திக்.. திக்.. திக்..

நள்ளிரவு 1 மணியைத் தாண்டிய நிசப்தமான, மெர்குரி விளக்கின் அடர்மஞ்சள் பூந்தமல்லி சாலை. திடீரென்று தூரத்தில் நாய் ஊளையிடும் சப்தம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. இன்னும் 15 நிமிடத்தில் அந்த இடத்தை நெருங்கிவிடுவார்கள். இருவரும் பல வீட்டில் திருடி பழுத்த அனுபவம் இருந்தாலும் இன்றோ ஏனோ ஒரு வித பயத்துடன் மிரண்டு கொண்டே வேலையைத் தொடர்ந்தார்கள். காரணம் இன்று அவர்கள் கைவைத்த வீடு, அண்ணாநகரில் ரொம்ப பளபளவென இருக்கும் மேட்டுக்குடிமகனின் வீடு என்று மட்டும் அவர்களுக்கு தெரிந்தது.

அந்த திருடர்கள் மொத்தம் இருவர். குமார் தான் இந்த கேங்கின் தலைவன். வடசென்னையின் ஸ்ட்ரீட் தாதாவாக இருந்து, சின்ன சின்ன திருட்டு, டாஸ்மாக்கில் தகராறு என்று கொஞ்சம் ரவுடியாக பேர்பெற்றவன். அவனுடைய சிஷ்யன், ரைட் ஹேண்ட் , அல்லக்கை எல்லாம் முரளி. செங்கல்பட்டில் இருந்து வீட்டை விட்டு ஓடிவந்தவன். கொஞ்சம் 'அந்த' சகவாசமும் உண்டு.

இரவு 1.35 மணி என்று நோக்கியாவின் செங்கல் மாடலை வைத்து டைம் சரிபார்த்துவிட்டு, பெரிய காம்பவுண்ட் சுவரை ஏறுவதற்கு தயாரானார்கள். முரளி கீழே குனிந்து, 'தல'க்கு படிக்கட்டு ஆனான். முன்னால் நேபாளி குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பின்னால் தோட்டத்தின் வழியாக உள்ளே போய்,பைப் மூலமாக ரெண்டாவது மாடிக்கு தாவி குதித்தனர். மெதுவாக சப்தமில்லாமல், ஒருவழியாக லாக்கரைக் கண்டுபிடித்து விட்டனர். சில பல முயற்சிகளுக்கு பிறகு, லாக்கரின் நெம்புகோலை தட்டிவிட்டான் குமார். உள்ளே 500 ரூபாய் நோட்டுகட்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து முரளிக்கே மயக்கமே வந்துவிட்டது. மொத்தமாக எத்தனை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அள்ளிப் போட்டார்கள். இன்னும் ஆசை அடங்கவில்லை. கீழே உள்ள சின்ன கதவைத் திறந்து நகையை எடுத்து முண்டா பனியனுக்குள் எடுத்து போட்டுக் கொண்டனர்.

ஒரு டைமண்ட் மோதிரம். அதையும் விட்டுவைக்கவில்லை. எடுத்து கையில் போட்டுபார்த்தான். செட்டாகவில்லை. அதை எடுத்து கழுத்தில் கட்டியிருந்த நாலு பக்கம் கறுப்பு கரை வச்ச கர்ச்சீப்பில் மடித்து லுங்கியின் முடிச்சாக கட்டி தொங்கவிட்டுக் கொண்டான் முரளி. இரவு 2.30 இருக்கும். வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வெளியே வந்துவிட்டனர். முரளிக்கு எட்டவில்லை.. ரெண்டு முறை தவ்விதவ்வி ஒருவழியாக சுவர் உச்சியை பிடித்துவிட்டான். இறங்கிய நேரத்தில் ரெண்டு நாய் ஒன்றாக சேர்த்து குரைத்ததில் உறைந்து போய்விட்டனர். பின்னால் திரும்பிப் பார்த்து தங்களைப் பார்த்து இல்லை என்று நம்பிக்கை வந்தவுடன் போன உயிர் திரும்பி வந்தது. 200 அடி அப்படியே தூக்கக் கலக்கத்தில் நடந்து செல்வது போல் நடந்து சென்று, ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஷேர் ஆட்டோவை கிளப்பிக் கொண்டு விரட்டினர்.

நேரம் 3.55 இருக்கும். நேராக அவர்கள் சென்றது கொட்டிவாக்கத்தின் சேரி கடற்கரை. நாலைந்து கட்டுமரபடகுகள், கிழிந்து போன மீன்வலைகளும், தரை முழுவதும் கொஞ்சம் கொடிபோல் படர்ந்திருக்கும் பகுதி. சில்லென்று மூஞ்சியில் அறைந்த கடற்கரை காற்றை உள்வாங்கிக் கொண்டு ரெண்டு பேரும் சிசர்ஸ் பத்தவைத்து எஞ்சாய் பண்ணினர். நல்ல இடத்தை தேடினார்கள். அந்த செங்கல் தான் இப்போது டார்ச் லைட். ஒருவழியாக ஒரு இடத்தை ஃபிக்ஸ் பண்ணிவிட்டு, பெரிய பாலிதீன் பையில் எல்லாத்தையும் மொத்தமாக போட்டு, அதை ஆழமாக குழி தோண்டி புதைத்தனர். அடையாளத்திற்கு, அந்த இடத்தைச் சுற்றி சுற்றி இருவரும் மாறி மாறி காலைக்கடனை அதிஅதிகாலையிலேயே முடித்துவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்டினர்.

"அண்ணே, நீங்க‌ வீட்டுல‌ ஒரு க‌ட்டிங்க‌ போட்டுட்டு தூங்குங்க‌. நான் அப்ப‌டியே ராணி வீட்டுக்கு லைட்டா போயிட்டு வ‌ந்துர்ரேன்"

"டோம‌ரு ம‌வ‌னே, இந்த‌ கால‌ங்கார்த்தால‌யே உன‌க்கு கேக்குதா.. வேற‌ எங்கேயும் திரியாத‌டா.. காலையில இட்டிலி வாங்கியாந்த்துட்டு வந்து எழுப்பு.. என்ன?"

"ச‌ரிண்ணே"

*
*
*

அந்த‌ மாடிவீட்டின் இர‌ண்டாது ஃப்ளோரில், க‌ட்டிலில் ராணியுட‌ன் ந‌ன்றாக‌ தூங்கிக் கொண்டிருந்தான் முர‌ளி. செங்க‌ல் அல‌றிய‌து. அலார‌ம் வைத்து இருந்தானாம். ம‌ணி அப்போது 8.30 இருக்க‌லாம். அவ‌ளை ஒதுக்கி த‌ள்ளிவிட்டு, பாத்ரூம் போனான். முக‌த்தைத் துடைக்க‌ துண்டை தேடினான். கொடியில் இருந்த‌ துண்டை உருவினான். ரெண்டு மூணு துணிக‌ள் கீழே விழுந்தது. அவ‌ளும் எழுந்தாள்.

"என்ன‌ ராணி.. ரொம்ப‌ பிசி போல.. போன‌ வார‌ம் ஃபுல்லா ஆளைக் காணோம்."

"ஆமாய்யா.. போன‌வார‌ம் பெங்க‌ளூரு போனேன்.. பெரிய‌ இட‌ம் வ‌ர‌ சொல்லுச்சு.." எழுந்து டி.வியை ஆன் பண்ணினாள்.

ராணி பேரில் ம‌ட்டுமில்லை, பார்ப்ப‌த‌ற்கும் ராணி மாதிரி இருப்பாள், அந்த‌ விஷ‌ய‌த்திலும். அவ‌ள் தொழிலில் அவ‌ள்தான் கிங்.. ஸாரி.. க்வின். ஏக‌ப்ப‌ட்ட‌ டிமாண்ட்.

"ஏன்யா எல்லாத்தையும் கீழே த‌ள்ளுன‌..? எடுத்துபோடு"

எடுத்து போட்டான். ஒரு க‌ர்ச்சீப்பும் கீழே இருந்த‌து. நாலுபக்கம் கரைவைத்த அதை எடுத்துப் பார்த்துவிட்டு,

"ஏய், இது என்னுடைய‌து தான‌..."

"ஆமாம்யா.. போன‌வாட்டி வ‌ந்து நீ என்னோட‌ க‌ர்ச்சீப்ப‌ எடுத்துட்டு போயிட்ட‌.."

அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ இடுப்பைத் துலாவினான். இல்லை. அய்யோ..எங்கே விழுந்திருக்கும்.. பெட்டையும் தேடினான்.

டி.வி.யில் "நேற்று இரவு சென்னை அண்ணா நகரில், காவல்துறை இணை ஆய்வாளர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும், 50 பவுன் நகையும் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்து போய்விட்டனர். காவல்துறை, திருடர்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது."

அதை பார்த்ததும் முரளியின் குலை நடுங்கிவிட்டது.

"அடிக்க‌டி என் கெர்ச்சீப் காணாம‌ போகுதுய்யா.. எல்லாத்துலயும் ஆசை ஆசைய்யா, என்பேர‌ ஊசிவ‌ச்சி தைச்சி இருப்பேன்.. என்ன‌ய்யா, எதையோ தின்ன‌ மாதிரி முழிக்கிற‌.."

"ஒண்ணும் இல்ல‌.. நான் கெள‌ம்புறேன்"

*
*
*
"அண்ணே, நாம‌ கைவ‌ச்ச‌து எஸ்.பி வீடுண்ணே... போச்சு நாம‌ தொலைஞ்சோம்.."

"என்ன‌டா சொல்ற.."

"ஆம‌ண்ணே.. டி.வி.ல‌ நியூஸ் ஓடுது பாரு..."கிட்டத்தட்ட அழுதுவிட்டான்.

"ச‌ரி ச‌ரி.. நீ கெள‌ம்பி செங்க‌ல்ப‌ட்டு கெள‌ம்பி போயிடு.. நான் க‌ட‌லுக்குள்ள‌ போயிடுறேன்.."

"அண்ணே.. அப்புபு......புற‌ம்....."

"என்னடா முழுங்குற‌"

"அந்த‌ வைர‌ மோதிர‌ம், கெர்ச்சீப்பு காணோம்.. அங்கேயே தாவிக் குதிக்கும்போது விழுந்திருக்கும்ன்னு நெனைக்கிறேன்.."

"டேய்ய்ய்ய்ய்ய்ய் டோமரூ.. என்னடா இப்புடி பண்ணிட்ட‌... "

"சரி ஒண்ணும் ப்ராப்ள‌ம் இல்ல‌.. நீ கெள‌ம்பி போயிடு... நான் கால் ப‌ண்ண‌னுதுக்க‌ப்புற‌ம் வா.."

"ச‌ரிண்ணே.."

*
*
*
*

"என்ன‌ சார்.. இப்ப‌ போலீஸ் வீட்டுல‌யே கொள்ளைய‌டிச்சி இருக்காங்க‌.. இப்ப‌டி இருந்தா ம‌க்க‌ளுக்கு எப்ப‌டி நீங்க‌ பாதுகாப்பு கொடுப்பீங்க‌.. "

"திருட‌ங்க‌ளை க‌ண்டுபிடிச்சிட்டீங்க‌ளா சார்... ட்ரேஸ் பண்ணிட்டீங்களா?"

"இதையாவ‌து சீக்கிர‌ம் க‌ண்டுபிடிப்பீங்க‌ளா சார்?"

இப்ப‌டி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன‌ர் ப்ர‌ஸ், டி.வி. ரிப்போர்ட்ட‌ர்ஸ். ந‌டுவே எஸ்.பி ப‌தில் எதுவும் சொல்லாம‌ல் அமைதியாக‌ நின்று கொண்டிருந்தார்..

கொஞ்ச‌ம் க‌ர‌க‌ர‌ப்பான‌ குர‌லை ச‌ரிசெய்து கொண்டே, "கொள்ளைய‌டிச்ச‌வ‌ங்க‌ள‌ நாங்க‌ க‌ண்டுபிடிச்சிட்டோம்.. இன்னும் ரெண்டு ம‌ணிநேர‌த்துல‌ அவ‌ங்க‌ளையும், அவ‌ங்க‌ கொள்ளைய‌டிச்ச‌ பொருளையும் கொண்டு வ‌ந்துருவோம்..." சொல்லிக் கொண்டே நகர்ந்தார். வ‌ழுக்கைத்த‌லையில் விய‌ர்த்த‌ விய‌ர்வையை ஒட்டி எடுத்தார் க‌ர்ச்சீப்பில்.. க‌ர்ச்சீப்பின் ஒரு ஓர‌த்தில் தெரிந்தாள், "ராணி"

*************************

உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
*************************

ஆண்மை, பேராண்மை!


முதலாமவ‌ளிடம் தேடியதை
கிடைக்குமென நம்பிக்கையுடன்
இரண்டாமாவள் காலில் விழுந்தபோது
அதில் முதுகலை முடித்தவள்
மூஞ்சியில் துப்பினாள்
"த்தூ நீயெல்லா.."
செத்தது மனைவி
முறுவலித்த ஆண்மையுடன்
வலித்த புகையுடன் வலிக்கிறது
பிறன்மனை நோக்கிய
பேராண்மை!

***************

சோம்பேறி காதலியும், அவள் தலையெழுத்தும்

"டேய்ய்ய்"

"என்னடி"

"என்ன பிடிச்சிருக்கா"

"ம்ம்.. அதை ஏன் இப்போ கேட்குற"

"பயமா இருக்கு"

"ஏன்?"

"நாம தப்பு பண்ணல தான"

"எத்தன வாட்டி கேட்ப?"

"கேட்கும்போதெல்லாம் சொல்லு"

"இல்ல. தப்பு பண்ணல"

"ஆனாலும் பயமா இருக்குடா"

"நான் இருக்கேன்ல அப்புறம் என்ன?"

"அதுவும் கூட ஒரு காரணம்"

"உன்ன திருத்தமுடியாதுடி"

"சரி சரி ஸாரி"

"ம்ம்.."

"சிரிடா ப்ளீஸ்"

*
*

"ஒரு நிமிஷம்"

"என்னடி?"

"கண்டிப்பா இத பண்ணியே ஆகணுமா? வேணாம்டா ப்ளீஸ்!"

"அழாதடி.. ஒண்ணும் இல்ல.."

"வெளியே தெரிஞ்சா அசிங்கம்டா"

"யாருக்கும் தெரியாது. கமான்.."

*
*
*
*

"சரி. தென்.. ஷேல் வீ?"

"யாராவது இருக்காங்களான்னு பாரு"

"உன்ன கொல்லப் போறேன்"

"சரி ரைட். ஸ்டார்ட்.."

"ஒரு நிமிஷம்"

"என்னடி?"

"வெளியே தெரிஞ்சா அசிங்கம்டா"

"அழாதடி.. ஒண்ணும் இல்ல."

"ம்ம்..இப்ப ஓ.கேவான்னு பாரு"

"நல்லா ஃபுல்லா கவர் பண்ணிக்கோடி"

"இப்படியெல்லாம் நான் இருந்ததே இல்ல"

"இனிமேலாவது ஒழுங்கா குளிப்பியா?"

"ம்ம்ம் குளிப்பேன்"

"அழாதே.. ரெகுலரா தலைக்கு ஷாம்பூ போட்டு ரெகுலரா குளிச்சி இருந்தேன்னா, டேண்ட்ரஃப் வந்து இருக்காது. அது முத்திபோய் இப்படி தலை முடிய எடுக்குற அளவுக்கும் வந்திருக்காது. உன்னைக் கட்டிக்கிட்டு... மொட்டை"

பல்சர் பறக்கிறது, வீல் என்று மனைவியின் அலறலுடன்.

************

ஆயிரத்தில் ஒருவன் - பாடல் விமர்சனம்

செல்வராகவனுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் நன்றிகள்.

ஒட்டு மொத்தமாக 10 பாடல்கள். மூன்று பாடல்களை வைரமுத்துவும், ஐந்து பாடல்களை செல்வராகவனும் எழுதியுள்ளனர். இரண்டு தீம் மியூசிக் பிட்ஸ். இரண்டு ரீமிக்ஸ் வெர்ஷன்ஸ்.

வைரமுத்துவின் 7ஆம் நூற்றாண்டு காலத்து சோழப்பேரரசு சம்பந்தப்பட்ட பாடல்களில் அட்சர சுத்தமான தமிழின் உக்கிர வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வ‌ராக‌வன் வ‌ழ‌க்க‌மான‌ காத‌ல், ஃபீலிங்க்ஸ் கலந்து‌ பாட‌லாசிரியாக‌ மிக‌ச் சிற‌ப்பான‌ கிர‌வுண்ட் வொர்க் செய்துள்ளார்.

படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா நான்கு பாடல்கள் பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே, அந்நியனில் "கண்ணும் கண்ணு நோக்கியா", வேட்டையாடு விளையாடுவில் "கற்க கற்க" பாடலும் பாடியுள்ளார்.

1. தாய் தின்ற‌ ம‌ண்ணே(The cholan excstasy) ‍
பாடியவர்கள்:நித்யா ஸ்ரீம‌காதேவ‌ன், விஜ‌ய் யேசுதாஸ், ஸ்ரீகிருஷ்ணா
எழுதிய‌வ‌ர்: வைர‌முத்து


எள்ள‌லான ந‌டையில் நித்ய‌ஸ்ரீ ஆர‌ம்பிக்கும் பாட‌ல், விஜ‌ய் யேசுதாஸின் வாய்ஸில் உயிரை உருக்குகிற‌து. இடைஇடையே சுந்த‌ர‌ தெலுங்கிலும், மலையாளத்திலும் சென்று ப‌ல‌ உச்ச‌ங்க‌ளை தொட்டு வ‌ருகிற‌து. மிருத‌ங்க‌மா, க‌ட‌மா என்று தெரிய‌வில்லை.. அத‌ன் ஆட்சி தான் பாட‌ல் முழுவ‌தும். திடீர்திடீரென்று அத‌ன் வேக‌த்தில் உள்ள‌த்தில் ஒரு வித‌ சோக‌த்தை ப‌ர‌வ‌ செய்கிற‌து. அதுவும் முக்கிய‌மாக

"புலிக்கொடி பொறித்த சோழமாந்தர்கள்
எலிக்கறி கொறிப்பதுவோ? "

செல்லும்போது அதிர்கிற‌து. இதாவ‌து ப‌ர‌வாயில்லை,

"மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ"

வ‌ரிக‌ளில் வைர‌முத்துவின் பேனா ஈழ‌ அவ‌ல‌த்தை குறிவைத்து கொட்டியுள்ள‌து.

இத‌ன் ஒரிஜின‌ல் வெர்ஷ‌னில்(தாய் தின்ற‌ ம‌ண்ணே Classical Version), விஜ‌ய் யேசுதாஸ் ம‌ட்டுமே. தெலுங்குமில்லை. ம‌லையாள‌மும் இல்லை. ஒன்லி சோழ‌ப் பேர‌ர‌ச‌னின் புல‌ம்ப‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம் காதுக‌ளுக்கு க‌ண்ணீருட‌ன் அனுப்புகிறார்க‌ள்.

2. பெம்மானே
பாடிய‌வ‌ர்க‌ள்: பாம்பே ஜெய‌ஸ்ரீ, P.B.சீனிவாஸ்
எழுதிய‌வ‌ர்: வைர‌முத்து


யானையின் பிளிர‌லுட‌ன் ஆர‌ம்பிக்கும் பாட்டை, கேட்டு முடிக்கும்போது "ஏண்டா இந்த‌ பாட்டை கேட்டோம்" என்று குற்ற‌ உண‌ர்ச்சியின் உச்சத்தில் ச‌ல‌ம்புவ‌து நிச்ச‌ய‌ம். என‌க்கு க‌ண்ணீரே வ‌ந்துவிட்ட‌து. காட்ட‌மான‌ வ‌ரிக‌ள்.

சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன்வளைந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே


என‌க்கு ச‌த்தியமாக‌ ஒரு ஈழ‌த்த‌மிழ‌னின் க‌ண்ணீர் குமுற‌லின் ப‌திவாக‌ ம‌ட்டுமே, இந்த‌ பாட‌ல் தெரிகிற‌து. ந‌டுந‌டுவே வ‌ரும் த‌ஞ்சை, ப‌ழ‌ம்த‌ஞ்சை,புக‌ழ்த‌ஞ்சை வார்த்தைக‌ளுக்கு ப‌திலாக‌ ஈழ‌ம் என்று நிர‌ப்பினால் சால‌ பொருந்தும். உருகி உருகி காத‌லின் ஏக்க‌த்தை ம‌ட்டுமே ப‌திவு செய்த‌ பாம்பே ஜெய‌ஸ்ரீயின் குர‌ல், இந்த‌ பாட‌லில் அழுது, ந‌ம்மையும் அழ‌ வைக்கிற‌து. P.B.சீனிவாஸ் பாட‌லை முடிக்கும் போது நெஞ்ச‌ம் க‌ன‌க்கிற‌து.

3. மாலை நேர‌ம்
பாடிய‌வ‌ர்க‌ள்: ஆண்ட்ரியா
எழுதியது: செல்வ‌ராக‌வ‌ன்

காத‌லி, காத‌ல‌னையும் காத‌லையும் காத‌லித்துக் கொண்டு பாடுவ‌து. இந்த‌ பாட‌லை பீச் ம‌ண‌லில் காதலியுடன் ஐபாடின் ஈய‌ர்பீஸ் ஆளுக்கொன்று வைத்துக் கொண்டு கைகோர்த்து, கால் மணலில் புதைய‌ ந‌ட‌ந்து சென்றால், அது தான் சொர்க்க‌ம். இதே மாதிரி கார்க்கியின் க‌த‌ற‌ல்க‌ளை இங்கே சென்று பாருங்க‌ள். பேச்சில‌ர் ப‌ச‌ங்க‌ளை கெடுப்ப‌த‌ற்கே இந்த‌ பாட‌ல். உட‌னே ஒரு கேர்ள்ஃப்ர‌ண்ட் தேட‌வேண்டும், இந்த‌ பாட‌லை கொண்டாடுவ‌த‌ற்கு. இதை மிஸ் ப‌ண்ணினால், நேரே ந‌ர‌க‌த்திற்கு செல்ல‌க்க‌ட‌வ‌து.

4. உன்மேலே ஆசதான்
பாடிய‌வ‌ர்க‌ள்: த‌னுஷ், ஐஸ்வ‌ர்யா த‌னுஷ், ஆண்ட்ரியா
எழுதிய‌து: செல்வ‌ராக‌வ‌ன்

த‌னுஷ் ரொம்ப‌ மென‌க்கெடாம‌ல் ஜ‌ஸ்ட் லைக் த‌ட் என‌ சிற‌ப்பாக‌ பாடிய‌ பாட‌ல். அவ‌ரின் ம‌னைவியும், ஆண்ட்ரியாவும் கோர‌ஸ். அவர்களின் வேலை, தனுஷ் பாடி முடித்தவுடன் "ஆனது ஆகட்டும் Don't care baby. போனது போகட்டும் leave that baby" மட்டுமே. இதுவும் நன்றாகத் தான் உள்ளது. செல்வராக‌வ‌ன் லிரிக்ஸில் விளையாடியுள்ளார். வாழ்க. ஒரு சாம்பிள்.

"என் எதிரே ரெண்டு பாப்பா
கைவ‌ச்சா என்ன‌ த‌ப்பா"


5. இந்த‌ பாதை
பாடிய‌வ‌ர்: ஜி.வி.பிர‌காஷ்
எழுதிய‌து: செல்வராக‌வ‌ன்

ரொம்ப‌ ஆர்பாட்ட‌மே இல்லாம‌ல், ஸோலாவாக‌ ஜி.வி.பிரகாஷ் குர‌ல் ம‌ட்டும் இழைகிற‌து. மிகவும் மைல்டான இசை. இவ‌ர் வாய்ஸும் ந‌ன்றாக‌ உள்ள‌து. ஏ.ஆர்.ரகுமான், யுவ‌ன் போல‌ இவ‌ரும் த‌னியாக‌ பாட‌ ஆர‌ம்பிக்கலாம்.எதையே தேடிக் கொண்டு அலையும் இளைஞ‌னின் தேட‌லாக‌ இந்த‌ பாட‌ல் விரிகிற‌து. கேட்க‌ கேட்க இந்த‌ பாட‌ல் பிடித்து போக‌ வாய்ப்பு இருக்கிற‌து.

6. ஓ ஈசா
பாடிய‌வ‌ர்க‌ள்: கார்த்திக், ஆண்ட்ரியா
எழுதியது: செல்வ‌ராகவ‌ன்

ஏதோ ப‌ப்பில் ஓடும் பாட‌ல் போல‌ இருக்கும் ப‌க்தி பாட‌ல். "கோவிந்த்தா, கோவிந்தா" என்று கோர‌ஸில் இழுக்கும் இழுப்புக்கு இந்துத்வாக்கார‌ர்க‌ள் ச‌ண்டைக்கு வ‌ந்தாலும் வ‌ருவார்க‌ள். அட்ட‌காச‌மான இசை. பெர்குஷ‌ன்ஸ் ம‌ற்றும் கித்தாரின் அதிர‌டி ஃப்யூஷ‌னில் மிக்ஸ் ஆகி அதிர்கிற‌து. கால்க‌ள் ஆட்டோமேடிக்கா டான்ஸ் ஆட‌ அலைகிற‌து.

இத‌ன் இன்னொரு வெர்ஷ‌னும் உண்டு. அது இதை விட‌ அதிக‌ வைப்ரேஷ‌ன்.

இந்த‌ ஆறு முழுநீள‌ பாட‌ல்கள் த‌விர‌ இர‌ண்டு தீம்மியூசிக் பிட்ஸ் வேறு உண்டு. "The King arrives", "Celebration of Life" என‌ இர‌ண்டு பிட்ஸ். ஏகப்பட்ட வேரியேஷன்ஸ். இர‌ண்டும் அருமையாக‌ உள்ள‌ன‌. இந்த‌ ஆல்ப‌த்திற்கு இசைய‌மைக்காம‌ல் போன‌த‌ற்கு யுவ‌ன்ஷ‌ங்க‌ர் ராஜா குப்புற‌ப்ப‌டுத்து அழுவார்.

சீக்கிர‌ம் ப‌ட‌த்தை ரிலீஸ் ப‌ண்ணுங்க‌ பாஸ்!

******************************

உலக சினிமாவைக் கொண்டாடுவோம்... வாங்க!!

நாளுக்கு நாள் நம் தமிழ்சினிமாவின் பரிணாமமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடத்திற்கு முன்னாலே வெளிவந்த நமது இளைய தளபதியின் முதல் ஹிட்டின் முத்தான, கொத்தான கிளைமேக்ஸ்

"நீங்க ஏன் இன்னொரு பொண்ணை லவ் பண்ணக் கூடாது"

"காதல்ங்கிறது செடியில பூக்கிற பூ மாதிரிங்க.. அது எனக்கு ஏற்கெனவே பூத்திருச்சி.. அப்படியே விட்டுருங்க..."

(லலலலலலலலலலலலலாலாலாலாலா)

"அந்த‌ செடியில கூட‌ ஒரு பூ பூத்த‌வுட‌னே இன்னொரு பூ பூக்கிற‌து இல்லையா, அது மாதிரி நீங்க‌ ஏன் உங்க‌ள‌ மாத்திக்க‌கூடாது.."

(ன‌ன‌ன‌ன‌ன‌ன‌ன்ன‌ன‌ன‌ன‌ன்ன‌ன‌ன‌ன‌ன்ன‌ன‌ன்ன‌...)

"ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு வேணா காத‌ல் இன்னொரு பூவா இருக்க‌லாம். என‌க்கு அப்படியில்லை.. ஒரு த‌ட‌வை தான். திரும்ப‌ அத‌ எடுத்த‌ செடியில‌ எடுத்து ஒட்ட‌வைக்க‌ முடியாது. நான் அப்ப‌டியே இருந்திட‌றேன்.."


நூறு த‌ட‌வை ல‌ல‌ல‌ல‌ல‌ல‌ல‌ வுட‌ன் A film by Vikraman என்று கோழிகிறுக்க‌லில் எண்ட் கார்டு போட‌ப்ப‌டும். அப்போது அதிரிபுதிரியான‌ ஹிட். இப்போது ரிலீஸ் ஆகியிருந்தால் 10 நாள் தாண்டுவ‌த‌ற்கே த‌லையால் த‌ண்ணீ குடிக்க‌ வேண்டி இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளும் ம‌ன‌நிலையிலும் ர‌சிக‌ன் இல்லை. "பொக்கை வாய் ஃபிக‌ர் போயிடுச்சேன்னு ச‌ந்தோச‌ப்ப‌ட்டுகிட்டு ஹோம்லி ஃபிக‌ர் ச‌ங்கீதாவ‌ க‌ரெக்ட் பண்ணுவானா.. அதை விட்டுப்புட்டு செடி, கொடி, பூன்னு ஃபீல் பண்றான். ச‌ரியான‌ லூசுப்பைய‌ன்.. " என்று எல்லாரையும் கேவ‌ல‌மாக‌ திட்டிவிட்டு ப‌ர்ஸை த‌ட‌விவிட்டு வெளியே போய்விடுவான்.

இன்று அவ‌ன் எதிர்பார்ப்ப‌தெல்லாம் 7/ஜி ரெயின்போ கால‌னி மாதிரியான‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌ க‌தை, இல்லையென்றால் காக்க‌ காக்க‌வில் வ‌ருவ‌து போல‌ ஸ்டைலான‌ காத‌ல்..

"ஏன் மாயா ஏன்? நான் ம‌த்த‌வ‌ங்க‌ மாதிரி ரொம்ப‌ ஜாலியான பைய‌ன் எல்லாம் கெடையாது. ந‌ம‌க்குள்ள‌ அப்ப‌டி என்ன‌"

"ஏன்னா என‌க்கு உங்க‌ள‌ பிடிச்சி இருக்கு. உங்க‌ ஸ்டைல், க‌ம்பீரம், பார்வை எல்லாம் பிடிச்சிருக்கு. உங்க‌ள‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ ஆசைப்ப‌டுகிறேன். I want to make love to you. உங்க‌ள‌ மாதிரி ரெண்டு குழ‌ந்தைங்க‌ பெத்துக்க‌ணும். ஒரு நாள், உங்க மடியில‌ அப்ப‌டியே செத்துட‌ணும். செய்வீங்க‌ளா அன்புச்செல்வ‌ன்?" (அப்ப‌டியே நேருக்கு நேராக‌ க‌ண்க‌ளைப் பார்த்து)

"ச‌ரி. இன்னைல‌ர்ந்து ச‌ரியா 7வ‌து நாள்ல‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்"(உத‌ட்டில் வ‌ழியும் ஆத்மார்த்த அனுமதித்தலுடன்)


இந்த‌ இட‌த்தில் ஜோதிகாவின் ரியாக்ச‌ன் அவ‌ருடைய "தி பெஸ்ட்" ஆக‌ இருக்கும்.

இந்த‌ மாதிரியான‌ பெப்பியான‌ காத‌ல், ரொமான்ஸ், நித‌ர்ச‌ன‌க் க‌தைக‌ளைத் தான் விரும்புகிறார்க‌ள். இந்த‌ மாதிரி ச‌ராச‌ரி ர‌சிக‌னின் ர‌சனை நாளுக்கு நாள் மாதிரிக் கொண்டு இருக்கிற‌து. ஒரு ப‌க்க‌ம் மிக‌வும் இய‌ல்பான 'காதல்', 'சுப்ர‌ம‌ணிய‌புரம்' போன்ற‌ ப‌ட‌ங்க‌ள், ஷ‌ங்க‌ர் மாதிரியான‌ டைர‌க்ட‌ர்க‌ளிட‌ம் இருந்து வ‌ரும் ஃபேண்ட‌ஸியான‌ ப‌ட‌ங்க‌ள், குத்து ம‌சாலா ஹீரோஸ் விஜ‌ய், விஷால் போன்றோரின் என்று அடுத்த‌ க‌ட்ட‌த்தை த‌டுக்கும் ப‌ட‌ங்க‌ள், பேர‌ர‌சு, எஸ்.ஜே.சூர்யா ப‌ட‌ங்க‌ள்.... இவ்வ‌ள‌வு தான் சினிமாவா.. நாம் ம‌ட்டும் தான் சினிமாவைக் கொண்டாடுகிறோமோ.. நாம் ம‌ட்டும் தான் சினிமாவில் இருந்து அர‌சியல் கனவுகளை அனும‌திக்கிறோமோ.. இப்ப‌டி 'நாம் ம‌ட்டும் தான்' என்று சொல்லிக் கொண்டு என்ன‌ கேள்வி கேட்டுக் கொண்டாலும், அத‌ற்கு ஒரே ப‌தில் "நோ"

உல‌கெங்கும் எத்த‌னை மொழிக‌ள் இருக்கிற‌தோ, அத்த‌னை மொழி ம‌க்க‌ளும் சினிமா எடுக்கிறார்க‌ள். பின்னே அவ‌ர்க‌ளுக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்ச‌ம் வேண்டாமா. ஓ.கே. அவ‌ர்க‌ள் எப்ப‌டி எடுக்கிறார்க‌ள். ந‌ம் மாதிரி வைர‌த்தை வைக்கும் இட‌த்தில் தான் குப்பையையும் வைக்கிறார்க‌ளா? அவ‌ர்க‌ளின் சென்டிமென்ட் என்ன‌? அவ‌ர்க‌ள் ப‌டைப்பின் அள‌வுகோல் என்ன? அவர்கள் காதலின் எல்லை என்ன? இப்ப‌டி எத்த‌னை என்ன‌ என‌ கேள்வி கேட்டாலும் அத‌ற்கான‌ ப‌தில் கிடைக்க‌ எவ்வ‌ள‌வு பிர‌ய‌த்த‌ன‌ம் எடுக்க‌ வேண்டும். எவ்வளவு DVD கடை ஏறி இறங்க வேண்டும். அப்படியே எடுத்தாலும் அது 'அந்த' மாதிரி படமாக இருந்தால், மனைவியிடமும் குழந்தையிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வளவு கஷ்டம் தேவையா? கண்டிப்பாக தேவையில்லை.

அப்ப‌டியே ஜாலியா ஞாயிற்றுக்கிழமை (07-ஜூன்-2009) ஈவினிங் கெள‌ம்பி எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் பார்வ‌தி ஹாலுக்கு வ‌ந்திடுங்க‌. சென்னை பதிவர்கள் குழு, இலவசமாக உலக சினிமாவின் தலைசிறந்த படங்களை வெள்ளை ஸ்கிரீனில் காட்டுகிறார்கள். சென்னை பதிவர்கள் குழுவின் அடுத்த முயற்சி. ஆதரவு தாருங்கள். உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களையும் சந்தித்து நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இது ஒவ்வொரு வாரமும் தொடரும்

ஒரு கோக் விள‌ம்ப‌ரம் பார்த்து இருக்கிறீர்களா?. ஒரு கடை காத்து வாங்கிக் கொண்டு இருக்கும். கோக் வாங்கினால் சமோசா இலவசம் என்று ஊழியன் சோர்வாக‌ வெளியே ஒரு போர்டு வைப்பான். அதை கம்பீர் இப்படி மாற்றுவார், "ஒரு கோக் வாங்கினால் ந‌ண்ப‌ன் இல‌வ‌சம்". காத்து வாங்கிக்கிட்டு இருந்த‌ க‌டை அப்ப‌டியே கூட்ட‌த்தில் அள்ளும். அதே போல் உங்க‌ ர‌ச‌னைக்கு ஏற்ற‌ ப‌ட‌ங்க‌ள் இருக்கிற‌தோ இல்லையோ, நாலு நல்ல ந‌ண்ப‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ கிடைப்பார்க‌ள். அட்லீஸ்ட் ஒரு நண்பன், அதுக்கு நான் கியார‌ண்டி.

இந்த‌ மாதிரி ப‌திவு போடுமாறு அன்பு க‌ட்ட‌ளை இட்ட‌ தோழ‌ருக்கு உள‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள்!

நாள்: 07-ஜூன்-2009, 5.00PM
இட‌ம்: பார்வ‌தி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை
லேண்ட்மார்க்: கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் எதிரில்.


தொட‌ர்பு: க‌ணேஷ் 98418 63306

உன் ஃபோன் ந‌ம்ப‌ர‌ போடுற‌ அள‌வுக்கு நீ பெரிய‌ ஆளா என்று யாரும் கேட்க‌ வேண்டாம். இதுவும் ஒரு டெம்ப்ளேட் மாதிரி. என‌க்கு ஒண்ணும் தெரியாது. மேலதிக விபரத்திற்கு எனக்கு கால்... பண்ண வேண்டாம். மீறி ப‌ண்ணினால், நான் தோழ‌ருக்கு கால் டைவ‌ர்ட் செய்வேன். டெர‌ர் ஆயிடூவீங்க‌.. ஜாக்கிர‌தை.. :)

*******************

Related Posts with Thumbnails