காதல் செத்து ஒழியட்டும்

காதலின் பரம‌திருப்தி ஆணுக்கும்
பெண்ணுக்கும் சமம் எனும்போது
தோல்வி மட்டும் ஆணுக்கு
ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌து ஏன்?
க‌ட‌வுளே உன‌க்கு தெரியுமா?
என‌க்கும் தெரிய‌வில்லை,
ஒன்று ம‌ட்டும் தெரியும்..

யாருமற்ற தனிமையில் ஒன்றுக்கும்
உதவாத இர‌ண்டு நாள் அழுகை,
விசும்ப‌ல்கள், ப‌ட்டினி
எவ‌னோ ஒருவ‌னுட‌ன் 1000 பேர்
சூழ‌ க‌ல்யாண‌ம், முத‌லிர‌வு,
ச‌ந்தோஷ‌ வாழ்க்கையில் ஒரு குழ‌ந்தை,
ஒருவேளை க‌ண‌வ‌ன் ஒரு அம்மாஞ்சி
எனில் சந்தோஷம் குழ‌ந்தையின்
பெய‌ர் காத‌ல‌ன்!
பேர் தெரியாத‌ திருவிழாவிலோ,
பேருந்திலோ பார்த்துவிட்டால் பேசும்
துணிச்சல் எந்த‌ புதுமைபெண்ணுக்கும்
இல்லை ஆனால் மீண்டும்
யாருமற்ற தனிமையில் ஒன்றுக்கும்
உதவாத இர‌ண்டு நாள் அழுகை,
விசும்ப‌ல்கள், ப‌ட்டினி
பெண்ணே, உன் காதல் தோல்வி
இப்படித்தானே போகிறது?

ஆணின் வலி தெரியுமா உனக்கு?
சொல்ல வார்த்தைகளை கண்களை
மூடி தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒன்றும் புதிதல்ல, நீ செய்வதைத்
தான் நானும் செய்கிறேன்,
கொஞ்சம் புதுமையாக
போதையுடனும், புகையுடனும்
ப‌ல வருடஙகள்
ஆனால் ஒரு வித்தியாசம்

நீ புது வாழ்க்கையில்
காதலுக்கு முற்றுபுள்ளி இட்டு
வருந்திக் கொண்டு வாழ்கிறாய்!

நான் வருந்திக் கொண்டு
நீ இட்ட முற்றுப்புள்ளி அருகே
ஒரு புள்ளி வைத்துத் தொடர‌
விழிகளால் காத்துக் கொண்டு
வாசலில் காத்திருக்கிறேன்
என்றாவது வருவாய் என‌
(மூட)நம்பிக்கையுடன்..

எனக்கு நிமிடங்கள் வருடங்களாகவும்,
உனக்கு வருடங்கள் நிமிடங்களாக‌
போனாலும் பயனில்லை
நீ வரவே இல்லை
என் நம்பிக்கையும் நம் காதலுடன்
இத்துபோய் துருப்பிடித்துக் கொண்டிருப்பது
மட்டுமே மிச்சம் இல்லை எச்சம்..

இதோ என் வாழ்க்கையை நான்
ஆரம்பிக்க எத்தனிக்கிறேன்
உன்னை குழந்தையுடன்
பேர் தெரியாத‌ திருவிழாவிலோ,
பேருந்திலோ கண்ட கணத்தில் இருந்து

இது பழிக்கு பழியா?
தெரியவில்லை, பலவீனபடுத்தும்
காதல் எனக்கு தேவையில்லை
துச்சமாக தூக்கியெறிந்த‌
காதல் தேவதை இல்லை பிசாசு
(வேண்டாம், இல்லை என்று ஆனபின்
அவளை பற்றி சொல்ல
என்ன உரிமை?)
முடிவாக ஒரு பெண், எனக்கு
தேவையில்லை!

அவள் புதைத்த காதலின்
சமாதியில் நானும் பூக்களைத்
தூவுகிறேன்!
காதல் செத்து ஒழியட்டும்

தோல்வி மட்டும் ஆணுக்கு
இல்லை காதலர்களுக்கு
ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌து ஏன்?
க‌ட‌வுளே உன‌க்கு தெரியுமா?
ஒருவேளை
இதுதான் முடிவு என்ற தெரிந்ததினால்
தான் பதில்கூறாமல் மௌனமாக‌
இருக்கிறானோ கடவுள்?

********************

எப்போ க‌ல்யாண‌ம்?


காதலின் குறுகுறுப்பை ஒருமாதிரியாக‌
உன்னிட‌ம் வெளிப்ப‌டுத்திய‌போதும்,

அதை சின்ன சின்ன‌ த‌லைய‌சைத்த‌லில்
நீ ஏற்றுக் கொண்ட‌போதும்,

பேருந்தில் நில‌வு வ‌ழித்துணையில் என்
தோளில் ஆழ்ந்து தூங்கிய‌போதும்,

நெருக்கிய‌டித்த‌ பேருந்தில் உன்பின்னால் நின்று
ப‌ய‌ண‌ம் செய்த நாட்களின் கூந்த‌ல்வாச‌மும்,

சில்லென்று காற்றுவீசும் க‌ட‌ற்க‌ரையில்
உன் நுனிவிரல்கள் கோர்த்து ந‌ட‌க்கும்போதும்,

துணிக்க‌டையில் புத்தாடையை தோளில் மாட்டி
எப்ப‌டி என புருவத்தை உயர்த்தி கேட்ட‌போதும்,

வேக‌த்த‌டையில் வ‌ண்டி வேக‌த்தை குறைத்து நீ
என் இத‌ய‌த்துடிப்பின் வேக‌த்தை பதற வைத்த‌ போதும்,

இவைதான் நீ என்னிடம் வெட்கப்பட்ட தருணங்கள்
அவைதான் நீ பெண் என்ற‌ நினைவை
என்னுள் நிறுத்தி வைக்கும் ந‌ங்கூர‌ங்க‌ள்.
அவைதவிர நீ என் சுரிதார் அணிந்த தோழன்!
இதுவும் போரடிக்கிறது என்று நாம் அலுக்கும்
நிமிடங்களில் நீ என்னிடம் கேட்கும் ஒரு
கேள்வி, அதேபோல் நானும் உன்னிடம்
"எப்போ க‌ல்யாண‌ம்? "
காத்துக் கொண்டிருக்கிறேன் என்னை
உன்னில் பாதியாக்கும் நொடிக்காக!

***************

கொஞ்சம் ஹாட்!!

இனிமேல் எனக்கு காய்ச்ச‌ல் என்றால்
க‌ழுத்தில் கைவைத்து பார்க்காதே?
சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்
உட‌ம்பு இன்னும் கொதித்து
உருகிவிட‌ப் போகிற‌து?

***************

டிஸ்கி: இனிமேல் எந்த கவிதைக்கும் டிஸ்கி போட‌ மாட்டேன். நான் என்ன‌ சொன்னாலும், இந்த‌ உல‌க‌ம் ந‌ம்ப‌ ம‌றுக்கிற‌து. :(

***************

டாக்ஸி-புலம்பல், ஏ.ஆர்.ரகுமான்-ப‌ரவசம்

நேற்று இரவில் இருந்தே எதிர்பார்ப்பு. நைட் படத்துக்கு எதுக்கும் போக வேண்டாம், லைவ்வாக பார்க்கலாம் என்று ரூம்மேட் ஐடியா கொடுத்தான். எப்படியும் 22 ஆம் தேதி அமெரிக்காவில் இரவு நேரத்தில் விருது வழங்குகிறார்கள். ஸோ, எப்படியும் நம் காலை நேரத்தில் தான்டா அவார்டு ஃபங்ஷன் என்று திடீர் ஐடியாவைக் கொடுக்கவும், எல்லாரும் நைட் படத்துக்கு போகலாம் என்று கோரஸாக முடிவு பண்ணினோம். உதயத்தில் டிக்கெட் கெடைக்காது என்ற எங்களின் எதிபார்ப்பில், எதிர்பாராமல் அடி விழுந்தது. 9 மணிக்கு செல்லும்போதும் கவுண்டரில் கூப்பிட்டு கூப்பிட்டு டிக்கெட் கொடுத்தனர். உதயத்தின், பிளாக் டிக்கெட் கல்ச்சர் பத்தி தான் தெரியுமே!!! ஒருவேளை, பிளாக்கில் விற்பவர்கள் தான், கவுண்டரில் சாவகாசமாக துணிச்சலுடன் உட்கார்ந்து விற்கிறார்களோ என்ற பயம், டிக்கெட் விலையைக் கொடுத்தே டிக்கெட் வாங்கும் வரை இருந்தது.

நாங்கள் பார்த்த படம், சத்தியமாக என் நினைவில் இல்லை. நாங்கள் டிக்கெட் வாங்கும்போதும், "டாக்ஸி" என்று சொல்லி தான் வாங்கினோம். படத்தின் பெயர், "தநா 01 அல 4777" ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல தமிழில் பெயர் வைக்கிறேன் பேர்வழிகள் என்று சொல்லி வாயில் நுழையாமல் இப்படியா பேர் வைக்க வேண்டும். ஆக நான் இந்த படம் பார்த்துவிட்டேன். ஸோ, விமர்சனம்.. பசுபதிக்காக இந்த படத்தை பார்க்கலாம். ஆத்திச்சூடி ரீமிக்ஸ்(என்ன கொடுமை சார் இது?) பாட்டில் இவர் ஆடும் குத்தாட்டத்தை பார்க்கும்போது, இன்னும் ஏன் எந்த புண்ணியவான் டைரக்டரும் ஏதாவது ஒரு பாட்டில் இவரை ஆடவைக்கவில்லை என்று தெரியவில்லை.

12 மணிநேரத்தில் நடக்கும் கதை தான். பசுபதியைத் தவிர வேற எந்த கேரக்டரும் டிரெஸ் சேஞ்ச் கூட பண்ணவில்லை. :( க்ளைமேக்சில், பசுபதி, அஜ்மலின் மனமாற்றம் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எனக்கு தோன்றுகிறது. சில இடங்களில் கொட்டாவியும், அட போங்கடா என்றும் சொல்ல வைக்கிறார்கள். நடுநடுவில் பசுபதியின் அக்மார்க் நடிப்பும், டைமிங் காமெடியும் ரசிக்க வைக்கிறது. சிம்ரன், நோ கமெண்ட்ஸ். 4 வருஷத்துக்கு முன்னால், எப்படி எல்லாம் ரசித்த ஃபிகர். பெருமூச்சு மட்டும் இப்போது.

ஹாலிவுட் பட ரேஞ்சில், இந்த படம் சரியாக 1 மணிநேரம் 51 நிமிடம் மட்டுமே. இடைவேளையும் சேர்த்தால் இரண்டு மணிநேரம். இப்படி படம் எடுத்து, டூவீலர் பார்க்கிங்கில் என் வண்டியை எடுக்க விடாமல் அரை மணிநேரம் வெயிட் பண்ண வைத்து சதி பண்ணிவிட்டார்கள். :(

*******

படம் பார்த்து விட்டு வந்தும் CNN டி.வியை பார்த்தால் மறுநாள் காலை 7 மணியில் இருந்து லைவ் கவரேஜ் என்று சொல்லி அவர்கள் கடையை மூடி கல்லா கட்டி விட்டார்கள். காலையில் சாவகாசமாக 9 மணிக்கு எழுந்து, விழுந்து அடித்துக் கொண்டு டி.வியை ஆன் பண்ணினால், Slumdog க்கு 2 விருதுகள் மட்டும் என்று ஃப்ளாஷ் ஓடிக் கொண்டிருந்தது. எதில் லைவ்வாக போடுகிறார்கள் என்று தேடிய போது StarMovies ல் ஓடிக் கொண்டிருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் பெயரை சொல்லும்போது, சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ரூமில் தூங்கி எழுந்து பார்த்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தோம். அதுவும் தமிழில், "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொல்லும்போது, ஓவென்று கத்தி விட்டோம். அந்த அரங்கில் இருக்கும் யாருக்கும், ஏன் Slumdog டீமுக்கே அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. டீமையும் விடுங்கள். இந்தியாவில் இருக்கும் யாருக்கும் தெரியாது, தமிழ் தெரியும் 6 (7?) கோடி தமிழர்களுக்கும், வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் மட்டும் புரிந்த, தெரிந்த வார்த்தை. அது தான் ஏ.ஆர்.ஆர். தமிழர்களுக்கு கிஃப்ட்டாக கொடுத்த பரவசம். பின்னர் வழக்கம்போல "ஜெய் ஹோ" பாடலை அவர் குரலில் அங்கு ஒலிக்க, நாம் கேட்பதும் இனிமையான பரவச நிமிடங்கள்.

தமிழ்நாட்டில் ஏதாவது சினிமா விழாக்களில், இங்க்லீஷில் பேசுவதை ஸ்டைலாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஸ்ரேயாக்களுக்கும், த்ரிஷாக்களுக்கும் கொடுத்த மூக்குடைப்பு. கீழே உள்ள ஃபோட்டாவில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஏ.ஆர்.ஆரை பார்க்கும்போது எனக்கு தோன்றிய கமெண்ட். இவருக்கு ஏன் ரெண்டு கை இருக்கிறது? இரண்டுக்கு பதிலாக மூன்றோ, நான்கோ இருந்தால் அதிலும் ஆஸ்கரை வென்று ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கலாமே?(என்ன ஒரு முட்டாள்தனமான கமெண்ட்?)


*******

ஆஃபிஸில் எங்க மேனஜரின் புண்ணியத்தில், அதிர்ஷ்ட குலுக்கலில்(Raffle, கரெக்ட் தான?) 500 ரூபாய்க்கான லேண்ட் மார்க்கில் பர்சேஸ் பண்ணுவதற்கான‌ கிஃப்ட் கூப்பன் கிடைத்துள்ளது. நல்ல புக்ஸ் வாங்குவதற்கு ஐடியாக்களும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. இல்லை, கூப்பன் தான் வேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ***Conditions Apply.

டிஸ்கி: ச்சே, Cash ஆக கொடுத்து இருந்தால், நைட் "SIGNATURE"க்கும் சைட் டிஷ்க்கும் பயன்பட்டிற்கும். ஆஃபிஸ் புண்ணியவான்கள் கெடுத்து விட்டார்கள்.

(யாருக்காவது இலவசமாக வேண்டும் என்று என்னிடம் கேட்க நினைப்பவர்கள், டிஸ்கியையும், Conditions Apply யையும் பார்த்துவிட்டு, யோசித்து கேட்கவும்.)

*******

காத‌ல‌ன் காத‌லியிட‌ம் கேட்க‌ விரும்பும் ப‌த்து கேள்விக‌ள்!


இந்த‌ ப‌திவு எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ ந‌ண்ப‌ர் ப‌ரிச‌லுக்கு ந‌ன்றி!

1. நைட் 12 மணிக்கு தூக்கம் கண்ணை சுழற்றி சுழற்றி அடிக்கும்போதும், நீங்க சொல்லும் மொக்கை கதையையும்(ஆஃபிஸ்ல காஃபி மெஷின் வேலை செய்யல வரைக்கும்) ஆச்சரியமா கேட்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, என்ன நியாயம்?

2. ஏர்செல்ல ஒவ்வொரு 32 நிமிஷத்துக்கும் ஆட்டோமேடிகா கால் கட்டாகும். அதுக்கும் நான் தான் உன் மொக்கை தாங்கமா கட் பண்ணிட்டேன்னு சொல்லி சண்ட போடுறீயே. கட் பண்றதா இருந்த நான் எதுக்கு கால் பண்ணியிருப்பேன்னு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? அப்படியே நான் கட் பண்றதா நீ நெனச்சாலும், தினமுமா கட் பண்ணுவேன்?

3. போன தடவை தான் உன் பர்த்டேக்கு நான் வாங்கி கொடுத்தது பிடிக்கலைன்னு சொன்னியேன்னு, உன்னையவே இந்த தடவை போத்தீஸ்க்கு கூப்பிட்டு போயி 1000 ரூபாய் சுரிதார் ஏரியாவ‌ காட்டுனா, ரொம்ப கரெக்ட்டா 6000 ரூபாய்க்கு சிந்தெடிக் வொர்க்ஸ் உள்ளதா பாத்து செலக்ட் பண்றீயே, உனக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதா?

4. டூவீலர் பின்னால உட்கார்ந்திட்டு, உன்னால வாய மூடிக்கிட்டு வரவே முடியாதா? வேகமா போனா ஸ்லோவா போங்கிறது.. ஸ்லோவா போனா ஃபாஸ்ட்டா போன்னு சொல்றது. நான் என்ன தான் பண்றது? உன்னை வ‌ண்டில‌ கூப்பிட்டு போன‌து தான் என் த‌ப்பா?

5. பொண்ணுங்க க்ரூப்பா போனா கையேந்தி பவன்ல, இல்ல சிம்பிளா ஒரு மெஸ்ஸிலோ சாப்பிட்டு முடிச்சுடுவீங்க‌. ஆனா என் கூட வரும்போதும் மட்டும் தான் காரைக்குடியும், அஞ்சப்பரும் கண்ணுல தெரியுமா? இல்ல என்கூட போய்தான் அந்த மாதிரி இடத்தில் எல்லாம் சாப்பிடுறீயா?

6. கடைசி 5 ஓவர், 20-20 மேட்ச் பார்க்கும்போது மட்டும், கரெக்ட்டா கால் பண்ணி "ஃபோன் லைன்ன‌ கட் பண்ணா, இனிமே நான் உன்கூட பேசவே மாட்டேன்"னு பிளாக்மெயில் பண்றீயே, அதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்?

7. சரி நீ 10 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்னு, டாஸ்மாக்ல இருந்து பதுக்கி வச்ச சரக்க, நிதானமா 11 மணிக்கு மேல ஆரம்பிச்சி ரெண்டாவது ரவுண்ட் ஓடிட்டு இருக்கும்போது திடீர்ன்னு கால் பண்ணி முக்கால் மணிநேரம் பேசி, அடிச்ச சரக்கெல்லாம் இறக்கிடுறீயே... நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?

8. நிம்ம‌தியா தூங்குற‌தே வீக் எண்ட் தான். அன்னைக்கும் காலைல 6 ம‌ணிக்கெல்லாம் எழுப்பி கபாலீஸ்வ‌ர‌ர் கோவில் கூப்பிட்டு போய் பிரகாரத்தை மூணு சுத்து சுத்த விடுறீயே, அது எப்ப‌டி வீக் எண்ட்ல ம‌ட்டும் உன‌க்கு க‌ட‌வுள் ப‌க்தி கூடிடுது?

9. ஆஃபிஸ் ஆணி அதிக‌ம்ன்னு கால் ப‌ண்ணாம இருக்கும்போது, "நீ என்னை ம‌ற‌ந்துட்டா, I Miss you da"ன்னு நைட் அழுது ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணுற‌ நீ, ஊருக்கு போனா ம‌ட்டும் எப்படி நாள்க‌ண‌க்குல என்கூட பேசாம‌ இருக்க‌ முடியுது? சென்னையில‌ இருந்தா ம‌ட்டும் தான் என்னை மிஸ் ப‌ண்ணுவீயா?

10. எல்லாத்துக்கும் மேல‌, ஒவ்வொரு நாளும் உன்னை பாக்கும்போது "உன் டிரெஸ் நல்லா இருக்கு"ன்னு சொல்ல‌ணும்னு எதிர்பாக்குற. சரி.. ஓ.கே. வேலிட். ஆனா ரோட்டுல‌ போற வ‌ர்ற அட்டகாசமான ஸ்ட்ரக்சருடன் வரும் ம‌ல்லு ஃபிக‌ரையும், கொல்ட்டி ஃபிக‌ரையும் சைட் அடிக்க‌க் கூடாதுன்னு, கேவ‌ல‌மா திட்டுறீயே? என்ன‌ கொடுமை ********* இது டிய‌ர்?


சாய்ஸில் விட்ட‌ கேள்விக‌ள்!

1. காரைக்குடியில‌யும், அஞ்ச‌ப்ப‌ர்ல‌யும் சாப்பிடும்போதோ இல்லை சத்யம் டிக்கெட் புக்கிங்கிற்கோ என்னைக்காவ‌து பில் பே ப‌ண்ணி இருக்கியா? ஆனா கிரெடிட் கார்டு ம‌ட்டும் வ‌ச்சிருக்க‌.. அதை வ‌ச்சி என்ன‌ சாமி கும்பிடுறீயா?

2. நைட், "I love you honey! Good night dear!"ன்னு SMS அனுப்பாம‌ல் தூங்கி விட்டால், என் ல‌வ் மீதே சந்தேக‌ம் வ‌ருதே ஏன்? இர‌ண்டு மூன்று நாட்க‌ள் பேசாம‌ல் இருந்து கொல்லுவ‌து ஏன்? அதே கோப‌ம் "BlackForest" ஐஸ்கிரீமில் க‌ன்வின்ஸ் ஆவ‌து எப்ப‌டி?

டிஸ்கி: மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் ல‌வ் ப‌ண்ண‌வில்லை. க‌ற்ப‌னையுட‌ன் க‌ல‌ந்து க‌ட்டி அடித்த‌ ப‌திவு இது.

********************

ஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே?

சரவணனும், ருக்குவும் இன்ஞ்சினிய‌ரிங் காலேஜில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். இப்போது பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சென்னையில் ஆளுக்கு ஒரு மூலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரொம்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். வாரத்தில் குறைந்தது ஐந்து தடவையாவது பார்த்துக் கொள்வார்கள். காலேஜில் இருந்தே ஏகப்பட்ட வதந்திகள். பார்ப்பதற்கும் இரண்டு பேருக்கும் இடையே அட்டகாசமான கெமிஸ்ட்ரி பொருந்தி இருக்கும்.

கல்லூரி காலத்தில் இருந்தே குறைந்தது 50 பேராவது ரெண்டு பேரிடம் பெர்சனலாக, "நீங்க லவ் பண்றீங்களா?" என்ற கேள்வியை கேட்டு இருப்பார்கள். சொல்லி வைத்தது போல, "ஏன் ஒரு பையனும் பொண்ணும் நல்ல ஃப்ரெண்ட்ஸிப்போடு பழகக்கூடாதா? நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்" என்று பதில் சொல்லி இருப்பார்கள். இவர்கள் ஏன், டிபார்மெண்ட் HOD கூட ஒரு தடவை கேட்டுவிட்டார். இத்தனை பேர் கேட்டு இருந்தாலும், இவர்கள் எந்த சஞ்சலமும் இல்லாமல் பழகிக் கொண்டிருந்தார்கள். கேட்டவர்களும் ஒரு நிமிடம் "நாம் தான் தப்பாக நினைத்துவிட்டோமோ?" என்று ஏதாவது ஒரு தருணத்தில் யோசித்து இருப்பார்கள்.

அவளுடைய ஹாஸ்டல், நுங்கம்பாக்கத்தில். இவன் ரூம், அடையாறில். ஒழுங்காக தூங்கி, சாப்பிட்டு, ஆஃபிஸில் வேலை பார்க்கிறார்களோ இல்லையோ, எப்படியாவது அடித்து பிடித்து பார்த்து விடுவார்கள். தினமும் காலையில் இவள் ஃபோன் கால் அவனை எழுப்பிவிடும். அவன் அசந்து தூங்கும் சமயங்களில் இவளுடைய ஃபோன் கால்ஸ். ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்காத படம் இல்லை. தி.நகர், மெரீனா பீச், பிரார்த்தனா டிரைவ் இன், பொன்னுசாமி ஹோட்டல், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என எங்கிலும் ஜோடியாகத் தான் பைக்கில் சுற்றுவார்கள். இவளை(னை)யோ, எங்கேயாவது தனியாக பார்த்தால், கண்டிப்பாக கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம், அவள்(ன்) சொந்த ஊருக்கு போய் இருக்கிறாள்(ன்) என்று.

சரவணன், "ஹேய் ருக்கு, இன்னிக்கு சிவா மனசுல சக்தி ரிலீஸ். அபிராமியில் டிக்கெட் போடட்டுமா?" என்று கேட்டான். "ஹலோ சார், வெள்ளிக்கிழமை நைட் உங்க அருமை ஃப்ரெண்ட் முத்துவேலோடு சேர்ந்து பார்ட்டிக்கு போகலியா?" என்றாள்.

"பாத்தியா, கிண்டல் பண்றேளே? நான் தான் இப்ப அதிகமா தண்ணி அடிக்கிறது இல்லைல. மறுபடியும் மறுபடியும் ஏன் அதை சொல்லிக் காட்டுற?"

"அப்படியா, இப்பவும் தம் அடிக்கிறத நீ குறைக்காம தான் திரியுற? எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். திருந்தவே மாட்ட. சரி டிக்கெட் போடு. எனக்கு இப்ப க்ளையண்ட் கால். பை"

காலேஜ் நாட்களில் இருந்து ருக்கு, சரவணனை திட்டுவது என்றால், அது இந்த காரணத்திற்கு மட்டும் தான். கொஞ்ச நாட்களாக, சரவணனுக்கு ருக்கு மேல் ஏதோ ஒன்று சொல்ல தெரியாத ஃபீலிங். போன தடவை, பஸ்ஸில் ஒன்றாக ஊருக்கு போன தருணத்தில் அவள் இவன் தோளில் சாய்ந்து தூங்கியதில் இருந்து தான், சரவணன் மனதில் அரக்கன் புகுந்து விட்டான். அவளிடம் எப்படி சொல்வது என்று சத்தியமாக தெரியவில்லை. ஆனாலும் சீக்கிரம் சொல்லி விடுவது என தீர்மானத்துடன் இருந்தான்.

ஒரு சனிக்கிழமை அதிகாலையில், மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சொல்லிவிடலாம் என்று சரவணன் முடிவு பண்ணினான். ருக்கு ஆரம்பித்தாள். "சரா, இன்னிக்கி நைட் நான் ஊருக்கு போறேன். என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. சிங்கப்பூர் மாப்பிள்ளையாம். ஈவ்னிங் ஹாஸ்டல் வந்து என்னை கூப்பிட்டு போறீயா?"

மனதைப் பிழியும் சோகத்துடன் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல், "சரி. என்ன திடீர்னு? என்கிட்ட சொல்லவே இல்ல."

"எனக்கே நேத்து நைட் தான் தெரியும். சீக்கிரம் செட்டில் ஆகணும்ல. இவனை பார்த்து நாட் ஓ.கேன்னு சொல்லிட்டு, எனக்கு பிடிச்ச மாதிரி பையன் குவாலிட்டிஸ்ஸ அப்பாக்கிட்ட சொல்லிட்டு, நைட் டிரெயின் பிடிச்சு கிளம்ப வேண்டியது தான்!" என்று தெளிவாக உடைத்து சிதறும் கோவில் தேங்காய் போல உடைத்தாள்.

இவ‌ளிட‌ம் சொல்லி புரிய‌ வைப்ப‌து, ரொம்ப‌ க‌ஷ்ட‌மான‌ விஷ‌ய‌ம் என்று ம‌ட்டும் ச‌ர‌வ‌ண‌ன் ம‌ண்டையில் உறைத்த‌து. ஏற்கெனவே குவாலிட்டிஸ் அது எதுன்னு பெரிசா பேசுறா? தம், தண்ணி, "மவனே, சரவணா நீ செத்த" என்று புலம்பிக் கொண்டான். எக்மோர் ஸ்டேஷனில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். அவள் இறங்கியவுடன்,"என்ன‌ ஆச்சு?" என்றான். "நான் நென‌ச்ச‌ மாதிரி தான் ந‌ட‌ந்த‌து" என்றாள் க‌ண்ணை சிமிட்டியப‌டி. பின் அவ‌ளை ஹாஸ்ட‌லில் விடும்வ‌ரையில் அவ‌ன் ஒரு வார்த்தை கூட‌ பேசவில்லை. "ஈவினிங், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச் போக‌லாமா?" என்று கேட்டாள் ல‌ஞ்ச் பிரேக்கில். அவள் ரொம்ப கேஷுவலாக பீச் மணலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப‌ நேர‌ம் மௌன‌த்திற்கு பிறகு, "என்ன மாதிரி குவாலீட்டிஸ்னு உங்க அப்பாகிட்ட சொன்ன" என்று கேட்டான்.

"ம்ம்ம். நல்ல ஹைட்ல, மனசுக்கு பிடிச்ச மாதிரி, நான் பண்ணுற தப்புகளை ரசிக்கிற மாதிரி கியூட்டான‌ பையனா..." என்றாள். அவள் முடிக்கும்முன் பொறுமையில்லாமல் "இப்ப நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. தப்புன்னு தெரியும். ஆனா என்னால தாங்கிக்க முடியல. நான் உன்ன லவ் பண்றேன் ருக்கு. ப்ளீஸ் என்னை இக்னோர் பண்ணாத" என்றான் கொஞ்சம் விட்டால் அழுதுவிடும் குரலில். ருக்கு,அவனை ஏற இறங்க ஒரு முறை பார்த்தாள். அடக்க முடியாத கோபத்துடன், "ஏன்டா, இப்படி பசங்க மானத்த வாங்குறே?. ஒரு பொண்ணு மனசுல என்ன நினைக்கிறான்னு கூட தெரியாத லூசா நீ. இதைப் பத்தியெல்லாம் பேசுற டைமா இது?

நான் எங்கப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு, கல்யாணத்துக்கு தேதியும் குறிச்சுட்டு வந்திட்டேன். ஆனா, ஹீரோ சார் இப்ப தான் ப்ரோப்பஸே பண்றார்." என்றாள். "அப்ப என்னை பத்தி ஒரு நிமிஷம் கூட நீ யோசிக்கலையா?" என்றான் ஹஸ்கி வாய்ஸில் சோகத்தை டன் டன்னாக டோஸ்ட் பண்ணி. "உன்னை வச்சிட்டு என்னடா பண்ணுறது. சரியான டியூப்லைட். நீ தான்டா மாப்பிள்ளை. உன்னை பத்தி தான்டா அப்பாகிட்ட பேசுனேன்." என்றாள் முதல் முறையாக சரவணனிடம் வெட்கத்துடன்..

ஒரு பஞ்ச்:: சம வயதில் உள்ள ஒரு பையனும் பொண்ணும் நல்ல ஃப்ரெண்ட்ஸா ரொம்ப நாள் இருக்கவே முடியாது. கண்டிப்பாக அது காதலில் முடியும்; இல்லையென்றால் ஃப்ரெண்ட்ஸிப் பிரேக் ஆகிவிடும்.

************************

என்னுடைய பெயரிலேயே!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதுவரை "ராம் சுரேஷ்" என்று என் நண்பன் பெயரில் எழுதிவந்த நான், இன்று முதல் கூச்சத்தையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னுடைய பெயரிலேயே எழுதலாம் என்று முடிவு பண்ணிவிட்டேன். இதனால் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த இரண்டு மாதமாக எனக்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏதோ புதிதாக வந்தவன் என்று என்னை ஒதுக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி: இது நேற்று இரவில் என் நண்பன் "ராம் சுரேஷ்", "SIGNATURE" வாங்கித் தராததால் எடுத்த முடிவல்ல.

*****************

சிவா மனசுல சக்தி - திரை விமர்சனம்


"நான் கடவுள்" சினிமா போன்று தமிழ் சினிமாவின் தற்போதைய சீரியஸ் சூழ்நிலைக்கு ஜாலியான ரிலீஃப். லைஃப்ல எதையும் சீரியஸா எடுத்துக்காத ஆனா ஃபிகர்கிட்ட மட்டும் மல்லுக்கு நிற்கும் ஒருவன், லைஃப்ல எல்லாவற்றையும் சீரியஸா எடுத்துக் கொள்ளும் ஜாலி கேலியான பெண், என இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் முழுநீள காதல் ஹார்மோன்களின் சடுகுடு.

படத்தின் முதல் காட்சியில் இருந்தே இருவரையும் மோத விட்டு இருக்கிறார்கள். யூசஃப் பதான் பேட்டில் மாட்டிய பந்துகள் பவுண்டரி லைனுக்கு தெறிப்பதுபோல், முதல் பாதி முழுவதும் இளமை சிக்ஸர்கள் தான். புரொஃபஷனல் கூரியரில் வேலை பார்க்கும் ஜீவாவுக்கும், ஹலோ FM ல் RJவாக இருக்கும் அனுயாவிற்கும் ரொம்ப கச்சிதமான ரோல். ஹீரோயின் ஒரு சாயலில் பாடகி சின்மயியை நியாபகப்படுத்துகிறார். இவர் ஜீவாவை டீலில் விட்டு சுத்த விடும் இடங்களிலும், டென்ஷன் ஆகி முறைக்கும்போது, இவர் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று ஜொள்ளுவிட வைக்கிறார். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், ஜீன்ஸ் தான் படம் முழுவதும் இவரோட காஸ்ட்யூம்.

டாஸ்மாக்கில் தினமும் அட்டென்டன்ஸ் போடுவதை ஒரு கொள்கையாவே வைத்துக் கொண்டு, அரைகுறை பீட்டர் இங்கிலீஷில் ஹீரோயினுக்கு பிராக்கெட் போடுவதை முழுநேர தொழிலாக வைத்து படம் முழுவதும் காமெடியில் பின்னுகிறார். அதுவும் ரிஜிஸ்டரர் ஆஃபிஸில் எல்லாரையும் அடித்து துவைத்துவிட்டு அவர் சொல்லும் காரணம் "அட, அட, இவன் நம்ம கேட்டகிரி" என ஃபீல் பண்ண வைக்கிறார்.

செல்ஃபோனை உடைத்து ந‌ண்ப‌னுடைய‌ காத‌லுக்கு ஹெல்ப் ப‌ண்ணும் இட‌ங்க‌ளில் ச‌ந்தான‌ம் எக்ஸ்ப்ர‌ஷ‌னில் பின்னுகிறார். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் குடும்ப‌மும் லூசு மாதிரி காட்டி இருக்கிறார்க‌ள். ஆசைஆசையாக பர்த்டேக்கு கேக் ரெடி பண்ணி, ரொம்ப எமோஷனலாக பேசும் பெண்ணை ஒட்டு மொத்த குடும்பமே காமெடி பண்ணி கலாசும் இடம் அருமை. அதற்காக அவள் வருந்தி சென்றபின் வரும் இன்டெர்வெல் முடிச்சும் அருமை.

"கிங்க்ஃபிஸர் 20 மினிட்ஸ் லேட், பாண்டிச்சேரி சரக்கு பார்சல், வீட்டுக்குள் வந்து சிகரெட்டை போட்டுக் கொடுப்பது" என முதல் பாதியில் இருந்த அருமையான ட்ராக்கை, இரண்டாம் பாதியில் முழுவதுமாக கோட்டை விட்டுள்ளனர். உட்கார்ந்திருக்கும் எல்லார் சீட்டிலும் வேட்டு வைக்கிறார்கள்.

இந்த இளமை பேக்கேஜுக்கு யுவன் இல்லாமலா? சரோஜாவிற்கு பின் இதிலும் பின்னியுள்ளார். "ஒரு கல், ஒரு கண்ணாடி" பாடல் என்னுடைய ஃபேவரைட். "ஜெய் போலே நாத்" என அடித்தொண்டையில் உறுமிய ஆரியா, மீண்டும் ஹேண்ட்சம் மாப்பிள்ளையாக ஒரு சீனில் வந்து போகிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ நாலு பேருடன் சண்டை போட்ட‌வுட‌ன் காத‌ல் வ‌ருவ‌து, பாட‌ல்க‌ளில் குத்துவிள‌க்கு மாதிரி இருக்கும் ஹீரோயினுடைய‌ நீ....ண்ட‌ கால்க‌ளையும், இடுப்பையும் ந‌ம்பி இருப்ப‌து விகட‌னும் க‌ம‌ர்ஷிய‌ல் ஐயிட்ட‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியாம‌ல் திண‌றுவ‌து தெரிகிற‌து.

ஜீவாவின் நல்ல‌ ம‌ன‌தை, ஹீரோயின் புரிந்து டாஸ்மாக்கில் வ‌ந்து அழுத‌ உட‌னே ப‌ட‌த்தை முடித்து இருக்க‌லாமே.. அதை விட்டு விட்டு கோயில், க‌ல்யாண‌ம், கிஸ், ஃப‌ர்ஸ்ட் நைட், பாடல், அழுதுகொண்டே காமெடி பண்ணும் க்ளைமேக்ஸ் என ஜவ்வாக இழுத்துக் கொண்டு... தேவையே இல்லை. கொஞ்ச‌ம் க‌வ‌னித்து இருக்கலாம். இருந்தாலும் அந்த‌ கிஸ் அட்ட‌காச‌ம். ஹி ஹி கொஞ்ச‌ம் ஜொள்ளு.

சிவா ம‌ன‌சுல‌ ச‌க்தி - முத‌ல் பாதி இள‌மை காக்டெயில், இர‌ண்டாம் பாதி மொக்கைச் சாமி

******************

இள‌ம்காத‌ல் ஜோடிக‌ள் வாழ்க‌!


கண்களுக்கு எனைக் காண
தடை போட்டேன் என்று
ப‌தில் சொல்கிறாய்
வெட்க‌த்தை விட்டு !

பாவாடை தாவ‌ணியில்
குத்துவிள‌க்காய் ஜொலிக்கும் நீ
மினி ஸ்க‌ர்ட் ஸ்லீவ்லெஸ்ஸில்
தெருவிள‌க்காய் தூதுவிடுகிறாய்
க‌ண்சிமிட்டி!

முத்தத்தின் போதையை விட
'டாடி ப‌க்க‌த்தில்' என்று
கிசுகிசுக்கும் வேளைக‌ளின்
ஹ‌ஸ்கி வாய்ஸின் பதற்றத்தில்
ப‌ன்ம‌ட‌ங்கு ஏற்றுகிறாய்
பாதி குவார்ட்ட‌ரின் போதை!

'டாடி வீட்டில் இல்லை'
'ரூம்மேட் ரூமில் இல்லை'
'தியேட்ட‌ரில் கூட்ட‌மே இல்லை'
என்ற‌ உன் உற்சாக‌ குர‌ல்களுக்கு
'தேமே' வென்று 'ப‌ய‌மா இருக்காடா'
என‌ கை பிடித்து ஆறுத‌ல்
சொன்ன தருணங்களில்
'ச‌ரியான‌ லூசுடா' என்ற உன் பார்வைக‌ளின்
அர்த்த‌ம் புரிய‌வில்லை
கரணட் போன தெருவின் முனையில்
க‌ன்ன‌த்தில் நீ முத்த‌மிடும் வ‌ரை!

ப‌ர்த்டேக்கு நீயே செய்து
எடுத்து வ‌ந்த‌ குளோப் ஜாமூனைவிட
தேனாய் இனித்தது
செல்லும்போது க‌ன்ன‌த்தில் நீ இட்ட‌ முத்த‌ம்!
ச‌ரி அதே ஸ்வீட் உன் ப‌ர்த்டேக்கு
த‌ர‌லாமென்று நான் நினைத்தால்
திளைக்க திளைக்க‌ இத‌ழ்முத்த‌ம்
த‌ந்து யோசிக்க‌ வைத்தாய்
கிஃப்ட் என‌க்கா? உன‌க்கா?
இல்லை ந‌ம‌க்கு.

மூச்சுமுட்ட‌ முத்த‌ம்
முடியுமா?
முடியாது, கஷ்டம் என்றாய்
ச‌ரி செக் ப‌ண்ண‌லாம் என்றேன்
"திருடா" என்று நெஞ்சில் குத்த‌ ஓங்கினாய்,
"மெதுவாக‌, உன் இத‌ய‌த்திற்கு வ‌லிக்கும்" என்றேன்
வலிக்கும் என் இதயத்திற்கு
ஒத்தடம் வேண்டாம் உன்
இதழ் தடம் மட்டும் போதும் என்றாய்!
மூச்சுமுட்டவா என்றேன்.
நீ என்னை அடிக்க துர‌த்துவ‌தை
மேக‌த்தில் இருந்து தேவ‌தைக‌ள்
ஆசிர்வ‌திக்கிறார்க‌ள் ம‌ல‌ர் தூவி!

ஹார்ட்பீட் செக்ப‌ண்ணும் டாக்ட‌ர்க்கு
சுத்தமாக புரிய‌வில்லை
"ஏன் இப்ப‌டி அநியாய‌த்துக்கு ஏறுது இற‌ங்குதுன்னு"
அவ‌ருக்கு எப்ப‌டி தெரியும்
வெளியில் உட்கார்ந்திருந்த‌ உன்னுடைய
சுரிதாரின் துப்ப‌ட்டா காற்றில்
ப‌ற‌ப்ப‌தும் நீ ச‌ரிசெய்வ‌தும்!

***********************************

பி.கு: என்னுடைய‌ சொந்த‌ க‌விதை. முத‌ன்முத‌லில் எழுத‌ ட்ரை ப‌ண்ணி இருக்கிறேன். பிழைக‌ள் இருந்தாலோ, உரைந‌டை வ‌டிவில் இருந்தாலோ பொறுத்த‌ருள்க‌ ப்ளீஸ்.

டிஸ்கி: நான் யாரையும் காத‌லிக்க‌வில்லை! இது என்னுடைய சொந்த‌ அனுப‌வ‌மா போன்ற‌ கேள்விக‌ளை வெறுக்கிறேன் :(

************************************

கேப்டன் சீட் அடியில் தீ!!

தோனி. இன்று கிரிக்கெட் விளையாடும் எல்லா நாட்டுக்காரர்களையும் கலவரப்படுத்தும் பெயர். விளையாட கிரவுண்டுக்குள் இறங்கும்போதே அதிர்ஷ்டத்தையும் கையோடு கூட்டி வரும் மனிதன். 'தலைக்கு மேல் வெள்ளம்' என்ற சூழ்நிலை வரும்போதும் டென்ஷன் ஆகாமல் அமைதியாக வளர்ந்து நிற்கும் வீரர். வெற்றி பெறும் ஒவ்வொரு மேட்சின் இறுதியில் பேசும்போது மூச்சு விடுகிறாரோ இல்லையோ, "This is very good Team effort" என்று மறக்காமல் சொல்லும் சிறந்த கேப்டன்.

இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளிலும் தோற்று நாடு திரும்பியது. மும்பை தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால் 7 போட்டிகளிலும் தோற்றுவிட்டு தான் திரும்பி இருப்பார்கள். அவமானப்பட்டு ஊருக்கு போன பீட்டர்சன், டிரஸ் சேஞ்ச் பண்ணினாரா என்று கூட‌ தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னால் மீடியாவிடம் சொன்னது, "இங்கிலாந்து அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகுகிறேன்".

அடுத்து ஒரு மாதம் ஓய்வு. இந்தியா இலங்கை சுற்றுப்பயணம் சென்றது. தொடர்ந்து 4 போட்டிகளிலும் இலங்கையை அணியை துரத்தி துரத்தி அடித்தனர். இந்த சூடான இளைஞர் படை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை நம்பி இல்லை என்று உலகத்திற்கு நிரூபிக்க அம்பயர் தர்மசேனா உதவினார். மூன்று போட்டிகளிலும் சீக்கிரமாக தவறாக அவுட் கொடுத்து இலங்கைக்கு உதவினார். இலங்கையின் கெட்ட நேரம், இப்போது இருக்கும் இந்திய அணியில் யாருமே அவுட் ஆஃப் ஃபார்மில் இல்லை. ஒரு மேட்ச்சில் ஷேவாக் வெளுத்து வாங்கினார் என்றால், இன்னொரு மேட்ச்சில் கம்பீர் 150 அடித்து பொறுமையை சோதித்தார். இது எல்லாவற்றிற்கும் மேலாக யுவராஜின் கெட்ட கெட்ட ஃபார்ம். அவருடைய ப்ளஸ், பௌலரை பார்த்து பயப்படாமல், பதட்டப்படாமல் அசால்ட்டாக அநாயாசமாக விளையாடி பௌலரின் கான்ஃபிடன்ஸை உடைப்பது. தோனியை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவருக்கு இருக்கும் நம்பிக்கை, அவருடைய ப்ளானுக்கு ஏற்றார்போல இருக்கும் ரொம்ப ஃப்ளெக்சிபிளான டீம்.

ஒரு நாள் போட்டியில் வாங்கின அடி போதாது என்று 20 20யிலும். 15 ஓவர் மேட்ச் வரை இலங்கைக்கு சாதகமாக தான் இருந்தது. அவர்களுக்கு தேவை மூன்று விக்கெட் மட்டுமே! ஆனால் அவர்களின் கெட்ட நேரம் யூசஃப் பதான், இர்ஃபான் பதான் உருவத்தில் களத்தில் அதகளம் பண்ணியது. பதான் பிரதர்ஸ் எல்லா திட்டத்தையும் தவிடு பொடியாக்கி, இலங்கை அணியை மண்டை காய வைத்தார்கள். அந்த டென்ஷன் இர்ஃபான் முகத்தில் அடிக்கடி ரேகைகளாக தோன்றி மறைந்து கொண்டிருந்தது. ஆனால் "கடவுள் பாதி மிருகம் பாதி" ரேஞ்சில் இருந்த யூசஃப், ரொம்ப கூலாக பபிள்கம் மென்று கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 5 மட்டும் தேவையான சூழ்நிலையில் கூட, ஒரு இளம்பெண் சாமி கும்பிட்டுக் கொண்டே இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இனிமேல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 2020 போட்டிகளை பார்க்கக்கூடாது என்று சொல்லவேண்டும். அந்த பதற்றம், பரபரப்பு, எக்ஸைட்மென்ட் எல்லாம் ஒத்துவராமல் B.P எகிற வாய்ப்பு உண்டு.

அனைத்தையும் முடித்துவிட்டு இந்தியா அங்கிருந்து கிளம்ப கூட இல்லை. அதற்குள் இலங்கை அணி கேப்டன், ஜெயவர்த்தனே கேப்டன் பதவியை ராஜினாமா பண்ணபோவதாக அறிவித்துள்ளார். இதற்கு வேறு என்ன காரணமாய் இருக்க முடியும்? எல்லாவற்றிற்கும் தோனி & டீம் தான் காரணம்.

இனிமேல் யார் யாரெல்லாம் கேப்டன் பதிவியை ராஜினாமா பண்ண போகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து நியூசிலாந்திற்கு இந்திய அணி சுற்றுபயணம் செய்ய இருக்கிறது. டேனியல் வெட்டோரி தான் கேப்டன் என்று நினைக்கிறேன். வெட்டோரி, உஷார். நீ உட்காரும் கேப்டன் சீட் அடியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

"பூங்காத்து திரும்புமா" ஒரு பேச்சிலரின் கல்யாண ஆசை!


வரும் சனிக்கிழமை போய் அடுத்த சனிக்கிழமை வந்தால் சிவாவுக்கு 28 வயது முடிந்து 29 பிறக்கிறது. இவன் ஒரு சாஃப்ட்வேர் ஆள். முன் மண்டை ஏறிப்போய் இருக்கும் அவன் தலையில் எண்ணெய் தேய்த்து ரோட்டில் போனால் கிளார் அடிக்கும். ஆனால் என்ன இன்னும் கல்யாணம் தான் ஆகவில்லை. இவனுக்கு இல்லாத வசதி வாய்ப்பா, இல்லை வேலையா? ஆனால் என்ன பண்ணுவது சிவாவின் அம்மாவும் பார்க்காத பெண்கள் இல்லை போகாத ஜோதிடர்கள் இல்லை. ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.

சென்னையில் ப‌க்க‌த்து அப்பார்ட்மெண்டில் இருக்கும் LKG குழ‌ந்தை, அவ‌ன் வீட்டுக்கு வ‌ந்த‌ புதிதில், "அண்ணா , அண்ணா" என்று அழைத்தாள். இப்போதெல்லாம் "ஹ‌லோ அங்கிள்" என்று பாச‌த்தோடு தோளில் தொற்றுகிறாள். அந்த‌ மாதிரி அச‌டு வ‌ழியும் ச‌ம‌ய‌ங்க‌ளில், தான் வ‌ய‌தாகி கொண்டிருக்கும் வீரிய‌த்தை உண‌ர்ந்தான். அம்மாவிட‌ம் க‌த்தியும் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை. நாள‌டைவில் இவ‌னுக்கு இது காம்ப்ள‌க்ஸ் மாதிரி ஆகி பெண்க‌ளுட‌ன் பேசுவ‌தையே த‌விர்த்தான். கூட‌ வேலை பார்க்கும் 22 வ‌ய‌து ந‌ண்டு, சிண்டுக்கெல்லாம் க‌ல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்று ப‌த்திரிக்கை நீட்டும்போது, தார் ரோட்டில் உச்சி வெயிலில் வெறும் காலுட‌ன் ந‌ட‌ப்ப‌து போல‌ ஃபீல் ப‌ண்ண‌ ஆர‌ம்பித்தான்.

இதுவாவ‌து ப‌ர‌வாயில்லை. புதிதாக‌ வேலை பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள், ல‌ஞ்ச் ஹ‌வ‌ரில் கேஷுவ‌லாக‌, "அப்புறம் சார், உங்க‌ளுக்கு எத்த‌னை குழ‌ந்தைங்க‌? வித்யா ம‌ந்திர்ல‌ குழ‌ந்தைக்கு அட்மிஷ‌ன் கார்டு வாங்கிட்டீங்க‌ளா?" என்று கேட்கும்போது "இன்னும் க‌ல்யாண‌மே ஆக‌வில்லை" என்று சொல்லி சாத‌த்தை கொட்டிவிட்டு த‌ம் அடித்து ஆற்றாமையை கொட்டுவான்.

சீக்கிர‌மே ஆஃபிஸில் இருந்து வ‌ந்துவிட்டு, பாகிஸ்தான்‍ வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கால் ப‌ண்ணினாள். "சிவா, எப்ப‌டிடா இருக்க‌? முத்துராஜ் மாமா தெரியுமா, டே அதாண்டா சாய‌ல்குடில‌ இருக்கிறா என்னோட‌ க‌டைசி தம்பி. ந‌டுவுல‌ கூட பத்து வருஷமா பேசாம‌ ச‌ண்டை போட்டு கெட‌ந்தோமே. அவ‌ன் தான்டா..இன்னிக்கி க‌ல்யாண‌த்துல‌ பாத்தேன். அவ‌ பொண்ணு வ‌ள‌ர்ந்து பெரிய‌ ம‌னுஷி ஆகிட்டாளாம். உன‌க்கு ச‌ம்ம‌த‌மான்னு கேட்டு சொல்ல‌ சொல்றான்டா" என்றாள். "அப்பாடா, ஒரு வ‌ழியா சொந்த‌துக்குள்ளேயே முடிஞ்ச‌து" என்று ம‌ன‌சுக்குள் நினைத்துக் கொண்டு, "ச‌ரிம்மா ச‌ந்தோஷ‌ம். நான் இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ர்றேன். போய் பார்க்க‌லாம்" என்று சொல்லி போனை வைத்து விட்டு பெருமூச்சு விட்டான்.

சாய‌ல்குடி போய் பொண்ணை பார்த்துவிட்டு, மற்ற எல்லா ஃபார்மாலிட்டியும் முடித்துவிட்டு திருப்தியுட‌ன் சென்னை திரும்பினான். இர‌ண்டு வார‌ம் க‌ழித்து ஓர் இரவில் வேலை எல்லாம் முடித்து ஓய்ந்து போய் மெத்தையில் ஷூ பேண்ட் மாற்றாமல் ச‌ரிந்தான். அம்மா கால் ப‌ண்ணினாள். "அவ‌ன் கெட‌க்கான் போக்க‌த்த‌ ப‌ய‌. கூப்பிடுற மாதிரி கூப்பிட்டுட்டு அசிங்க‌ப்ப‌டுத்தி விட்டான். ஊரு ஒலகத்துல இவன்தேன் மகராணிய பெத்து வச்சிருக்கானா? செத்தாலும் இனிமே அவ‌ன் மூஞ்சில‌ முழிக்க‌ மாட்டேன். " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, சிவாவுக்கு அம்மா எதைப்ப‌ற்றி பேசுகிறாள் என்று சொல்லி தெரிய‌வேண்டிய‌து இல்லை. இதே போல் எத்த‌னை முறை பேசியிருப்பாள். போனை வைத்துவிட்டான். மீண்டும் ஒரு அவ‌மான‌ம். எப்போது தூங்கினான் என்றே தெரிய‌வில்லை.

ம‌றுநாள் காலை 11 ம‌ணிவாக்கில் ஆஃபிஸ் போய் சேர்ந்தான். என்ட்ர‌ன்சில் ஆட்டோமேட்டிக் டோர் லாக் அருகில் இருந்த‌ Swiping Machine ல் Swipe ப‌ண்ணினான். "கீ, கீ" என்ற‌ ச‌த்த‌துட‌ன் திற‌க்கவில்லை. Help Desk க்கு கால் ப‌ண்ணினான். அத‌ன் சீஃப், "ஸாரி சார். HR வினோத் சொன்ன‌துனால உங்க‌ளோட ஐ.டிய Deactivate ப‌ண்ணிட்டோம்." என்றான். சிவாவுக்கு அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ புரிந்து வ‌யிற்றைக் க‌ல‌க்கிய‌து. வினோத்திட‌ம் பேசின‌தில் க‌ன்ஃபார்ம் ஆகிவிட்ட‌து. வேலையை விட்டு துர‌த்த‌ப்ப‌ட்டான்.

கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கும்போதெ பொண்ணு கிடைக்க‌வில்லை. இனிமேல் க‌ன‌வில் கூட‌ க‌ல்யாண‌த்தை நினைத்து பார்க்க‌கூடாது என்று முடிவு ப‌ண்ணிவிட்டான். இர‌ண்டு மாத‌த்தில் வேற வேலை தேடி, Airtel நெட்வொர்க் ஆஃபிஸில் Technical Manager ஆகிவிட்டான். ஒரே வார‌த்தில் நாலு வ‌ர‌ன்க‌ள். அவ‌னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. அதில் ஒரு ந‌ல்ல‌ அழ‌கான‌ பெண்ணை பேசி முடித்து, ஒரு மாத‌த்திலேயே க‌லியாண‌மும் முடிந்து விட்ட‌து.

முத‌லிர‌வுக்கு வெயிட் ப‌ண்ணிக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌த்தில் அவ‌ன் பாதாம்பால் குடித்துக் கொண்டே யோசித்தான். ஒரு கிராமத்து மாமனுக்கு தெரிஞ்சது, எனக்கு தெரியலையே? சாஃப்ட்வேர் கம்பெனியையும், அதுல வேல பாக்குறவங்களயும் நம்பக் கூடாதுன்னு. இன்னும் அதே க‌ம்பெனியில‌ இருந்திருந்தேன்னா, "முத‌ல் ம‌ரியாதை" சிவாஜி மாதிரி "பூங்காத்து திரும்புமா"ன்னு தான் பாடிட்டு இருக்க‌ணும்.

************************

நான் கடவுள் - சாட்டைய‌டி


சமூகத்தால் விரும்பப்படாத, நிராகரிக்கப்பட்ட, அந்த இடத்தில் தன்னை வைத்து நினைத்து கூட பார்க்க விரும்பாத‌ இரு வேறுபட்ட மக்களின் வாழ்க்கையை பாலா, இளையராஜாவுடன் சேர்ந்து செதுக்கி இருக்கும் படம்.

எல்லாரும் சொல்வதுபோல் ஆர்யாவுக்கு சேது, பிதாமகனில் விக்ரமுக்கு கிடைத்த மாதிரியோ, நந்தா, பிதாமகனில் சூரியாவுக்கு அமைந்த மாதிரியோ நடிப்பின் உச்ச‌த்தை தொடும் அள‌வுக்கு வேலையில்லை. உண்மை தான். ஆனால் இந்த‌ ப‌ட‌த்தில், காசியில் வாழ்ந்த‌ அகோரிக்கு பெரிதாக‌ ந‌டிப்ப‌த‌ற்கு என்ன‌ ஸ்கோப் இருக்க‌ முடியும்? சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள், சாதார‌ண‌ ம‌னித‌ன், கோப‌க்காரன் போன்ற‌ கேர‌க்ட‌ருக்கு வாழ்வின் ஏதாவ‌து ஒரு ச‌ம‌ய‌த்தில் உண‌ர்வை கொட்டி ந‌டிக்க‌ வேண்டி இருக்கும். வாழ்வில் ப‌ற்ற‌ற்ற ச‌ந்நியாசி, த‌ன் ம‌ன‌தில் க‌ட‌வுள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவ‌னுக்கு வேறு என்ன‌ ந‌டிப்பில் வேரியேஷ‌ன் காட்டி ந‌டிக்க‌ முடியும்?

பாலாவுடைய இந்த‌ ப‌ட‌த்தின் பெஞ்ச் மார்க், அவ‌ரின் முந்தைய‌ ப‌ட‌ங்க‌ள் தான். இவ‌ரின் முந்தைய‌ ப‌ட‌ங்க‌ளின் பெரிய‌ ப்ள‌ஸ், க்ளைமேக்ஸ் சீன் லாஜிக் ஜ‌ஸ்டிஃபிகேஷ‌ன். ஆனால் இந்த‌ ப‌ட‌த்தில் எல்லாரும் சொல்வ‌து போல் அது மிஸ்ஸிங். அப்புற‌ம் சொல்வ‌து ஸ்கிரீன்ப்ளேயின் தொய்வு. இதில் என‌க்கும் சிறிது ஏமாற்ற‌மே. இர‌ண்டாம் பாதியில் ஒரு மாதிரி Non-Linear ஆக‌ இருக்கிற‌து. ஒரு ப‌ட‌ப‌ட‌ப்பு மிஸ்ஸிங்.

ஜெயமோக‌ன் ப‌ற்றியும், அவ‌ர் எழுத்துக்க‌ளும் என‌க்கு அவ்வ‌ள‌வாக‌ ப‌ரிச்ச‌ய‌ம் இல்லாத‌தால் நுண்ண‌ர‌சிய‌ல், பின்ந‌வீன‌த்துவ‌ம் என்று எதுவும் நினைவுக்கு வ‌ராம‌ல், வ‌ச‌ன‌ங்க‌ளை ர‌சித்தேன். அந்த‌ குட்டிப்பையனின் டைமிங் ப‌ஞ்ச், சான்ஸே இல்லை.

பூஜாவுக்கு, லைஃப் டைம் அச்சீவ்மென்ட் ரோல். ஆர‌ம்ப‌காட்சிக‌ளில் அவ‌ருக்கு ட‌ப்பிங்(அவரோட வாய்ஸ் தான்) பொருந்த‌வில்லை. ஆனால் போக‌ போக‌ பின்னியிருக்கிறார். அதிலும் அந்த‌ க்ளைமேக்ஸ், பின்னீட்டாங்க‌. அருமையான‌ ஸ்கோர். இவ‌ர் பாட்டு பாடும் போது, பின்ண‌ணியில் ஒரிஜின‌ல் ட்ராக்கை விட்ட‌து நெருட‌ல். அதிலும் "தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை" என்ற‌ சுந்த‌ர‌ம்பாள் பாட்டிற்கு அவ‌ர் வாய‌சைப்ப‌து கெட்ட‌ காமெடி. க‌வ‌னித்து இருக்க‌லாம்.

ப‌ட‌ம் முழுவ‌தும் இழையோடும் காமெடி, ப‌ட‌த்தின் பெரிய‌ ப்ள‌ஸ். இங்க்லீஷ் ப‌ட‌ங்க‌ளில் கிராஃபிக்ஸ் முக‌த்தோடு வ‌ரும் வில்ல‌ன்க‌ள் மாதிரி, ஒருவ‌ரை தேடிப் பிடித்து இருக்கிறார்க‌ள். பாதி உடைந்து போன‌ மூக்கும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் க‌ண்க‌ளும், கோணிக் கொண்டிருக்கும் வாயும், மொத்த‌த்தில் ச‌கிக்க‌வே இல்லை. ந‌ல்ல‌வேளை, ஒரு த‌ட‌வை கூட அவ‌ர் முக‌த்தை முழுமையாக‌ காட்ட‌வில்லை. பாதி பார்த்த‌த‌ற்கே இன்னும் ஒரு மாதிரி இருக்கிற‌து.

இளைய‌ராஜாவை ப‌ற்றி புக‌ழ்ந்து சொல்லிக் கொண்டே இருக்க‌லாம். அவ‌ரின் இரு பாட‌ல்க‌ளை ப‌ட‌த்தில் பார்க்க‌முடியாம‌ல் போன‌து வ‌ருத்த‌மே. பேக்ர‌வுண்ட் ஸ்கோர் பெரும் அதிர்வைக் கொடுத்த‌து.

எனக்கு இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. இரண்டு நாட்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எல்லாரும் விரும்பி பார்க்கக்கூடிய படமா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. யார் யாருக்கெல்லாம் "சகிப்புத்தன்மை" அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக பார்க்கலாம். அதேபோல் பாலா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங் பிடித்தவர்கள், கன்னாபின்னாவென்று ரசிக்கலாம். ஆச்சரியமாக, நான் இந்த ரெண்டு கேட்டகிரியிலும் இருப்பதால் எனக்கு பிடித்து இருந்தது. மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். (அப்புறம் குத்துதே, குடையுதேன்னு சொல்றது யூஸ்லெஸ்!)

எக்ஸாமு, டெஸ்டு ச்சே ச்சே எவன்யா கண்டுபிடிச்சான்?


தற்போது இருக்கும் பரபரப்பில் என்னுடைய ரூமில் சூடு பறக்கிறது. தினமும் தூங்க இரவு மணி 1 ஆகிவிடுகிறது. அதிகாலை 7 மணிக்கெல்லாம் எழுந்து முட்டி மோதி படித்துக் கொண்டிருக்கிறேன். 3 வருடத்திற்கு பிறகு புக்ஸை திறந்தால் "Taare Zameen Par" படத்தில் வருவது போல லெட்டர்ஸ் எல்லாம் டான்ஸ் ஆடுகிறது. அடிக்கடி கனவுலகிற்கு போய் விடுகிறேன். இல்லையென்றால் தூக்கம் சுழற்றிக் கொண்டு வருகிறது. எழுத்து எல்லாம் ஒரு கோர்வையாக வரமாட்டேன் என்கிறது. என்னுடைய ஹேண்ட் ரைட்டிங் கோழி கிறுக்குவதை விட மோசமாக உள்ளது. இதுவரை sign போடுவதற்கு மட்டுமே பேனாவில் எழுதி இருக்கிறேன். இப்போ தொடர்ச்சியாக 10 நிமிடம் எழுதுவதற்குள் கை முழுவதும் நடுங்குகிறது.

"The Alchemist" புக் படிக்கும்போது கூட ரொம்ப concentrate பண்ணி 170 பக்கங்களை இரண்டு நைட்டில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் தொடர்ச்சியாக செமஸ்டர் புக்கின் 20‍ பக்கங்களை படிப்பதற்குள் 5 முறையாவது சாமி ஆடி விடுகிறேன். கதை புக் படிக்கும்போது இருந்த ஆரவாரம், த்ரில் எனக்கு எக்ஸாம் புக் படிக்கும்போது இருக்கமாட்டேன் என்கிறது.

போதாக்குறைக்கு இந்தியா-ஸ்ரீலங்கா மேட்ச் வேற. இவனுங்க ஒழுங்கா விளையாடலைனா, "நம்ம கிரிக்கெட் டீமே, இப்படிதான். இவிங்க விளையாடுறத பாத்து டைம் வேஸ்ட் பண்ணி கடுப்பாறதுக்கு ஒழுங்கா உட்கார்ந்து எக்ஸாமுக்கு படிக்கலாம்" என்று விரக்தியிலாவது படித்து இருப்பேன். என்னுடைய நேரம். விளையாடும் மேட்ச்சில் எல்லாம் பட்டையைக் கெளப்பிக் கொண்டு உள்ளனர்.

தொடர்ந்து 9 ஒன் டே மேட்ச் ஜெயித்து கொண்டுவரும் தோனி & டீமிற்கும், 503 விக்கெட்டுகள் கைப்பற்றி வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்த முரளிதரனுக்கும் வாழ்த்துக்கள். முன்னாள்(3 வருடம் முன்னால்) இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தர்மசேனாவை, அம்பயர் ட்ரஸ்ஸில் தலையில் வட்ட கேப்போடு பார்ப்பதற்கு சோலைக்காட்டு பொம்மை மாதிரி இருக்கிறார். இவருக்கு எல்லாம் அம்பயர் பண்ண அனுமதித்த ICC ஐ உதைக்க வேண்டும். ஒருவேளை இந்த சீரியஸில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்து இருந்தால், தர்மசேனாவின் உருவபொம்மை இந்தியா முழுவதும் எரிக்கப்பட்டு இருக்கும், சச்சினுக்கு தொடர்ந்து மூன்று மேட்ச் தவறாக அவுட் கொடுத்ததற்கு. அந்தமட்டில் அவர் அதிர்ஷடக்காரர்.

இந்த டென்ஷனுக்கு நடுவில‌, மீரா ஜாஸ்மின் சண்டக்கோழி படத்துல சொன்ன டையலாக் தான் நியாபகம் வருகிறது. "இந்த எக்ஸாமு, டெஸ்டு ச்சே ச்சே எவன்யா கண்டுபிடிச்சான்?" இந்த டைம்ல தான் சீரியஸாக ஒரு முடிவு எடுத்து இருக்கேன். "இனிமேல் ஹையர் ஸடடிஸ் எனக்கு ஒத்துவராது. இதோடு விட்டுடணும். எல்லாத்தையும் விட்டுடணும்" அப்படின்னு தீர்மானம் எடுத்துட்டேன்.

இந்த கொடுமைக்கெல்லாம் உச்சகட்டம், நான் ரொம்ப காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாலாவின் "நான் கடவுள்" படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகிறது. சனி, ஞாயிறு எக்ஸாம் இருக்கிறது என்பதே போன வாரம் ஞாயிற்றுக்கிழமை தான் தெரிய வந்தது. ஆனால் அதுக்கு முன்னாலேயே டிக்கெட் புக் பண்ணி விட்டேன். :( டிக்கெட்டை வேற யாருக்கும் விட்டுக்கொடுத்து விட்டு ரூமில் உட்கார்ந்து எக்ஸாமுக்கு படிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ஸோ, ஒரளவுக்கு படித்து விட்டேன்(ஒரு நம்பிக்கை தான்). இன்னைக்கு நைட் படம் பார்த்துவிட்டு ரெண்டு நாள் நல்ல பையனா எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு, திங்கள்கிழமை காலைல இங்க திரைவிமர்சனம் ரெடியா இருக்கும். (அதற்குள் எல்லாரும் கொத்து பரோட்டா போட்டு இருப்பார்கள்).

இங்கே நான் எக்ஸாம், எக்ஸாம் என்று ச‌லம்புவது, நான் தொலைதூரத்தில் இருந்து BITS, Pilani யில் படித்துக் கொண்டிருக்கும் M.S.(Softare Systems)ன் இரண்டாவது செமஸ்டரை பற்றித் தான். வேளச்சேரி, குருநானக் கல்லூரியில் பிப்ரவரி 7, 8 தேதிகளில் நடக்கிறது.

****************

ஏம்ப்பா, என்ன வேலை பாக்குறவே? துரத்தும் IT தலைவலி


வினோத், இன்றைய தேதியில் வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ளும்படியான வேலை எதுவும் பார்க்கவில்லை. இவனாக கர்வப்பட்டு சொன்ன காலம் எல்லாம் மலையேறி விட்டது. யாராவது கேட்டாலும், ஏதாவது சொல்லி சமாளித்து விடுவான்.

ஏதாவது தூரத்து சொந்தங்கள், கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு, "ஏம்ப்பா, என்ன வேலை பாக்குறவே?" என்று கேட்டால், வேறு வழியின்றி "சாஃப்ட்வேர் கம்பெனியிலே HR Manager ஆக இருக்கிறேன்" என்பான். இதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு அந்த பெரியவர்களின் பரிகாசம், "என்னவே, பெரிய வேலை. எல்லாதையும் சேக்குறது மாதிரி சேத்துபுட்டு, நீயே ஒரு நாள் கழுத்த புடிச்சி வெளிய தள்ளுவே. இதெல்லாம் ஒரு வேலையா? எல்லாதுடைய வயித்தெரிச்சலையும், சாபத்தையும் வாங்கி நாம கஞ்சி குடிக்கணுமா? எல்லாதையும் உன்ன மாதிரி HR ஆளுங்க தூக்குறீங்க. ஆனா உங்கள மாதிரி HR ஆளுங்கள மட்டும் தூக்க மாட்டேங்குறாளே, ஏன்?? நீயே வேலைய விட்டுடுவே. ஊருபக்கம் வந்து விவசாயம் பாரு" என்ற ரேஞ்ச்சில் தொடரும். இதையும் கல்யாண மண்டப்த்திலோ, உறவினர்களின் வீட்டிலோ எல்லா சொந்தக்காரர்களின் முன்னாலும் கேட்டு தொலைந்து விடுவார்கள். மானம் போகும். வினோத்துக்கு இதெல்லாம கடந்த ஆறு மாதமாக பழகி விட்டது. அவன் காதல் மனைவி தான் அவனுக்கு பெரும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருப்பாள்.

வழக்கம்போல் ஆஃபிஸில் இந்த வாரமும் லிஸ்ட் ரெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். முதன் முதலில் சிலரை இவன் பேசி துரத்தியபின் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மிகவும் குற்ற உணர்ச்சியுடன் depressed ஆக இருந்தான். நாளாக நாளாக அவன் இதயமும் இறுகி போய், பழக்கப்பட்டு விட்டது. போன வாரம் மட்டும் ஒரே நாளில் 150 பேருக்கு Pink Slip ல் Sign பண்ணினான். இந்த வாரம் 20 பேர் மட்டுமே. லிஸ்டில் ஒவ்வொரு பெயராக பார்த்தான். ரவி, ஸ்ரீதர் என ஒவ்வொருவருக்கும் கால் பண்ண வரச் சொல்லி, பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு, அப்பொழுதே ஆக்சஸ் கார்டையும் பிடுங்கிவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

அவர்கள் தொங்கி போன முகத்தோடு, அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் நிர்க்கதியாய், நிராதரவாய் நிற்கும்போது, "இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று அவனே நினைத்துக் கொள்வான். சில பெண்களெல்லாம், அழுது ஆர்ப்பாட்டம் செய்து "போக மாட்டேன்" என்று அடம்பிடிக்கும்போது செக்யூரிட்டி மூலம் அனுப்பி வைத்த சோக வரலாறு எல்லாம் உண்டு. கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வேளையில் அங்கு நிற்கும் சிறை அதிகாரிகளை நினைத்து, இவன் ஓரளவுக்கு நிம்மதியடைவான். அவர்களோடு கம்பேர் பண்ணும்போது, "நான் ஒன்றும் அவ்வளவு கொடிய வேலை செய்யவில்லை" என்று சமாதானப்பட்டுக் கொள்வான்.

கடைசியாக நித்யா, இதற்கு முன்னால் இவள் வேலை செய்த ப்ராஜெக்ட்டில் டீம் லீடாக இருந்தவள். அதே டீமுக்கு இவன் HR Incharge ஆக இருந்தான், ஒரு காலத்தில். நல்ல பழக்கம். இவளிடம் எப்படி சொல்வது என்று ஒரு நிமிடம் அவனுக்கு தெரியவில்லை. ஒரு வழியாக தயங்கி தயங்கி அவளை அழைத்து, விஷயத்தை சொன்னான்.
"I'm Sorry to tell you. You're fired. Please understand I'm helpless", என்றான்.

நித்யா, "I want to know the solid reasons for being fired. This was my last time score card and appraisal ratings" என்று ஃபைலைக் கொடுத்து கேள்வி கேட்டாள்.

அதற்கு வினோத், இத்துப்போன டேப் ரிக்கார்டர் போல எல்லாரிடமும் சொன்ன அதே காரணத்தை, "This is the Management decision and since our this quarter revenue is not enough to manage the non-billable resources" 250 ஆவது முறையாக இவளிடமும் சொல்லி, PinkSlip ஐக் கொடுத்துவிட்டான். நித்யா, பொறுமையாக தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டு வெளியேறினாள்.

ஒரு வழியாக எல்லாத்தையும் முடித்துவிட்டு, ரிலாக்ஸ்டாக வீட்டுக்கு வந்தான். காலிங்பெல் அடித்தான். அடித்தான். மூன்றாவது முறை பலமாக அடித்தான். வினோத்தின் அம்மா வந்து கதவை திறந்தாள். "தூங்கிட்டீங்களா? அவளும் தூங்கிட்டாளா?" என்றான். "இல்லடா, கிச்சன்ல இருந்தேன். சாப்பிட்டீயா?" என்றாள் வினோத் அம்மா. "இல்லம்மா. எடுத்துவைங்க வரேன்." என்று சொல்லிவிட்டு முகம் கழுவி விட்டு, உடை மாற்றி வந்தான்.
"அவள் சாப்பிட்டாளா?" என்று கேட்டான். "இல்லடா, தலை வலிக்குதுன்னு சொல்லி அப்பவே படுத்தா, கூப்பிடு" என்று தட்டில் இட்லி வைத்தாள். வினோத் சத்தமாக, "நித்யா, நித்யா, வா சாப்பிடலாம்"

**************************

கங்கிராட்ஸ் நடால் & 'நான் கடவுள்' பூஜா


வாட் எ மேட்ச்???? என்று தான் சொல்ல தோன்றுகிறது. நேற்று நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் இறுதி போட்டியில் ஃபெடரருக்கும், நடாலுக்கும் இடையே நடந்த ஆக்ரோஷமான மேட்ச். கிட்டதட்ட‌ 5 மணிநேரம் நடந்த நீயா நானா போட்டி.

கடந்த மூன்று(2006,2007,2008) வருடமாகவே ஃபிரஞ்ச் ஓபன் போட்டிகளில் நடால் தான் ஹீரோ. அங்கு ஃபெடரர் எடுபட மாட்டார். அதேபோல் விம்பிள்டனும், ஆஸ்திரேலியன் ஓபனும் (2006,2007) ஃபெடரர் தான் எவர்கிரீன் ஹீரோ. ஆனால் 2008 ஜுலையில் நடந்த இதே மாதிரியான அட்ட்காசமான போட்டியில் தனது விம்பிள்டன் கிரீடத்தை நடாலுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டார் ஃபெடரர்.

2008 ஆஸ்திரேலியன் ஓபனில் இந்த ரெண்டு பேரும் இல்லாமல் நோவக் ஜாகோவிக் ஜெயித்தார். இதில் இருவரும் செமி ஃபைனலில் காலி.

இந்த வருட போட்டியில் மாறி மாறி(7-5, 3-6, 7-6(7-3), 3-6 ) செட் ஜெயித்துக் கொண்டு போக கடைசி செட்டில் 6-2 என்று நடால் ஃபெடரரை ஜெயித்து விட்டார். எப்போதுமே இல்லாத மாதிரி இந்த முறை ஃபெடரர் நிறைய தவறுகள். ஆனாலும் ஃபெடரர் கடைசியில் அழுத அழுகை, அதுவரை மேட்ச் பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைக்கும். (நான் இல்ல :), நம்ம தல நடால் தான்!). அப்போது அவர் கதறிய வார்த்தைகள், “Maybe I’ll try later. God, it’s killing me,” Federer said, sobbing. He returned to congratulate Nadal within minutes, saying: “You deserved it. You played a fantastic final.”

பார்க்கலாம். இன்னும் இந்த வருடம் ஃப்ரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் இருக்கிறது. ஆனால் என்ன கொடுமை என்றால் இந்த இரண்டிலும் நடப்பு (Since 2008) சாம்பியன் ரஃபேல் நடால் தான். (ஆஸ்திரேலியன் ஓபனையும் சேர்த்து மூன்றிலும் நடப்பு சாம்பியன்). இவரை சமாளிக்க ஃபெடரர் அநியாயத்துக்கு உழைக்க வேண்டும்.

Nadal ROCKS!!!! Better luck next time Federer!

******************

Just beside, Australian cricket team Sucks!

சொந்த மண்ணிலேயே தென்ஆப்ரிக்கா டீம் டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் போட்டி தொடரிலும்(4-1) கொடுத்த அடி போதாது என்று ரிக்கி பாண்டிங் நினைத்துவிட்டார் போல. பெர்த்தில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் மண் கவ்விவிட்டார்கள்.

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" இந்த டையலாக் ரிக்கி பாண்டிங் சொன்னா சூப்பரா பொருந்தும்.

******************

ஒருவழியாக நான்கடவுள் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணி விட்டார்கள். வரும் வெள்ளிக்கிழமை ஃபிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அபிராமி மெகாமாலில் புக்கிங்ஸ் ஓபன் பண்ணிவிட்டார்கள். நான் ஈவ்னிங் ஷோக்கு டிக்கெட் புக் பண்ணிவிட்டேன்.

இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரோ ஃபோட்டோஸ் கூட ரிலீஸ் பண்ணி இருக்கிறார்கள். பூஜாவை பிச்சை எடுக்கின்ற‌, கண் தெரியாத பெண்ணாக பார்க்க அநியாயத்துக்கு பாவமாக இருக்கிறது. படத்தை பார்த்தால், ஏதாவது நியாயப்படுத்தி இருப்பார்கள்.நான் கடவுள் - சென்சார்போர்டு, இளையராஜா விமர்சனம்
நான் கடவுள் - பாலாவின் விகடன் பேட்டி
நான் கடவுள் - பாடல் விமர்சனம்
************

வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்


ஒரு கிராமத்தில் இருக்கும் ஜெயிக்கவே தெரியாத 7 பேர் கொண்ட கபடி குழு, தட்டு தடுமாறி மதுரையில் நடக்கும் ஸ்டேட் லெவல் கபடி போட்டியில் கலந்து வெற்றி பெறுகிறார்களா என்பதை காதல், மோதல் கோர்த்து தொடுக்கப்பட்டுள்ள இளமைத் திருவிழா.

புதுமுகம் விஷ்ணு படத்தின் கதாநாயகன். பழனி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் படிக்காமல் ஆடு மேய்க்கும் ஒரு இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். சைக்கிளில் பஸ்ஸை துரத்தி ஓவர்டேக் பண்ணும் முதல் காட்சியிலேயே மனதில் ஒட்டிக் கொள்கிறார். சரண்யா மோகன், படத்தில் இவருக்கு இரண்டு நிமிடம் பேசுவதற்கு டையலாக் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் விஷ்ணுவை பார்த்து வெட்கம் கலந்து பரவசப்படும் இடங்களில், கண்கள் ஆயிரம் கவிதைகள் பேசுகிறது. கபடி கோச் ஆக வருகிறார் 'பொல்லாதவன்' கிஷோர். இவர் கொஞ்சம் ட்ரை பண்ணினால் அடுத்த பிரகாஷ்ராஜாக வரலாம். 'ஏய், ஏய்' என்று அடித் தொண்டயில் இருந்து கத்தி வில்லத்தனம் பண்ணாமல் இந்த மாதிரி நடித்துவிட்டு போகலாம்.

இவர்கள் தவிர படத்தில் அனைவரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரை பற்றியும் பிண்ணனியில் பின்னப்பட்ட குடும்ப உறவுகள் காட்சிகள் அருமை. புது பொண்டாட்டியை வீட்டில் விட்டுவிட்டு கபடி மேட்சுக்கு செல்லும் அவர் தான் இந்த க்ரூப்பின் காமெடி பட்டாசு. 50 புரோட்டாவை அசால்ட்டாக உள்ளே தள்ளி விட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் இடங்களில் தியேட்டரே அதிர்கிறது. இருந்தாலும் மனிதர் கிளைமேக்சில் அரற்றும் இடங்களில் நெஞ்சில் நிற்கிறார். அப்புறம் டீக்கடை அப்புக்குட்டியாக வரும் குள்ள மனிதர் நடிப்பில் அப்ளாஸ் வாங்குகிறார். டீ ஷர்ட்டை பார்த்து ஏங்குவது, மாமியார் தலையில் உறியடிக்கும் குச்சியால் போடுவது என கலக்குகிறார்.

சரண்யா கொலுசின் சத்தத்தை வைத்தே ஹீரோ உறியடிக்கும் காட்சிகள், அறிமுக டைரக்டர் சுசீந்தரனின் திறமைக்கு விசிட்டிங் கார்டு. இரண்டாவது பாதியில் மேட்ச்சில் வீரர்களுக்கு உதவி பண்ணும் உள்ளூர் பெரியவர், கிராமத்து சந்தில் கண்ணாமூச்சி ஆடும் ஜோடிகளுக்கு உதவி பண்ணும் குச்சி தாத்தா, சதா புலம்பும் பெண், தாவணியை மிகச்சரியாக கட்டும்(இடுப்பை கரெக்ட்டாக மறைத்து) கிராமத்து இளம்பெண்கள் என கிராமத்து அழகான ஆட்களை படம் நெடுகிலும் உலவ விட்டுள்ளனர்.

படத்தின் பாடல்கள் பெரும்பலம். 'கபடி கபடி' என ஷங்கர் மகாதேவன் பாடும் பாடல், கபடி குழு ஆக்ரோஷமாக ஆடும்போதெல்லாம் BGM ஆக ஒலிக்கிறது. கார்த்திக், சின்மயி குரலில் வரும் 'லேசா பறக்குது' பாடல் அருமையான காதல் டூயட். கிராமத்து திருவிழாவில் அரைகுறை ஆடையில் குத்துப்பாட்டு இல்லாமலா? இங்கேயும் உண்டு, 'வந்தனம், வந்தனம்' பாடல்.

செமிஃபைனலில் தோற்றுவிட்டு ஃபைனலில் விளையாடும் அபத்தம் இதில் இல்லை. முதல் பாதி, "என்னடா, திருவிழா, காதல் என இழுக்கிறார்களே" என்று நினைக்காமல், இரண்டாம் பாதியை பொறுமையாக பார்க்க வேண்டும். கபடி திருவிழாவே நடத்தி இருக்கிறார்கள்.

படம் எவ்வளவு நல்லாக இருந்தாலும், க்ளைமேக்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தில் இருந்து தனியாக தெரிகிறது. அவர்கள் ஜெயித்து கோப்பையை வாங்கியவுடன், அடுத்த திருவிழாவில் ஹீரோயினை பார்ப்பதுடன் முடித்து இருக்கலாம். (ஸாரி, முழுக்கதையை சொன்னதற்கு! பட் க்ளைமேக்ஸை நான் சொல்லலை!!!!!)

வெண்ணிலா கபடி குழு - ‍அழகான, அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத செல்லுலாயிட் கவிதை.

****************

நான் தான் தியேட்டர் சீட்!நகரில் தங்க இடம் ஏதுமின்றி புதிதாக‌ தஞ்சம் புகுந்தவர்களை தாங்கி ஆறுதல் அளிக்கிறான் சில மணித்துளிகள்!

விடாது பேயும் பேய்மழைக்கு புகலிடம் சில பிளாட்பார நல்லுள்ளங்களுக்கு!

தார்ச்சாலை கொதிக்கும் கத்திரி வெயிலுக்கு, ஏ.ஸியில் சுகமான கனவுடன் தூங்கும் தலையணை ஆட்டோ நண்பனுக்கு!

படம் பார்க்கிறேன் என்று முகத்தில் புணரும் ஜோடிகளை தினம்தினம் அருவருப்புடன் ஏந்திக் கொள்ளும் புண்ணியவான்கள்!

தோளில் கைபோட்டு இருக்கும் பாய்ஃப்ரெண்ட் மேல் சாய்ந்துகொண்டு, வுட் பியுடன் இரைச்சலில் ரகசியம் பேசும் மாடர்ன் கண்ணகிகளை தினமும் எண்ணிக்கொண்டு இருப்பவன்!

லோ ஹிப் ஜீன்ஸும், ஷார்ட் டீ-ஷர்ட்டுடன் வரும் நுனிநாக்கு தமிழ் காஸ்மோபாலிடன் கேர்ள்ஸை ஜொள்ளுடன் தாங்கும் இதயம்!

நேற்று இவன் அவளுடன் வந்தான்; இன்று வேறொருத்தியுடன் வருகிறான் என்று சொல்ல முடியாமல் வருந்தும் மௌன சாட்சிகள்!

மல்லிகைப்பூவுடன், வளையல் சலசலக்க வந்தால் புதுமனைவியுடன் வருகிறான் புதுகணவன் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்வான்!

தொடர்ந்து உட்கார வைத்து சூடாக்கும் நல்ல இயக்குநர்களை எதிர்ப்பவன் அமைதியாக!

பேரரசு, சிம்பு, டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா தயவால் அடிக்கடி இளைப்பாறும் நல்லவன்!

ஜே.கே.ரித்திஷ் புண்ணியத்தால் காலியாகவே ஓடும் 150 நாட்கள் ச‌ம்மர் வெகேஷன்!

அழுது கண்ணீர் ஆறாய் ஓட காரணமான சேரன்களும், பாலாஜி ஷக்திவேல்களும் எதிரிகள்!

கண்ட கண்ட ஸ்டார்களின், தளபதிகளின் புதுப்பட ரிலீஸ் நாட்களில் மிதி வாங்குகிறான் வெறும் காலாலும், கிழிந்துபோன செருப்பாலும்!

அதே கூட்டத்தை திரையில் எவனாவது தலையில் தட்டினாலோ இல்லை மூக்கின் நுனியில் மட்டும் ரத்தம் வர அடித்தாலோ, எறியப்படுகிறான் உடைக்கப்பட்டு!

குத்துப்பாட்டின்போது 80லிருந்து 120கிலோ சதை பிண்டங்கள் குலுங்குவதை தாங்குகிறான் நாலு காலில் கஷ்டப்பட்டு!

குடித்துவிட்டு வந்தாலும், வாந்தி எடுத்து அசிங்கப்படுத்தினாலும் மூக்கை மூடிக் கொண்டு நிற்பவன் அசராமல்!

முட்டை போண்டாவும், பாப்கார்னும் ஒரு நாளைக்கு நான்கு முறை ஷிஃப்ட் போட்டு வந்து போனாலும், இவனுக்கு அதே சூடு தான் வாழ்நாள் முழுவதும்!

*******************

Related Posts with Thumbnails