பழனிமலை முருகனுக்கு அரோகரா!


4 நண்பர்களுடன் சேர்ந்து பழனி முருகனை சனிக்கிழமை தரிசிக்க சென்றோம். நான் செல்வது இப்போது தான் முதல் முறை. கோவில் போகும் ரோட்டில் ஏராளமான குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. சினிமாவிலும், நான் நேரிலும் பார்த்த‌ குதிரைகளை விட வித்தியாசமாக இருந்தன அந்த வண்டியில் ஓடும் குதிரைகள். இன்னொரு நண்பன், "இதெல்லாம் குதிரை இல்லடா, கோவேறு கழுதை" என்று எக்ஸ்ட்ரா பிட் போட்டான். "ஏய்" என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் சரத்குமார் போலீஸிடம் அடி வாங்கிய இடத்தை பார்த்துவிட்டு சென்றோம்.

கோவிலுக்கு அருகே சன்னதி வீதியில் பக்தர்கள் கூட்டத்திற்கு சம்மாக மஞ்சள் பை, சூடம், டாலர், கயிறு விற்கும் வியாபாரிகள். நல்லவேளை, மெரினா பீச்சில் மிரட்டுவது போல வாங்கிட்டு தான் போகணும் என்று அவர்கள் மிரட்டவில்லை. "டே, வாங்கடா.. ரோப் காரில் போகலாம்" என்று நண்பர்களை நச்சரித்தேன். அதற்கு என்னுடன் மாலை போட்டு வந்த நண்பன் கோபமாக, "நோகாம சாமி கும்பிடுடுறதுக்கா வந்துருக்கோம். ஒழுங்கா படியில ஏறி போவோம். அப்பத் தான் முருகன்கிட்ட வேண்டுறது நடக்கும்" என்று பொருமினான்.

நடந்து மலை உச்சியை அடைவதற்குள் நான் மயக்கம் அடையாத குறை தான். கண்ணைக் கட்டிக் கொண்டு, இதயம் நிமிஷத்துக்கு 150 முறை டபடபவென்று அடித்தது. கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்தபின் தான் ரிலாக்ஸ் ஆனேன். அந்த மாலை வேளையில் மலை உச்சியில் இருந்து பழனியையும், சரவணப்பொய்கையும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

ஸ்பெஷல் தரிசன வழிக்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக மாற்றிவிட்டார்கள் என்று மாலை போட்ட சாமி நண்பன் புலம்பிக் கொண்டு இருந்தான். விலைவாசி ஏற்றத்தின் சூடு பழனி மலை முருகனையும் விடவில்லை போல என நினைத்துக் கொண்டோம். பொது தரிசனம், அதாவது ஸ்பெஷல் கட்டணம் எதுவும் இல்லாத வழியில் 1500 பேர் நீ...ளமான கியூவில் நின்று கொண்டிருந்தனர். அது பாதாள வழியெல்லாம் செல்லும். அதைத் தாண்டி போனால் தான் முருகனை பார்க்க வேண்டும். அங்கே எவ்வளவு பேர் இருப்பார்களோ என்று தெரியாததால் வேறு வழியில்லாமல் 25 ரூபாய்க்கான ஸ்பெஷல் வரிசையில் 250ஆவது நாளாக நின்று கொண்டோம். இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பின் முருகனை தரிசித்தோம்.

கிளம்பும்போதே வீட்டில் "ஆண்டி வேஷத்துல இருந்தார்னா வெயிட் பண்ணி இருந்து ராஜா வேஷத்துல தரிசனம் பாத்துட்டு வா. ஏற்கெனவே உங்க கம்பெனியிலே ஆட்குறைப்பு நடந்துக்கிட்டு இருக்குனு சொல்லிக்கிட்டு இருக்க. இதுல வேற எதுவும் ஏடாகூடாமா நடந்துடப் போகுது" என்று என் அம்மா அநியாயத்துக்கு பயமுறுத்தி இருந்ததால் "முருகா, இப்பவே நைட் மணி 7 ஆயிடுச்சி. ராஜா வேஷத்துல இருங்கன்னு" என் அப்ளிகேஷனில் இதையும் சேத்துக்கிட்டேன்.

பொற்கோபுரம் புதிதாக தங்கத்தகட்டில் பதித்து இருந்தார்கள். நல்லபடியா முருகனை ராஜா வேஷத்தில் 5 செகண்ட்(அதற்கு மேல் கழுத்தில் கை வைத்து தள்ளி விட்டனர்) தரிசித்துவிட்டு, தங்கத்தேர் உலாவையும் பார்த்துவிட்டு கீழே இறங்க மணி 8 ஆனது. மலையில் இருந்து இறங்கினால் ஒரு கி.மீ தூரத்துக்கு பெரிய கியூ. எதுக்குடா என்று பார்த்தால் அது சித்தன‌நாதன் கடையில் பஞ்சாமிர்தம் வாங்க தான் அவ்வளவு பெரிய லைன். இது வேலைக்கு ஆகாது என்று காற்று வாங்கிக் கொண்டு இருந்த கந்தவிலாஸில் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொண்டு நைட் சாப்பிட கடையைத் தேடிக் கொண்டு இருந்தோம்.

சாதாரண டீக்கடை போர்டு கூட தமிழ், இங்கிலீஷ், மலையாளம் என‌ மூன்று மொழிகளில் கடையின் பேர் சொல்லிக் கொண்டு இருந்தது. இது என்னடா புதுக் கொடுமை என்று சாமி நண்பனிடம் விசாரித்தால், "இங்க தமிழ்நாட்டு பக்தர்கள் கூட்டத்துக்கு ஈக்வெலா சேட்டன்களும் சேச்சிகளும் வருவாங்கடா, அவங்களுக்கெல்லாம் பிடிச்ச சாமி முருகன், அதுவும் பழனி மலை முருகன் தான்" என்றான். "பழனிமலை முருகன் மட்டும் அப்படி என்னடா ஸ்பெஷல்?" என்று மறுபடியும் விடாமல் கேட்டேன்.

"இவனுக்கு எதுவுமே தெரியாது போல" என்று என்னை கேவலமாக பார்த்துக் கொண்டே ஆரம்பித்தான், "டேய் அவங்க ஊர்ல இருக்குற ஐயப்பன், கேரள மக்கள பார்த்து அருள்பாலிக்காம தமிழ்நாட்டைப் பார்த்து இருக்குறதுனால தான் சபரிமலைக்கு நம்ம கூட்டம் அதிகம் போகுது. அதேமாதிரி பழனிமலை முருகன், தமிழ்நாட்டை பார்த்து நிக்காம கேரளாவ பாத்து நிக்குறதுனால, அவங்களுக்கு இந்த சாமி ரொம்ப பிடிக்கும்டா" என்று மினிலெக்சர் கொடுத்த டயர்டில், அடுத்து நான் எதுவும் கேள்வி கேக்ககூடாது என்று என்னிடம் இருந்து விலகி முன்னால் போகும் க்ரூப்புடன் சேர்ந்து கொண்டான். இது உண்மையா? இதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், சென்னை சரவணபவன் ஹோட்டலும், அக்கடை அதிபரும் திடீரென என் நினைவுக்கு வந்தனர். ஏன் என்று தெரியவில்லை.

அப்பாவுடன் சபரிமலைக்கு நான் ஃபைனல் இயர் படிக்கும்போதே போய்விட்டேன். இப்போது பழனி மலைக்கும். ஆனால் இதுவரை மாலை போட்டதில்லை. அதற்கு எல்லாம் ஒழுக்கமாக, மனதிலும் உடலிலும் சுத்தமாக இருக்க வேண்டும். அது எனக்கு செட்டாகாததால் இதுவரை மாலை போட்டதில்லை. நல்ல ஹோட்டலில் சப்பாத்தியும், பூரியும் சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கு பஸ் ஏறி வீட்டுக்கு நடையைக் கட்டினோம்.

6 comments:

சரவணகுமரன் said...

//"ஆண்டி வேஷத்துல இருந்தார்னா வெயிட் பண்ணி இருந்து ராஜா வேஷத்துல தரிசனம் பாத்துட்டு வா. ஏற்கெனவே உங்க கம்பெனியிலே ஆட்குறைப்பு நடந்துக்கிட்டு இருக்குனு சொல்லிக்கிட்டு இருக்க. இதுல வேற எதுவும் ஏடாகூடாமா நடந்துடப் போகுது"//

:-))

சரவணகுமரன் said...

அனுபவத்தை நல்லா எழுதி இருக்கீங்க...

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நானும் மதுரை தான். நம் ஊரை சேர்ந்த ஒருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

கணேஷ் said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன்!

கார்த்திகைப் பாண்டியன் said...
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நானும் மதுரை தான். நம் ஊரை சேர்ந்த ஒருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி

நானும் இங்கு உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றி

உண்மைத்தமிழன் said...

ஆஹா.. ராம்..

என் அப்பனை தரிசித்தீர்களா..?

எவ்வளவுதான் கஷ்டங்களை அவன் வாரி வழங்கினாலும், அவனது பக்தர்கள் அவனை பார்க்க வராமல் இல்லை.. வருடாவருடம் கந்தனுக்கு அரோகரா பாடும் பக்தர்கள் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது.

நானும் போக வேண்டும் என்று நினைத்துள்ளேன். ஆனால் கூப்பிடத்தான் மாட்டேன்கிறான்..

முருகனை பதிவு செய்தமைக்கு நன்றி ராம்சுரேஷ்..

கணேஷ் said...

//வருடாவருடம் கந்தனுக்கு அரோகரா பாடும் பக்தர்கள் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது.

நிதர்சன உண்மை. வருகைக்கு நன்றி உண்மைத்தமிழன்.

Related Posts with Thumbnails