவதற்கும்
நிறுத்துவ‌த‌ற்கும்
உடைப்பதற்கும்
கொடுப்ப‌த‌ற்கும்
க‌ரைப்ப‌த‌ற்கும்
க‌ரைவ‌த‌ற்கும்
காத்திருக்கிறேன்
உன‌க்காக‌
காத‌லி!
சீக்கிர‌ம்
காத‌லி!

********************************(ப்ளீஸ், என்னை யாராவது தடுத்து நிறுத்துங்க... என்னை பார்த்தா எனக்கே பயமா இருக்கு.)
********************************

பழைய காதலும், புதிய காதலர்களும்!

கார்த்திக், "சுப்பு, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கி சொல்ல முடியல. முடிஞ்சா நாளைக்கி சொல்றேன். பஸ் வந்திடுச்சி.. பை"

சுப்புவுக்கு லேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது. "நானும் உன்கிட்ட சொல்லணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நாளைக்கி பேசலாம். பை டா"

இர‌வு 11 ம‌ணி தாண்டி ஓடிக்கொண்டு இருக்கும்போது திடீரென‌ ஹேங்க் ஆகிவிட்ட‌து. யெஸ். சுப்புவுக்கு உல‌க‌ப் ப‌ந்து காலுக்கு கீழே ந‌ழுவி விழும் போல‌ ஒரு ப‌ர‌வ‌ச‌ம். யெஸ் யெஸ். கார்த்திக்கிட‌ம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். இத்த‌னை நாளாய் அவ‌னிட‌ம் சொல்லிவிட‌ வேண்டும் என‌ துடியாய் துடித்துக் கொண்டிருந்த‌ மூன்று வார்த்தைக‌ள். "மின்னல் ஒரு கோடி எந்தன் வழி தேடி வந்ததே... உன் வார்த்தை தேன் வார்த்ததே" என ஹரிஹரன் பெண்குரலில் சுப்புவுக்காக பாடிக் கொண்டிருந்தார். ப‌ச‌ங்க‌ ப‌ச‌ங்க‌ தான், லவ் ப்ரோப்பஸ் பண்றதுல்ல . ஆனா, "I Love U"ன்னு சிம்பிளா எஸ்.எம்.எஸ்ல‌ முடிச்சிட்டானே? கால் ப‌ண்ணிப் பார்க்க‌லாம்.

"ஹாய் டா"

"ஹாய் சுப்பு, என்ன திடீர்ன்னு இந்த நேரத்துல ஃபோன்?"

(அடப்பாவி, ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறான். ஒருவேளை நான் பேசணும்ன்னு வெயிட் ப‌ண்றான்னோ?)

"ஒண்ணும் இல்ல‌. உண்மையா அந்த‌ எஸ்.எம்.எஸ்?"

"எது?"

"இப்ப அனுப்புனேல்ல‌. அந்த‌ I love you எஸ்.எம்.எஸ்"
ஹ்ஹா ஹா ஹ்ஹா என அவ‌ன் அதிர‌ அதிர‌ சிரித்த‌து ஃபோன் வ‌ழியே அவ‌ளுக்கு இடியாக‌ வ‌ந்த‌து.

"அத‌ ஃபுல்லா ப‌டிக்க‌லையா? ஃப‌ர்ஸ்ட் அத‌ ப‌டிச்சிட்டு வா. நான் லைன்ல‌யே இருக்கேன்"

I love U
Not only U, Also V, W, X, Y,Z
Sender:
Karthik
+9198888888888

அவ‌ளுக்கு வெட்க‌ம், அவ‌மான‌ம் எல்லாம் ஒரே நேர‌த்தில் பிடுங்கித் தின்ற‌து. ஒரே செக‌ண்டில் ஒரு வ‌ழியாக‌ சமாளித்துக் கொண்டு, அவ‌ளும் ஃபோனில் சிரித்தாள்.

"ஃபுல்லா ப‌டிக்காம‌ தான் ஃபோன் ப‌ண்ணியா?"

"இல்ல‌.. ஆமா.."

"ஆமாவா, இல்லியா?"

"இல்ல‌ எஸ்.எம்.எஸ் வ‌ந்த‌துல‌, அதான் நீ முழிச்சி இருப்பேன்னு கால் ப‌ண்ணேன்." உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா...

"இதையே ஏன் முத‌ல்ல‌யே சொல்லாம, உண்மையான்னு கேட்ட‌?" ம‌ட‌க்கியே விட்டான்.

"ச்சும்மா தான். உன‌க்கு இந்த‌ எஸ்.எம்.எஸ் யாரு அனுப்புனா?"

"உன் ஃப்ர‌ண்ட் காய‌த்ரி தான் அனுப்புனா. ஆனா நான் உன்னை மாதிரி எல்லாம் தாம் தூம்னு குதிக்க‌ல‌ப்பா"

"அவ‌ளா??? அவ‌ எதுக்கு உன‌க்கு அனுப்புனா?"

"ஃபார்வ‌ர்டு எஸ்.எம்.எஸ் தான. யார் யாருக்கு அனுப்புனா என்ன‌?"

"ச‌ரி, நான் என்ன‌ தாம் தூம்ன்னு குதிச்சேன். நீ எப்ப‌டி அப்ப‌டி சொல்ல‌லாம்?"

"குதிச்ச in the sense உன்ன மாதிரி நான் அவ‌ளுக்கு ஃபோன் ப‌ண்ணி உண்மையா?, யாரு அனுப்புனான்னு எல்லாம் ஃபோன் ப‌ண்ணி டார்ச்ச‌ர் ப‌ண்ண‌ல‌"

"டார்ச்ச‌ரா? ஸோ, ஃபைன‌ல்லா நான் என்ன‌ சொல்ல‌ வ‌ர்றேன்னு உன‌க்கு புரிய‌ல‌?" குஷி ப‌ட‌த்து மொட்டை மாடி சீனில் ஆக்ரோஷ‌மாக‌ இருந்து திடீரென‌ சென்டிமென்டில் க‌ண்ணீர் உடையும் ஜோதிகா போல் ஆனாள்.

"புரிய‌லையே. நீ சொன்னா தான புரியும்"

"உன‌க்கு புரியும். ஆனா ந‌டிக்கிற‌. ஓ.கே. காலேஜ் முடிஞ்சி கெள‌ம்பும்போது ஏதோ முக்கிய‌மா சொல்ல‌ணும்ன்னு சொன்னியே. என்ன‌ அது?"

"ஓ.. அதுவா.. நீ கொஞ்சம் குண்டு தான், ஆனா இன்னிக்கி போட்டிருந்த சுரிதார்ல‌ ரொம்ப‌ குண்டா இருக்கிற‌ மாதிரி இருந்த‌, அதான் இனிமே அத‌ போடாத‌ன்னு தான் சொல்ல‌ நென‌ச்சேன். இது முக்கியாமான விஷயம்ன்னு நான் சொல்லலை. டவுட்டா இருந்த மேல போய் படிச்சி பாரு ஸாரி, நல்லா யோச்சி பாரு"

"ஓ. இத‌த் தான் சொல்ல‌ணும்னு நென‌ச்சியா?

"ஆமா.."

"நானும் ஏதோ சொல்ல‌ணும்ன்னு சொன்னேன்னே, அது என்ன‌ன்னு கேட்க‌ மாட்டியா?"

"முக்கிய‌மான‌ விஷ‌ய‌மா இருந்தா தான் நீயே சொல்லி இருப்பீயே?"

"ஓ, யெஸ்.... இப்ப‌க் கூட‌ கேட்க‌ மாட்டில்ல‌"

"என்ன‌ தான் உன‌க்கு ப்ராப்ள‌ம்? ஏன் இப்ப‌டி சுத்தி வ‌ளைச்சி டார்ச்ச‌ர் ப‌ண்ற? ச‌ரி சொல்லு"

"ஒண்ணும் இல்ல சாமி. யாரும் உன்னை டார்ச்ச‌ர் ப‌ண்ண‌ல‌.. போய் தூங்கு"

"ஹேய், ஏன் ரொம்ப‌ அப்செட்டா இருக்க‌. கூல் ட‌வுன். Digital Communication assignment முடிச்சிட்டியா?"

"ப்ளீஸ் கார்த்திக், நாம‌ நாளைக்கி பேச‌லாம். குட் நைட்"

"ஏய் சுப்பு........"

டிங்.. டிங்.. டிங்..

"ஏன் இப்ப‌டி இவ‌ன் டார்ச்ச‌ர் ப‌ண்றான். வேணும்ன்னே ப‌ண்றான்னா? இல்லை என்ன‌ சுத்த‌ விடுறான்னா?" க‌ர்ச்சீப்பை எடுத்து க‌ண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

1
New Message
Recieved

ஓப‌ன் ப‌ண்ணினாள்.

"I Love you"

Sender:
Karthik
+919888888888

நாலுவாட்டி மேலேயும் கீழேயும் ஸ்க்ரோல் ப‌ண்ணி பார்த்தாள். உண்மையிலேயே ம‌றுப‌டியும் ஆன‌ந்த‌த்தில் குதிக்க ஆர‌ம்பித்தாள். "ஆனா நான் கால் ப‌ண்ண மாட்டேன். என்னை எப்ப‌டி அழ‌ வ‌ச்சான் ராஸ்க‌ல்" செல்போன் டிஸ்பிளே செக் ப‌ண்ணிக் கொண்டே இருந்தாள்.

அவ‌ன் கால் ப‌ண்ண‌வே இல்லை. அவ‌ளுக்கு இருப்பு கொள்ள‌வில்லை.

2 நிமிட‌ம் 42 செக‌ண்ட் க‌ழித்து, சுப்புவே ப‌ண்ணினாள்.

"என்ன‌ சுப்பு?"

ஐய‌ய்யோ, ம‌றுப‌டியும் ஒண்ணுமே ந‌ட‌க்காத‌ மாதிரி கேக்குறான்னே. ம‌றுப‌டியும் இன்பாக்ஸை செக் ப‌ண்ணினாள். அவ‌ன் தான், அவ‌னே தான். அப்புற‌மும் ஏன்?

"இல்ல‌.. எஸ்.எம்.எஸ்?"

"ஆமா. இப்ப‌ அதுக்கு என்ன‌?"

"......."

"என்ன‌டி, இப்ப‌ உண்மையான்னு கேட்க‌ மாட்டியா? இப்ப‌டி சிம்பிளா முடிக்கிற‌துக்கு ஏன் அவ்வ‌ள‌வு எமோஷ‌னல் ஆன‌. இடியட்,"

"நாயே, யாரை பார்த்து டி போட்டு கூப்பிடுற‌.. நான் உன்னை ல‌வ் பண்றேன்னு யாரு சொன்னா?"

"அப்ப‌டியா, ஸாரி, அது காய‌த்ரிக்கு அனுப்ப‌ வேண்டிய‌து. உனக்கு அனுப்பிட்டேன்"

"நேர்ல‌ பாக்கும்போது, செருப்பால‌ அடிப்பேன்"

(ச‌ரி போங்க‌ பாஸ், அந்த மொக்கை(கடலை?)இன்னும் 2 ம‌ணிநேர‌ம் ஃபோன்ல‌ பேட்ட‌ரி தீர்ற‌வ‌ரைக்கும் க‌ருகும். ந‌ம்ம‌ போய் வேலைய‌ பார்க்க‌லாம்)

***********************************************************

புது வெட்கம் வருதே.. வருதே..!

"என்னங்க...." என்று அனு அலறினாள். காதல் படத்தின் க்ளைமேக்சில் சந்தியா பெரிய கூச்சல் போடுவாளே, அப்படி கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

அவள் போட்ட சத்தத்தில் ராம், கையில் வைத்திருந்த N72வை கீழே போட்டுவிட்டான். மிகவும் பதறிப்போய், "என்னடி ஆச்சி?, எங்க இருக்க?" என்றான்.

"காணோம்"

"எதை காணோம்? எதையும் தொலைச்சிட்டியா? இப்ப நீ எங்க இருக்க?"

"வீட்டில தான். எனக்கு அழுகை அழுகையா வருது. அரைமணி நேரமா தேடிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வர்றீங்களா?

"என்னத்த தேடிக்கிட்டு இருக்க?"

"உங்க அம்மா அப்பா எப்ப வர்றாங்க?"

"மதியம் 3.30க்கு வந்திடுவாங்க.. வைகைல.. நீ மதியம் தான் ஆஃபிஸ்க்கு லீவ் போட்டு வர்றேன்னு சொன்ன? இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க வீட்டுல?"

"அய்யோ.. போச்சி போச்சி.. அவங்க வர்ற நேரம் பாத்து தானா இப்படியெல்லாம் நடக்கணும்" குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

"என்னடி? ஒண்ணும் புரியல.. சரி இன்னும் 20 மினிட்ஸ்ல வீட்டுல இருப்பேன். கூல் டவுன்."

**

"ன்னம்மா ஆச்சி?" கதவை திறந்த உடனே கேள்வியுடன் அவளை ரூம் ரூம்மாக தேடிக் கொண்டு வந்தான்.

பெட்ரூமே கலைந்து கன்னாபின்னாவென இருந்தது. உள்ளே, "சின்னத்தம்பி" குஷ்பு போல முடியெல்லாம் கலைந்து எல்லாவற்றையும் கலைத்துக் கொண்டிருந்தாள்.

"போலீஸ்ல‌ க‌ம்ப்ளைன் கொடுக்க‌லாமா அனு? "

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நேத்து கூட‌ நான் பாத்தேன்"

"எதுவும் ந‌கை எதுவும் காணோமா?"

"ஆங்.. ஆங்.." என்று ஏறெடுத்து பார்த்த‌வ‌ளை புதியவ‌ர்க‌ள் யாராவ‌து பார்த்தால் பைத்திய‌ம் என்று தான் நினைப்பார்க‌ள்.

"ஏன் இப்ப‌டி இவ்வ‌ள‌வு டிஸ்ட‌ர்ப்டா இருக்க‌? இரு... நானும் தேடுறேன்." அவளை லைட்டாக கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு,

அவ‌னும் அவ‌ன் ப‌ங்குக்கு ஷெல்பில் அடுக்கி வைத்திருந்த‌ போர்வை, த‌லைய‌ணை எல்லாவ‌ற்றையும் ஒவ்வொன்றாக‌ எடுத்து உதறி போட்டுக் கொண்டிருந்தான்.

"அய்ய‌ய்யோ இன்னும் ஹால்ஃப் அன் ஹ‌வ‌ர்ல‌ அவ‌ங்க‌ வ‌ந்திடுவாங்க‌ளே? அதுக்குள்ள‌ க‌ண்டுபிடிச்சாக‌ணும் ராம்?"

"அவ‌ங்க‌ வ‌ர்றதுக்கும் இதுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?"

"போன‌ வாட்டி அதை போடாம‌ ஷோகேஸ்ல‌ வ‌ச்சிருந்த‌துக்கு உங்க‌ அம்மா தாளிச்சி கொட்டிட்டாங்க‌..? இந்த‌ த‌ட‌வையும்னா, என்ன‌ ம‌ரும‌க‌ளே இல்ல‌ன்னு சொல்லிடுவாங்க‌..?

"அவ‌ங்க‌ வாங்கிக் கொடுத்த‌ நெக்லெஸ்ஸா..? அதைத் தான் லாக்க‌ர்ல‌ வ‌ச்சிருந்தியேடி..?

"இதுக்கெல்லாம் கார‌ண‌ம் நீ தான். ம‌வ‌னே, உன்னை முதல்ல‌ கொல்ல‌ணும்.. அது முத‌ல்ல‌ கெடைக்க‌ட்டும் அப்புற‌ம் வ‌ச்சிக்கிறேன் உன்ன‌?

"அடிப்பா.....வி.. நாலு மீட்டிங்க‌ க‌ட் ப‌ண்ணிட்டு ப‌த‌றி போய் வ‌ந்தா..."

"வெயிட் வெயிட்.. அதை எடுத்துக் கொடுங்க‌.. " அவ‌ன் கையில் இருந்த‌ த‌லைய‌ணையை வாங்கினாள். உறையை உருவினாள். கீழே விழுந்த‌து.

மஞ்சள் வாசம் மாறாத தாலியை கையில் எடுத்துக் கொண்டு, "அப்பாடா.... இப்ப‌த் தான் உயிரே வ‌ந்த‌து" என்று க‌ழுத்தில் போட‌ போனாள். சில விநாடிக‌ள் யோசித்துவிட்டு..

"நீங்க‌ளே க‌ழுத்தில‌ போடுங்க‌.." புதுசாக முளைத்த வெட்கத்துடன், அவ‌ன் கையில் திணித்தாள்.

"உன் முதுகுல‌ தான் போட‌ணும்..லூஸூ"

"ஏன்? ஏன்? நீ தான் நேத்து நைட் குத்துதுன்னு க‌ழ‌ட்டி போட்ட‌.. என் த‌ப்பா சொல்லு.. சொல்லு என் த‌ப்பா?"

"ஓ.. அப்படியா.. அவ‌ங்க‌ வ‌ர்ற‌துக்குத் தான் இன்னும் ஹால்ஃப் அன் ஹ‌வ‌ர் இருக்கே.. அதுவ‌ரைக்கும்...." எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது.

"அடி செருப்பால?... " என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் புள்ளிமானாக துள்ளிக் குதித்து ஓடினாள் அனு. பின்னாலேயே ராம்.
**************************

காதலிக்கு காதலனிடம் பிடித்த 10!

1) "ஐ மிஸ் யூ டா" என்று ரொம்ப ரியலாக ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் போது, "இப்ப எப்படி வர்றது.. ப்ளீஸ்மா.. புரிஞ்சிக்கோ" என்று இழுத்துக் கொண்டு போய், எதிர்பாராதவிதமாக திடீரென்று "கீழே தான் இருக்கேன், வா" என ஷாக் கொடுப்பது, அந்த ஆச்சர்ய பரவச மின்னல்களை கண்ணில் காணலாம். ஆளே இல்லாத தெரு என்றால் லைட்டாக வந்து மார்பில் சாய்வாள். இல்லையென்றால் உள்ளங்கையைப் பற்றிக் கொண்டு கண்களால் சிரிப்பாள். (அடிக்கடி பண்ணினால், உஷார். வேலை வெட்டி இல்லாதவன் என்று நினைக்கக் கூடும்).
2) வொயிட் க‌ர்ச்சீப் ரொம்ப க்ளீனாக‌‌ இருந்து கொண்டு, எப்ப‌வாவ‌து எடுத்து வேர்வையை ஒற்றித் துடைக்கும்போது ஓர‌க்க‌ண்ணால் ர‌சிப்பாள். (துப்பட்டா ஓரத்தில் கை வைத்தால், க‌ன்ன‌ம் சிவ‌க்கும்.)

3) அவ‌ளுக்கு பிடித்த‌ பெர்ஃப்யூம் ரொம்ப‌ மைல்டாக‌ யூஸ் ப‌ண்ண‌லாம். (பொதுவாக‌ காத‌ல‌னின் விய‌ர்வை ம‌ண‌ம் பிடிக்காத‌ பெண்க‌ள் அரிது. அழுக்கு ட்ரெஸ்ஸின் க‌ப்போடு வ‌ருப‌வ‌னை கேவ‌ல‌மாக‌ திட்டும் அபாய‌ம் உண்டு. நாள் முழுவ‌து ஷாப்பிங் என‌ அங்கு இங்கு அலைந்து திரிந்து வ‌ரும்போது, பைக்கின் பின்னால் உட்கார்ந்துகொண்டு எதேச்சையாக நுகர்வது போல் நுகர்ந்து ர‌சிப்பாள், அது க‌விதை)

4) ப‌ர்த்டேவில் வ‌ழ‌க்க‌ம்போல் ட்ரெஸ், க்ரிஸ்ட‌ல் வொர்க்ஸ், டெடிபிய‌ர் என‌ ஜ‌ல்லிய‌டிக்காம‌ல், இன்னோவேட்டிவாக ஏதாவது ப‌ண்ணினால் மிக‌வும் ர‌சிப்பாள். இந்த‌ கால‌த்தில் ல‌வ் லெட்ட‌ர் கொடுக்கும் க‌ல்ச்ச‌ர் எல்லாம் இம‌ய‌ம‌லை ஏறிவிட்ட‌து. இப்போது அதை ரெண்டு மூன்று ப‌க்க‌த்திற்கு எழுதி கொடுக்க‌லாம். கவிதை எழுதிக் கொடுக்கலாம். அவ‌ள் ச‌ண்டை போட்ட‌ காலேஜ் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரையாவ‌து முன்னால் நிறுத்தி ஷாக் கொடுக்க‌லாம். டிப்ஸ் வேண்டும் என்றால் த‌னியாக‌ தொட‌ர்பு கொள்ள‌வும்.

5)ச‌க‌ட்டுமேனிக்கு சைட் அடிக்காம‌ல் ம‌ற்றும் திற‌ந்த‌ மேனியுட‌ன் வ‌ரும் ஜிகிடிக‌ளை நாக்கை தொங்க‌போட்டு பார்க்காம‌ல் ஜென்டிலாக‌ இருக்கும்போது, ரொம்ப‌ பெருமையாக‌ உண‌ர்வாள். அழ‌கான‌ ட்ரெஸ்ஸோடு ஹோம்லியாக‌ வ‌ரும் ஃபிக‌ரைக் காட்டி, "இந்த‌ ட்ரெஸ் ந‌ல்லா இருக்குல்ல‌.. நெக்ஸ்ட் டைம் ஷாப்பிங் போகும்போது வாங்க‌லாம்" என்று சொன்னால் மட்டும் போதும், ச‌ண்டையே போட‌ மாட்டாள்.
6) கோவிலில் அவ‌ள் சீரியஸாக‌ சாமிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்க‌ள் அவ‌ளையே ர‌சித்து பார்த்துக் கொண்டிருக்க‌ வேண்டும். அவ‌ள் சாமி கும்பிட்டு க‌ண்ணை திற‌க்கும்போது, நீங்க‌ள் ப‌ட‌ப‌ட‌ப்புட‌ன் க‌ண்க‌ளை மூடி பாவ்லா ப‌ண்ணினால், ர‌சிப்பாள்.

7) பேச‌ எதுமே இல்லாம‌ல் இருக்கும்போது, ரெண்டும் பேரும் "அப்புற‌ம், அப்புற‌ம்" என்று சொல்லி போர‌டிக்காம‌ல் "அப்புற‌ம் உங்க‌ ஆஃபிஸ்ல‌ அந்த‌ சொட்டைத் த‌லைய‌னுக்கு என்ன‌ ஆச்சி?" என்று உற்சாக‌த்துட‌ன் தொட‌ர்ந்தால் அவ‌ளுக்கும் உற்சாக‌ம் தொற்றிக் கொள்ளும். (புறம் பேசுவதை விரும்பாத‌ பெண்கள் எவ‌ர்?)

8)எவ‌னுட‌னாவ‌து வெட்டியாக பேசிக் கொண்டிருப்ப‌தை, ரொம்ப‌ மெல்லிய‌ குர‌லில் அத‌ட்டினால் அந்த‌ பொஸ‌ஸிவ்னெஸ் ரொம்ப‌ ர‌சிப்பாள். (எல்லை, வாய்ஸ் மாடுலேஷன் எல்லாம் ரொம்ப‌ ரொம்ப‌ முக்கியம், பாஸ். இல்லைன்னா கிளி பறந்து போயிடும்)

9)ஈ.சி.ஆர் ரில் ஆள் க‌ம்மியாக‌ இருக்கும் பீச்சில் வ‌ண்டியை நிறுத்தி, அவன் bare body யுட‌ன் குளிப்ப‌தை (த‌னுஷ் ரேஞ்சில் மார்பு, அஜித் ரேஞ்சில் தொப்பை இருந்தாலும்) வைத்த‌ க‌ண் வாங்காம‌ல் ர‌சிப்பாள், அவ‌ள் க‌ரையில் இருந்து கொண்டு.

10)Most important point, காத‌லிக்கு காத‌லினிட‌ம் மிக‌வும் பிடித்த‌து எது? மீசை! ந‌றுக்கென்று ஷார்ப்பாக அடிக்கடி ட்ரிம் பண்ணிக்கொண்டு இருப்ப‌வ‌னிட‌ம் இருக்கும் மேன்லினெஸ்ஸை எப்ப‌வும் ர‌சிப்பாள். (இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுப‌டும்.)

இவை அனைத்தும் தென் த‌மிழ‌க‌த்தில் இருந்து வ‌ந்திருக்கும் பெண்க‌ளை ம‌ன‌தில் வைத்து எழுதிய‌து, ஏனென்றால் நான் ம‌துரைக்காரன்.

டிஸ்கி: வேற‌ என்ன‌ங்க‌ நான் சொல்ல‌ப் போறேன். இது என் அனுப‌வ‌ம் எல்லாம் கெடையாது. ச்சும்மா, க‌ற்ப‌னை. ந‌ம்பவா போறீங்க‌?

*******************************************

அடர்த்தியான மௌன விரதம்!

உனக்குமி னக்குமான‌
அடர்த்தியான மௌனத்திற்கு
வேலையில்லாத‌ வேளைகளான

நெருக்கியடித்த
கல்லூரி பேருந்து
பயணங்களின் பெருமைகளை
தோள் தொடர்ந்து
வாதம் இடித்த பொழுதுகளிலும்

மௌன மனதின்
கோரிக்கைக‌ளின்
விர‌த‌ம் உடைத்த
ஆல‌ய‌ த‌ரிச‌ன‌ங்க‌ளில்
ஆசை நிராசைக‌ளின்
மௌன பேரிரைச்சல்
ப‌கிரும் பொழுதுக‌ளிலும்

பெய‌ர் தெரியாத உண‌வ‌க‌ங்க‌ளில்
எதிரெதிர் ப‌க்க‌ங்க‌ளில்
உண‌ராத‌ ப‌க்க‌ங்க‌ளை
அசைபோட்டு உண்ட‌
நிமிட‌ பொழுதுக‌ளிலும்

கருவறை தோழி ஒருத்தியின்
திருமண நாளில் முக‌த்தில்
உடலில் பாதத்தில் வெட்க‌ம்
வ‌ளைய‌ வ‌ளைய‌ வ‌ளைந்த
வேளைகளில் ஒன்றாகக் க‌ளித்த‌
புகைப்பட‌ பொழுதுக‌ளிலும்

இப்ப‌டியே
இன்னும்
*
*
இணைப்பு துண்டிக்கபடுமென
பயம் அறவுமற்ற
விடுதியின் பைத்திய‌க்கார‌
தொலைபேசி பொழுதுக‌ளிலும்
இப்ப‌டியே
இன்னும்
*
*
இப்படி
எப்பொழுதுக‌ளிலும்
எட்டிப்பார்க்காமல்
உள்ள‌த்தில் உன்னை சும‌க்க‌
ஆர‌ம்பித்த‌ நாட்க‌ளில்
வார்த்தைக‌ளில் சும‌க்க
ஆர‌ம்பித்தேன்
அவைக‌ளுக்கு க‌டைசி வ‌ரை
பிர‌ச‌வ‌ம் கொடுக்காம‌ல் போன‌தால்
ச‌வ‌மாக‌வே அலைகிறேன்

****************************

எப்போது மனிதனாகலாம்?


இறந்ததின் நினைவுகளும் நினைவுகளின்
இறந்தவையும் நேர்கோட்டில் சேரும்
பின்னிரவில் தோன்றியதாக இருக்கலாம்
எப்போது மனிதனாகலாம்?
கிழிந்த‌ இலையில் கிடைத்த
நாலு வெந்த அரிசியில்
ரெண்டை கிழிந்த சட்டையில் உள்ள‌
சக ஒருவனுக்கு கொடுத்தவன்
மனநலம் உள்ளவனா?
அவ‌னின் மனநிலை நலமா
பார்ப்பவர்களுடையதா?
அப்போதாவது மாறியிருக்க‌லாம்

குட்டிக‌ளுட‌ன் கூக்குர‌லிட்ட‌ நாலு
ந‌ன்றியுள்ள‌வைக‌ளை ந‌ட்புட‌ன்
சாக்குப்பையின் குடைவைத்து காத்த
இடுப்பில் துணியுடனும் தலையில்
சடையுடனும் உள்ள நாடோடியா?
அவன் எந்த நாட்டை விட்டு
எந்த நாடு ஓடியவனோ
அவன் பரதேசியா?
எந்த‌ ப‌ர‌ந்த‌ தேச‌ங்கள் பல
க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌னோ?
அவ‌ன் எவ‌னாக‌ இருந்தாலும்?
அப்போதாவது மாறியிருக்க‌லாம்

நாலுகடை ஏறி நான்கு கை
ஏந்தும் முதியவரின் தள்ளாமை
தடுத்தும் தடுக்காமல்
நாற்பது பேரின் வேடிக்கையான
அடிபட்டவனின் முகத்தில்
தெளித்த சோடா
நாற்பதில் ஒருவனான
என் ஞானத்திலும்
தெளித்திருந்தால்?
தெளியாது என் ரத்த
சொந்தமில்லை பின்னே
முதியவரின் மூத்த
தலைமுறையாக இருக்குமோ?
உறைக்கிறது ஊறுகாயோ உண்மையோ?
அப்போதாவது மாறியிருக்க‌லாம்

நாளைக்கு என் ரத்தத்தின்
பள்ளி பெரும்செலவும், அதன்
தாய் ரத்தத்தின் காப்பீட்டுக்கும்
கட்டவேண்டிய கடைசிநாள்
அய்யோ எங்கே நான் தேடவேண்டிய
மனிதன் அவன் இறங்கிவிட்டான்
இறந்தும் விட்டான் முற்றும்
இதுவரை அடித்த திரவமும்

*******************************

Related Posts with Thumbnails