வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - III

மாலை வேளை. மேற்கே, சூரியன் பகலெல்லாம் சுட்ட களைப்பில் மேகத்தின் பின் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தார். ஒழுங்காகவும் அழகாகவும் வெட்டப்பட்ட புல்வெளி. அங்கொன்று இங்கொன்றுமாக நாலைந்து பேர் அந்த புல்வெளியில் இருந்தனர். ஒருவர் கண்களைத் திறந்து கொண்டு தியானம் பண்ணுவதுபோல் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். தாடி வைத்த ஒருவர் காதல் தோல்வி பாடல்களை சத்தமாக பாடிக் கொண்டுருந்தார், கண்களில் கண்ணீர் தாடை வரை ரோடு போட்டுக் கொண்டிருந்தது. அங்கு ஒருவர் தி.மு.க என்றும் இன்னொருவர் இல்லை அ.தி.மு.க தான் தேர்தலில் வெற்றி பெறும் சீரியஸாக வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். கண நேரத்தில் அவர் அடித்துக் கொண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

இந்த சண்டையை வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த போது அவள் தான் உட்கார்ந்திருக்கும் அதே பெஞ்ச்சில் இன்னொரு இளைஞனும் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அழகாக ஹேர்கட் பண்ணி ரொம்ப ஸ்மார்ட்டாக அவன் இருந்தான். அவள் பார்த்த அதே விநாடியில் அவனும் பார்த்து விட்டதால் இருவரும் சம்பிரதாயத்திற்கு சிரித்துக் கொண்டனர். பத்து நிமிட இடைவேளைக்கு பிறகு அவன் ஆரம்பித்தான், "ஹாய், என் பேரு வினோத், உங்க பேரு என்ன?" அதற்கு அவள், "என் பேர் கீர்த்தி!" என்று சொல்லி அமைதியானாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு, வினோத் மெதுவாக "நான் இங்கே தான் ரூம் நம்பர் 108ல‌ இருக்கேன். சொந்த ஊர் கோயமுத்தூர். நல்லபடியா இன்ஜினியரிங் முடிச்சிட்டு நெறைய கம்பெனி ட்ரை பண்ணேன். சில கம்பெனியில HR இன்டெர்வியூ வரைக்கும் போவேன். அங்கே என்னோட இங்கிலீஷ் fluentடா இல்லனு திருப்பி அனுப்பிச்சுடுவாங்க.. ஒண்ணும் க்ளிக் ஆகவே இல்ல. யார் கூடவும் பேசாம, ஒழுங்கா சாப்பிடாம, வெறித்தனமா, நைட் பகல்ன்னு எதுவும் பார்க்காம படிச்சேன். சரி ஒரு சேஞ்ச்சுக்கு அம்மா அப்பா கொஞ்ச நாள் இங்கே தங்கிட்டு வர சொன்னாங்க. அப்புறம் நீங்க இங்க எப்படி வந்தீங்க!" சொன்னான்.

"என் சொந்த ஊர் தஞ்சாவூர். நான் பி.காம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஹாஸ்டலில் என்னுடன் தங்கியிருந்த‌ க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தி ஒருவனை சின்சியரா லவ் பண்ணினாள். அது எப்படியோ அவள் வீட்டில் தெரிந்து பெரிய பிரச்சினை ஆகிவிட்டது, அவனை அடித்து துவைத்து விட்டனர். அதை ஒரு நாள் இரவில் என்னிடம் சொல்லி ரொம்ப அழுதாள், அவன் இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை என்று புலம்பினாள். நான் அவளை ஆறுதல் படுத்தி தூங்க வைத்தேன். மறுநாள் காலையில் நான் எழுந்தபோது என் தலைக்கு மேலே அவள் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து நான் அதிர்ச்சியாகி, ஓவென்று கத்தி அழுது கொண்டே மயக்கம் போட்டு விட்டேன். அதற்கு பின் எனக்கு எப்பவுமே அது தான் என் கண் முன்னே நிற்கிறது. பைத்தியம் மாதிரி ஆகி விட்டேன். என்னால் எதிலும் கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை. அதான் இங்க ரெஸ்ட் எடுக்க வந்திருக்கிறேன்" என்று அழுது கொண்டே சொல்லி முடித்தாள்.

"இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லங்க. சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லா படிங்க. படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறது தான் உலகத்திலேயே கொடுமையான விஷயம். லக் இருந்தா சீக்கிரம் கெடச்சிடும். என்னைய‌ பாருங்க. 27 வயசாகியும் இன்னும் வேல கெடைக்காம திரியுறேன்." என்றான் வினோத்.

கீர்த்தி, அதற்கு சீரியஸாக, "இதெல்லாம் ஒரு பிரச்சினையாங்க. வேல கெடைக்கலேன்னா, தனியா பிசினஸ் பண்ணலாம். ஆனால் க்ளோஸ் ஃப்ரெண்ட் சாவ கண் முன்னே பார்க்குறது எவ்வளோ கொடுமையான விஷயம் தெரியுமா? யாருக்கும் இந்த மாதிரி நெலமையெல்லாம் வரவே கூடாதுங்க" என்றாள்.

இந்த மாதிரி கொஞ்ச நேரம் இருவரும் மாறி மாறி தங்கள் தரப்பு சோகங்களைக் கொட்டிக் கொண்டே இருந்தனர். வினோத், சமாதானத்துடன் "ஓ.கேங்க, உங்களுக்கு நான் சப்போர்ட்டா இருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கு அந்த சோகத்த‌ மறக்கறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன். இனிமே நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். சரியா?" என்றான். கீர்த்தி, சிரித்தபடி "ஃபைன், நாம ஃப்ரெண்ட்ஸ். என்கிட்டயும் சொந்தமா தொழில் தொடங்குறது பத்தி நெறைய ஐடியாஸ் இருக்கு. உங்க வேல என் பொறுப்பு. ஒ.கே வா?" என்றாள்.

நேரம் இரவு 6.30ஐ தாண்டி 7 க்கு அருகே நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் கத்தும் சத்தமும், பெல் அடிக்கும் மணியோசையும் கேட்டது. "நேரமாச்சு, எல்லாரும் வாங்க. ப்ரேயர் பண்ணனும்." புல்வெளியை ஒட்டிய காம்பவுண்ட் போர்டில் உள்ள லைட்டை யாரோ போட்டார்கள்.

"கற்பகம் மனநல காப்பகம், சென்னை" என்று டியூப் லைட்டில் போர்டு வெண்மையாக மின்னியது.

******************************************

குறிப்பு: மற்ற கதைகளுக்கும் இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. நான் எழுதும் சிறுகதைகளின் பெயரும், கேரக்டர்களின் பெயரும் ஒன்றாக வைக்க வேண்டும் என்பது என் ஆசை.



வினா 100 கனாவும் 100, விடை சொல்லடி-I கதைக்கு இங்கே க்ளிக்கவும்

3 comments:

A N A N T H E N said...

//கேரக்டர்களின் பெயரும் ஒன்றாக வைக்க வேண்டும் என்பது என் ஆசை.//

எத்தனை விபரீத ஆசை ஐய்யா உங்களுக்கு!

கணேஷ் said...

//எத்தனை விபரீத ஆசை ஐய்யா உங்களுக்கு!

இதெல்லாம் விபரீத ஆசையா???

வருகைக்கு நன்றி A N A N T H E N

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

Related Posts with Thumbnails