வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்


ஒரு கிராமத்தில் இருக்கும் ஜெயிக்கவே தெரியாத 7 பேர் கொண்ட கபடி குழு, தட்டு தடுமாறி மதுரையில் நடக்கும் ஸ்டேட் லெவல் கபடி போட்டியில் கலந்து வெற்றி பெறுகிறார்களா என்பதை காதல், மோதல் கோர்த்து தொடுக்கப்பட்டுள்ள இளமைத் திருவிழா.

புதுமுகம் விஷ்ணு படத்தின் கதாநாயகன். பழனி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் படிக்காமல் ஆடு மேய்க்கும் ஒரு இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். சைக்கிளில் பஸ்ஸை துரத்தி ஓவர்டேக் பண்ணும் முதல் காட்சியிலேயே மனதில் ஒட்டிக் கொள்கிறார். சரண்யா மோகன், படத்தில் இவருக்கு இரண்டு நிமிடம் பேசுவதற்கு டையலாக் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் விஷ்ணுவை பார்த்து வெட்கம் கலந்து பரவசப்படும் இடங்களில், கண்கள் ஆயிரம் கவிதைகள் பேசுகிறது. கபடி கோச் ஆக வருகிறார் 'பொல்லாதவன்' கிஷோர். இவர் கொஞ்சம் ட்ரை பண்ணினால் அடுத்த பிரகாஷ்ராஜாக வரலாம். 'ஏய், ஏய்' என்று அடித் தொண்டயில் இருந்து கத்தி வில்லத்தனம் பண்ணாமல் இந்த மாதிரி நடித்துவிட்டு போகலாம்.

இவர்கள் தவிர படத்தில் அனைவரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரை பற்றியும் பிண்ணனியில் பின்னப்பட்ட குடும்ப உறவுகள் காட்சிகள் அருமை. புது பொண்டாட்டியை வீட்டில் விட்டுவிட்டு கபடி மேட்சுக்கு செல்லும் அவர் தான் இந்த க்ரூப்பின் காமெடி பட்டாசு. 50 புரோட்டாவை அசால்ட்டாக உள்ளே தள்ளி விட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் இடங்களில் தியேட்டரே அதிர்கிறது. இருந்தாலும் மனிதர் கிளைமேக்சில் அரற்றும் இடங்களில் நெஞ்சில் நிற்கிறார். அப்புறம் டீக்கடை அப்புக்குட்டியாக வரும் குள்ள மனிதர் நடிப்பில் அப்ளாஸ் வாங்குகிறார். டீ ஷர்ட்டை பார்த்து ஏங்குவது, மாமியார் தலையில் உறியடிக்கும் குச்சியால் போடுவது என கலக்குகிறார்.

சரண்யா கொலுசின் சத்தத்தை வைத்தே ஹீரோ உறியடிக்கும் காட்சிகள், அறிமுக டைரக்டர் சுசீந்தரனின் திறமைக்கு விசிட்டிங் கார்டு. இரண்டாவது பாதியில் மேட்ச்சில் வீரர்களுக்கு உதவி பண்ணும் உள்ளூர் பெரியவர், கிராமத்து சந்தில் கண்ணாமூச்சி ஆடும் ஜோடிகளுக்கு உதவி பண்ணும் குச்சி தாத்தா, சதா புலம்பும் பெண், தாவணியை மிகச்சரியாக கட்டும்(இடுப்பை கரெக்ட்டாக மறைத்து) கிராமத்து இளம்பெண்கள் என கிராமத்து அழகான ஆட்களை படம் நெடுகிலும் உலவ விட்டுள்ளனர்.

படத்தின் பாடல்கள் பெரும்பலம். 'கபடி கபடி' என ஷங்கர் மகாதேவன் பாடும் பாடல், கபடி குழு ஆக்ரோஷமாக ஆடும்போதெல்லாம் BGM ஆக ஒலிக்கிறது. கார்த்திக், சின்மயி குரலில் வரும் 'லேசா பறக்குது' பாடல் அருமையான காதல் டூயட். கிராமத்து திருவிழாவில் அரைகுறை ஆடையில் குத்துப்பாட்டு இல்லாமலா? இங்கேயும் உண்டு, 'வந்தனம், வந்தனம்' பாடல்.

செமிஃபைனலில் தோற்றுவிட்டு ஃபைனலில் விளையாடும் அபத்தம் இதில் இல்லை. முதல் பாதி, "என்னடா, திருவிழா, காதல் என இழுக்கிறார்களே" என்று நினைக்காமல், இரண்டாம் பாதியை பொறுமையாக பார்க்க வேண்டும். கபடி திருவிழாவே நடத்தி இருக்கிறார்கள்.

படம் எவ்வளவு நல்லாக இருந்தாலும், க்ளைமேக்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தில் இருந்து தனியாக தெரிகிறது. அவர்கள் ஜெயித்து கோப்பையை வாங்கியவுடன், அடுத்த திருவிழாவில் ஹீரோயினை பார்ப்பதுடன் முடித்து இருக்கலாம். (ஸாரி, முழுக்கதையை சொன்னதற்கு! பட் க்ளைமேக்ஸை நான் சொல்லலை!!!!!)

வெண்ணிலா கபடி குழு - ‍அழகான, அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத செல்லுலாயிட் கவிதை.

****************

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அட......

முரளிகண்ணன் said...

நல்ல படத்துக்கு அவசியமான அருமையான விமர்சனம்

Karthik said...

ஸோ, படம் நல்லாருக்கு?!
:)

கணேஷ் said...

நன்றி முரளிகண்ணன்.

//Karthik said...
ஸோ, படம் நல்லாருக்கு?!
:)//

ஆமா. நல்லாருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்!

வினோத் கெளதம் said...

நல்ல படத்துக்கு அவசியமான அருமையான விமர்சனம்..

Anonymous said...

அருமையான விமர்சனம்

கணேஷ் said...

வருகைக்கு நன்றி vinoth gowtham, கடையம் ஆனந்த்!

ஷாஜி said...

//செமிஃபைனலில் தோற்றுவிட்டு ஃபைனலில் விளையாடும் அபத்தம் இதில் இல்லை. //

--நீங்க பெரிய 'கில்லி' சார். சூப்பரா கோத்து விட்டுடிங்க...

கணேஷ் said...

//ஷாஜி said...
//செமிஃபைனலில் தோற்றுவிட்டு ஃபைனலில் விளையாடும் அபத்தம் இதில் இல்லை. //

--நீங்க பெரிய 'கில்லி' சார். சூப்பரா கோத்து விட்டுடிங்க..//

அட அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்!

Related Posts with Thumbnails