உண்ணாவிரதமும், பஸ் எரிப்பும்

பொங்கல் விடுமுறைக்காக, பத்து நாட்கள் எனது சொந்த ஊரில் சொந்த வீட்டில் கெட்ட ஆட்டம். எழுதுவதற்கு எக்கசக்கமான விஷயங்கள். அதையெல்லாம் எந்த ஆர்டரில் எழுதுவது என்பதில் பெரிய குழப்பம் இருந்தாலும், இந்த அனுபவத்தை கண்டிப்பாக முதலில் எழுதி விட வேண்டும் என் மனம் கிடந்து சலம்புகிறது.

என் நண்பன் ஒருவன் பழனி மலை முருகனுக்கு மாலை போட்டு இருந்தான். அதனால் அவனுடன் சேர்ந்து நானும் மற்ற் நண்பர்களும் வெள்ளிக்கிழமை இரவு அதாவது சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுவதாக ப்ளான் பண்ணினோம். திடீரென்று ஹோட்டலில் வேலை பார்க்கும் நண்பர்களில் ஒருவர் ஃபோன் பண்ணி, மதுரையில் இப்போது நிலைமை சரியில்லை. டவுன் பஸ் எதுவும் இயக்கப்படவில்லை. அழகர்கோவில் அருகே ஒரு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று சொன்னார். நாங்கள் எல்லாம் அதிர்ச்சியாகி "ஏன்? என்ன பிரச்சினை" என்று கேட்டோம். அதற்கு அவர், "திருமாவளவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க(புரளி தான்). அதனால் தான்" என்று குண்டை தூக்கிப் போட்டார்.

நாங்களும் எல்லா நியூஸ் சேனலையும் எதுவும் ஃப்ளாஷ் நியூஸ் போடுறாங்களா என்று பார்த்தோம். அப்படி ஒன்றும் அறிகுறி எதுவும் காணப்படவில்லை. அதற்குள் எங்கள் வீட்டிலும் நியூஸ் பரவி, யாரும் அர்த்த ராத்திரி கெளம்ப வேணாம். காலையில் சாவ்காசமாக கெளம்புங்கள் என்று அவர்கள் தரப்பில் இருந்தும் பயமுறுத்தினார்கள். சரி, ஆரம்பமே சரியில்லை என்று அந்த ப்ளானை ட்ராப் பண்ணிவிட்டு படுத்து தூங்கிவிட்டோம்.

காலையில் மெதுவாக 11 மணிக்கு கெளம்பினோம். நைட் கெளப்பிவிட்ட செய்திக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் மதுரை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. கோவிலுக்கு போய்விட்டு அங்கிருந்து கிளம்ப இரவு மணி 10 ஆகிவிட்டது. மதுரை ஆரப்பாளையம் வர 1.30 ஆகிவிட்டது. அங்கிருந்து பெரியார் பஸ்நிலையம் வர ஒரு டவுன்பஸ்ஸும் இல்லை. பயணிகள் கூட்டத்தைத் தவிர துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. ப்ரைவேட் பஸ் மட்டும் ஒன்றிரண்டு ஓடியது. அதிலும் ரெண்டு போலீஸார் வந்து பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இங்கு நான் சொல்ல விரும்புவது, உண்ணாவிரதம் என்பது உண்மைக்கான‌ அஹிம்சையின் சக்திவாய்ந்த ஆயுதம். அதை திருமாவளவன் மேற்கொண்டது ஒரு உன்னதமான காரணம். இவர் மட்டுமில்லை தமிழர்கள் அனைவரும் கடைப்பிடித்து நம் எதிர்ப்பை வலுவாகக் காட்டவேண்டும். இதற்கு நடுவில் எங்கிருந்து வந்தது இந்த வன்முறையும், கல்வீச்சும், பஸ் எரிப்பும். அதற்கு என் நண்பன் சொன்ன காரணம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதாவது, "அவர் மேற்கொண்ட விரதத்தை இரண்டு நாட்களாகியும் தமிழர்கள், அரசியல்வாதிகள், மீடியா என எதுவும் துளி கூட சீண்டவில்லை. அதனால் தேவையில்லாத ஒரு பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை பெற வேண்டும்" என்பதே. இதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த செயல் அரசியல்வாதிகள் வெட்கி தலை குனியவேண்டிய செயல்.

ஒருமுறை என் நண்பர்கள் இந்த பஸ் எரிப்பு கலாசாரம் எப்போது ஆரம்பித்தது என்பது பற்றி விவாதித்திக் கொண்டிருந்தனர். ஒருவன் அ.தி.மு.க இன்னொருவன் தி.மு.க. அப்போது அவர்கள், அ.தி.மு.க தலைவியை 2002ல் அரெஸ்ட் பண்ணிய போது பஸ் எரிக்கப்பட்ட சம்பவமே இதற்கு ஆரம்பம் என்றான். அதை எதிர்த்து, அப்படியென்றால் மதுரையில் தினகரன் ஆஃபிஸை எரித்து மூன்று பேரைக் கொன்ற சம்பத்தை செய்வர்கள் மட்டும் யார் என்று கேட்டான். இது இரண்டுக்கும் பொதுவாக ஒருவன், "அவர்கள் அப்போது மூன்று கல்லூரி பெண்களை பஸ்ஸோடு எரித்தான். இப்போது இவர்கள் மூன்று பத்திரிக்கைக்காரர்களை எரித்தார்கள். மூணுக்கு மூணு சரியாப் போச்சு. எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் இல்லை" என்று சாலமன் பாப்பையா பட்டி மன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி முடித்தான்.

அதற்கு நான் மனதுக்குள், "அட, அறிவுகெட்டவ‌ங்களே.. இதென்ன அங்க மூணு இங்க மூணு என சொல்லுறதுக்கு என்ன சின்னபசங்க விளையாட்டா? மொத்தமாக 6 உயிர்கள். அவர்களை பெற்றவர்களுக்கு எவ்வளவு ஆசையுடன், கனவுகளுடன் குழந்தைகளை வளர்த்து இருப்பார்கள். அவர்களை விடுங்கள் அதில் இறந்தவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி எவ்வளவு லட்சியங்கள் இருந்து இருக்கும்? பஸ்ஸில் சுற்றுலா போனதும், பத்திரிக்கை ஆஃபிஸில் வேலை பார்த்ததும் தான் அவர்கள் செய்த குற்றமா? தங்கள் சுயலாபத்திற்காக எதற்கு இந்த உயிரை பணயம் வைத்து விளையாடும் ஆட்டம்? இதை செய்பவர்கள் அந்த இடத்தில் தன் குடும்பத்தில் ஒருவர் அங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் செய்து இருப்பார்களா? தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். தமிழ்நாட்டில் நேற்று பிறந்த குழந்தைக்கும் தெரியும், இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் பின்னணியில் யார் காரணம் என்று! ஆனால் ஒருவருக்கு கூட இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. " என்று என்னால் அங்கலாய்க்க மட்டும்தான் முடிகிறது. இது என்னால் வேறு எதுவும் செய்ய முடியாத கையாலகத்தனத்தின் எதிரொலி தான்.

சரி ஓ.கே. நான் சொல்ல வந்தது வேறு எங்கோ செல்கிறது. ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து தூங்கினோம். மறுநாள் அதாவது நேற்று இரவு மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும். வேலையை விட்டு வந்து 10 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. சாயங்காலம் நியூஸ் பார்த்தால் திண்டிவனம் அருகே பஸ்கள் மீது கல்வீச்சு, குண்டுவீச்சு என்ற செய்திகள் என்னையும், குடும்பத்தாரையும் அலற வைத்தது. இருந்தாலும் ஒருவித அசட்டு தைரியத்துடனும் நம்பிக்கையுடன் மாட்டுத்தாவணி(மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்) வந்து சேர்ந்தோம் நானும் என் தம்பியும்.

மீண்டும் அதே மாதிரி மாட்டுத்தாவணியில் பயணிகள் கூட்டத்திற்கு சமமாக போசீஸார். பஸ் பிடித்து ஏறி வந்தால் திருச்சி, உளுந்தூர்பேட்டை என வழிநெடுகிலும் ஆயுதம் ஏந்திய போலீஸார். பஸ்ஸை திருப்பி பண்ருட்டி வழியாக திருப்பி விட்டிருந்தனர். அதிகாலை 5 மணி வரை ஒரு அசம்பாவிதமும் இல்லை. திண்டிவனம் தாண்டி சென்னை அவுட்ஸ்கெர்ட்டில் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் லைன் கட்டி நின்றிருந்தது. விசாரித்ததில் சிங்கப்பெருமாள்கோவில் அருகே மீண்டும் கலவரம். மிகவும் நொந்து கொண்டோம். திங்கள்கிழமை காலை பொதுமக்களை துன்புறுத்தி பார்ப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன சந்தோஷம் என்று தெரியவில்லை.

வழியில் என் செல்போன் பிரச்சினை பண்ணி ஆன் ஆகவே இல்லை. நான் கால் பண்ணவில்லையென்றால் வீட்டில் பயந்து விடுவார்கள் என்று வேற பயம். இடையில் இறங்கி கால் பண்ணி சொல்லவும் முடியவில்லை. எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டு காத்துக்கிடந்தேன். ஒரு வழியாக 8 மணியளவில் எல்லாம் சரியாகி நிலைமை சீரடைந்து சென்னைக்கு வர 10 மணியானது. அடித்து பிடித்து கெளம்பி ஆஃபிஸ் வர 11 ஆகிவிட்டது

3 comments:

Unknown said...

இவர்கள் (கருணாநிதி, ராமதாஸ், திருமாவளவன் வகையறா) அடிப்பதெல்லாம் வெறும் அரசியல் Stunt.

சென்ற பொதுத்தேர்தலின் போது மத்தியிலும் மாநிலத்திலும் நாங்களே ஆண்டால் கிழிப்போம், முறிப்போம் வெட்டுவோம் என்று ஏன் வேற்று அலம்பல் செய்தார்கள். சொகுசாக சம்பாரிக்கத்தானே.

நிஜமாகவே ஈழத்தமிழர் விஷயத்தில் மத்திய அரசை பணிய வைக்க கெடு வைத்து ஆதரவு வாபஸ் என்று கூற யோக்கியதை உண்டா.

Anonymous said...

நல்ல ஒரு பதிவு. பொதுமக்களை துன்புறுத்தி பார்ப்பதில் தான் போராட்டம் நடத்துபவர்களின் சந்தோஷமே இருக்கு. இலங்கையில் புலிகள் நடத்ததும் யுத்தத்தினால் பொதுமக்கள் எவ்வளவு துன்பத்தை அனுபவிப்பார்கள் என்பதை நினைத்து பார்க்க முடிகிறது.

கணேஷ் said...

வருகைக்கு நன்றி

Related Posts with Thumbnails