சானியா மிர்சாவும் டாக்டர் பட்டமும்


சானியா மிர்சாவுக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தன் மூன்று வயது குழந்தையை கூட்டிக் கொண்டு பீச் சென்றார் அப்பா. அங்கே நிறைய சிறுவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த அந்த குழந்தை "எனக்கும் பட்டம் வேண்டும்" என்று அழ ஆரம்பித்தது. அதற்கு அந்த அப்பா, "என் செல்லம்ல!!! அழாதேடா, ஒண்ணும் கவலைப்படாதே, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழத்தில் சொல்லி நல்ல பெரிய டாக்டர் பட்டமாக வாங்கித் தர சொல்றேன்" என்றாராம்.

இப்படி ஆகிப் போச்சு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கொடுக்கும் டாக்டர் பட்டம். இது நேற்று ஒரு பத்திரிக்கையில் வந்த ஜோக். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இப்படி எல்லாம் கொடுப்பதால் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்களா இல்லை இவர்களுக்கு எல்லாம் கொடுப்பதால் பல்கலைக்கழகங்கள் பெருமை தேடிக் கொள்கின்றனவா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ஒருவர் எப்போது டாக்டர் பட்டம் வாங்க தகுதியானவர் என்றால் ஒரு துறையில் சிறந்து விளங்கி, அத்துறையின் எல்லா ஏரியாக்களிலும் செம்புலமை பெற்று, தனக்கு கீழ் நாலு பேரை அந்த துறையில் வழிநடத்தி செல்லும் அளவுக்கு சிறந்தவராக இருக்க வேண்டும். உதாரணமாக, கமலஹாசனுக்கு சினிமாவிற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ, பத்மபூசன், மூன்று முறை தேசியவிருது வாங்கியவருக்கு டாக்டர் பட்டம் என்பது மணிமகுடத்தில் பதிக்கபட்ட மற்றுமொரு பவளக்கல். அதே போல் தான் கலைஞர் அவர்களுக்கு தமிழுக்காக வழங்கப்பட்ட டாக்டர் பட்டமும்.
ஆனால் சம்ப‌ந்தமேயில்லாமல் போன வருடம் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஷங்கருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமை தேடிக் கொண்டது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம். என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் டாக்டர் பட்டத்திற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்கள். சந்தேகமே இல்லாமல் ஷங்கரை விடவும் திறமையான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். விஜயை பற்றி சொல்வதற்கு எல்லாம் ஒண்ணும் இல்லை. இரண்டு வருடம் முன்னால் நடிகர் சத்யராஜ்க்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி தன்னை பெருமைப் படுத்திக் கொண்டது.

சானியா மிர்சா ஒன்றும் எனக்கு தெரிந்து டென்னிஸ் விளையாட்டில் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. தற்போது உலக டென்னிஸ் தரப்பட்டியல் ரேங்கில் 100க்கும் மேலே. முழுமூச்சாக தன்னுடைய நேரம் முழுவதையும் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரை காதலிப்பதில் செலவழிக்கிறார். 33ஆவது ரேங்கை ஒரு வாரம் தக்க வைத்துக் கொண்டது மட்டுமே அவர் வாழ்நாளில் செய்த ஒரே சாதனை. பட்டம் வாங்கியதும் அவர் கொடுத்த பேட்டியைப் படித்த என் ரூமில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதாவது "அவருக்கு டென்னிஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும், டாக்டருக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசையாம். ஆனால் டென்னிஸ் விளையாடப் போனதால் டாக்டருக்கு படிக்க முடியவில்லையாம். தற்போது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மூலம் ரெண்டுமே நிறைவேறிவிட்டதாம்". என்ன கொடுமை சார் இது?????? மருத்துவத்தில் வாங்கும் டாக்டர் பட்டத்திற்கும், ஒரு துறையில் சிறந்து விளங்குவற்கான கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்க்கு எல்லாம்......

என்னைப் பொறுத்தவரை எல்லா பல்கலைக்கழகங்களும் யாருக்கு வேண்டுமானாலும் டாக்டர் பட்டம் வழங்கலாம் என்ற சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் அல்லது யாருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் மற்றும் அதற்கான காரணங்களை வரையறுப்பதில் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் நாட்டில் கலைமாமணிகள் போல டாக்டர்களும் கூடிப் போவார்கள்.

5 comments:

JEYARAJ said...

உண்மைதான், டாக்டர் பட்டம் என்பது பீச்சில் விற்கப்படும் பட்டத்தை விட மலிவானது. இதற்கு விலையும் இல்லை அர்த்தமும் இல்லை மரியாதையும் இல்லை . இது போன்ற பட்டங்களை அள்ளி தூவும் பல்கலைக்கழகங்கள் தன் நிலை உயர விளம்பரப் படுத்திகொள்ளும் ஒரு மாற்று வழி என்றே தோன்றுகிறது.

nagaindian said...

இது போன்ற டாக்டர் பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையங்கள் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும். தகுந்த செயல்பாடும் தகுதிநிலையினையும் கொண்டவர்களுக்கே கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். தங்களுடைய பல்கலைகழத்தில் டாக்டர் பட்டம் பெறறால் அதனை பெற்றவர்கள் பெருமையாக கருதக்கூடிய நிலையினை இத்தகைய பல்கலைகழகங்கள் பெற முயற்சி செய்யவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு, இவர்கள் வழங்கும் கெளரவ டாக்டர் பட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுது தகுதியற்றதாக கருதும் பட்சத்தில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு யாருக்கும் இவர்கள் கெளரவ டாக்டர் பட்டஙகள் வழங்க தடைவிதிக்க வேண்டும். மேலும், வழங்கிய டாக்டர் பட்டஙகள் தகுதியற்றது என அறிவித்து திரும்ப ஒப்படைக்கச் சொல்ல வேண்டும். இதன் மூலம் டாக்டர் பட்டம் வாங்குவோரும் யோசிக்க வேண்டும்.

SUREஷ் said...

எனக்கு தெரிந்து ஒருவர் எப்போது டாக்டர் பட்டம் வாங்க தகுதியானவர் என்றால் ஒரு துறையில் சிறந்து விளங்கி, அத்துறையின் எல்லா ஏரியாக்களிலும் செம்புலமை பெற்று, தனக்கு கீழ் நாலு பேரை அந்த துறையில் வழிநடத்தி செல்லும் அளவுக்கு சிறந்தவராக இருக்க வேண்டும்.
//////////////////////////////இவ்ளோ இருக்கா........

ராம்சுரேஷ் said...

@ JEYARAJ & nagaindian,

தங்கள் கூற்று மிகவும் சரி. வருகைக்கு மிக்க நன்றி சார்(ஸ்).. நான் என் மனதில் தோன்றிய ஆற்றாமையை மட்டும் பதிவாகப் போட்டேன். அதற்கு உங்கள் பின்னூட்டம் சப்போர்ட் பண்ணுவதாக உள்ளது.

@SUREஷ்

இவ்ளோ இருக்கா........//

இன்னும் நெறைய இருக்க வேண்டும் சார். அப்போது தான் இந்த மாதிரி காமெடி எல்லாம் அடிக்கடி நடக்காமல் இருக்கும். தங்களின் தொடர்ச்சியான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

வாசகன் said...

உங்கள் ஆதங்கம் சரிதான்.
தகுதியின்மைக்கே பட்டங்கள் என்பது நம்நாட்டின் அவலமாகிவிட்டது.
எம்ஜிஆருக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

Related Posts with Thumbnails